கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், பிள்ளாபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொம்பாடிபட்டி கிராமத்தில், வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பிள்ளாபாளையம் வருவாய் கிராமம் புல எண்; 364, 365-ல் சுமார் பத்து ஏக்கரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கடந்த 2000-2001-ம் ஆண்டில், வார்டு எண் 8/2000- 2001-ன் படி குளித்தலை தனி வட்டாட்சியர் மூலமாக, இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்டு, 21-ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், பட்டா வழங்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இன்று வரையிலும் நிலத்தை அடையாளம் காட்டவில்லை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப் பட்ட அலுவலர்களை சந்தித்து பலமுறை மனு கொடுத்து அழுத்துப்போன அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த 2021 டிசம்பர் 30ம் தேதியன்று குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் கண்ணதாசன் தலைமையில், “பட்டா வழங்கியவர்களுக்கு நிலத்தை அளந்து, அத்துக்கல் (அடையாள கல்) நட்டு பயனாளிகளுக்கு உரிய நிலத்தை உரியவர்களுக்கு வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அதிகாரிகள் பட்டாக்குரிய நிலத்தை அளந்ததோடு சரி. அதன் பின்னரும் பட்டாக்குறிய நிலத்தை பிரித்து வழங்கவில்லை.
இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன் நம்மிடம் கூறுகையில், “வீடு இல்லாத ஏழை எளிய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அரசு விதியின்படி சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களால் வழங்கப்பட்ட பட்டாவால் எந்தப் பயனும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் என சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு வழங்கிய பட்டாவிற்கு உரிய அங்கீகாரம் இல்லை என்றால் இது மக்களை ஏமாற்றுகிற வேலையாகும். எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட தலித் மக்களுக்கு உரிய இடத்தை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும், “அரசு அலுவலர்கள் தங்களுடைய விருப்பத்திற்கிணங்க, தகுதி இல்லாத நபர்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக பட்டா வழங்கி இருக்கிறார்கள். இது குறித்து விசாரித்து, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தகுதி இல்லாத நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை திரும்பப் பெற வேண்டும்” என்றும் கூறினார்.