என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே !
நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்துக்கு திரைத்துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்களையும் நேரில் சென்று அழைத்தார். ஆனால் திரைப்பெரும்புள்ளிகள் எவரும் வந்ததாகக் காணோம்.
நடிகர் முத்துக்காளை, பத்திரிகையாளர் கயல் தேவராஜ் முதலியவர்களே முன்னின்று வாழ்த்தியதைப்பார்த்தேன். அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின், அ.இ.அ.தி.மு.க.வின் டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது நெகிழ்ச்சியாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி.
இவ்வேளையில் சில எண்ணங்கள் தோன்றுகின்றன:
*நம்மை மதித்து ஒரு மாற்றுத்திறனாளி நடிகர், சக தோழன் பத்திரிகை வைத்து அழைக்கும்போது எந்த வேலையாக இருந்தாலும் தள்ளிவைத்துவிட்டு அந்நிகழ்வுக்குச் செல்வதுதான் கண்ணியம். பலரிடமும் அது இல்லை என்பதை இந்நிகழ்வு காண்பித்துக்கொடுத்துவிட்டது. இதனைத் திரைத்துறையினர் திருத்திக்கொள்ள வேண்டும்.
*எப்போதும் எளிய மக்களே அன்புக்குப்பாத்திரமானவர்கள் என்பதை அறிய இயற்கை நமக்கு சில வாய்ப்புகளைத் தரும். அப்படி ஒரு வாய்ப்பு கிங்காங் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
*ஸ்டாலின் அவர்களும் ஜெயக்குமார் அவர்களும் இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்து, தங்கள் தரத்தைக் காண்பித்துவிட்டனர். மிக்க மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.
*அன்பின் மிகுதியால் கிங்காங் அவர்களை ஜெயக்குமார் தூக்கி, தோளில் வைத்துக்கொண்டார். அது கபடமற்ற செயல்தான். ஆனால், உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகளை அவ்வாறு செய்வதை நாம் தவிர்க்க வேண்டும். விஜய் சேதுபதி செய்ததுபோல அவர்கள் உயரத்துக்கு நாம் வந்துவிட வேண்டும். சமதையாக நடத்தவேண்டும். இல்லாவிட்டால் அங்கு உயரக்குறைவு என்பது கேலிப்பொருளாகவோ, பேசுபொருளாகவோ ஆகிவிடும். எனவே, இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*40 ஆண்டுகள் நீங்கள் கலைத்துறையில் இருந்தாலும் உலகம் உங்களை எந்த அளவுக்கு அங்கீகரிக்கும் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளும் கடின சூழல்களும் உரைகல்லாக அமையும். பத்திரிகை துறைக்கும் இது பொருந்தும்.
என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?!
— கா.சு. துரையரசு