போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்து வாட்டர் பாட்டல் சப்ளை செய்த எம்.பி.யின் மகன் !
எம்.பி.யின் மகன் நடத்தும் குடிநீர் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள் என்பதாக பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. பி.ஐ.எஸ். என்றழைக்கப்படும் இந்திய தர நிர்ணய பணியக அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கி சர்ச்சைக்குள்ளான ஆலை, தஞ்சாவூர் ராஜ்யசபா எம்.பி. கல்யாணசுந்தரத்தின் மகன் முத்து செல்வம் என்பவருக்குச் சொந்தமானது. பம்பபடையூர் என்ற இடத்தில், ஹோலி டிராப் பேக்கேஜ்டு என்ற பெயரில் நடத்தி வரும் குடிநீர் பாட்டில்கள் உற்பத்தி செய்யும் ஆலையில்தான் இந்த ரெய்டு நடந்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, பி.ஐ.எஸ். அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஜூன் 25 அன்று மதுரையை சேர்ந்த பி.ஐ.எஸ். அமைப்பின் விஞ்ஞானி மற்றும் தலைவர் தயானந்த் தலைமையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி ஆய்வில் பிரைன் அக்வா, ஆக்டிவ் அக்வா, வின்வே ஆகிய பல்வேறு பெயர்களில் வாட்டர் பாட்டில்களை தயாரித்ததாகவும் அவற்றில் அனுமதி இல்லாமல் ஐ.எஸ்.ஐ. முத்திரை பதித்து விற்பணைக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுக்க ஆளாகியிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். சோதனையில் 17,534 பாட்டில்களையும், 3.8 இலட்சம் போலி ஐ.எஸ்.ஐ. லேபிள்களையும் கைப்பற்றியிருக்கிறார்கள்.
சம்பந்தபட்ட ஆலை, ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ. முத்திரை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றிருந்த நிலையில், அவற்றின் அனுமதி கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் ஐ.எஸ்.ஐ. முத்திரையை பதித்து தண்ணீர் பாட்டில்களை சந்தைக்கு விற்பணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எம்.பி.யின் மகன் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த விதிமீறலில் முத்துசெல்வம் ஈடுபட்டிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது.