முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா !
திருச்சிராப்பள்ளி புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் (02/08/2023) புதன்கிழமை முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக கல்லூரியில் நிறுவப்பட்டிருக்கும் வான் புகழ் கொண்ட ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கல்லூரி தலைவர் மாலை அணிவித்தும் துணை முதல்வர் தமிழ்மணி சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சிசுந்தரம் பேராசிரியர்கள் மற்றும் புது முக மாணவ மாணவிகளும் மலர் தூவி வணங்கினார்கள் .
இதையடுத்து முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி மு. மோனிசா வந்தோரை வாழ்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களை சிறப்பு செய்யும் விதமாக அவர்களுக்கு நூல்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேரு நினைவுக் கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்பிரமணியம் கல்லூரியின் நோக்கத்தை எடுத்துக் கூறி மாணவ மாணவியரை ஊக்குவித்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து நேரு நினைவுக் கல்லூரியின் துணை முதல்வர் தமிழ் மணி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், நூல் வாசிப்பின் சிறப்பினையும் பழந்தமிழர் கதை விரும்பியாகவும் கதை சொல்லியாகவும் வாழ்ந்தார்கள் என்று வாசிப்பு குறித்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து நேரு நினைவுக் கல்லூரி சுயநிதிப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சிசுந்தரம் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில்,ரோசா பூக்கள் வேண்டுமென்றால் அதற்கு ரோசா செடிகள் தேவை அது போல வாழ்வில் வெற்றி தேவை என்றால் கல்வி தேவை என்றும் கல்வி என்பது வாழ்வில் அவசியமானது என்றும் மாணவ மாணவிகளுக்களை ஊக்குவித்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து தமிழாய்வுத்துறை தலைவர் சோம. ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், ஏவுகணை சோதனை செய்வதை விட ஆசிரியர் பணி கடினமானது என்றும் நம் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள்17 பேர் சேர்ந்தது பல்கலைக்கழக அளவில் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது என்றும் தம் ஆசிரியர் பணியின் அனுபவங்களையும் மகாபாரத கதைகளையும் சொல்லி ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.
அவரைத் தொடர்ந்து தமிழாய்வுத்துறை பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில், தலைகுனிந்து என்னைப் படி நான் வாழ்வில் உன்னை தலைநிமிர்ந்து நடக்க வைப்பேன் என்ற புத்தகம் பற்றிய சில கருத்துக்களை கூறி மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
இதனையடுத்து சிறப்பு விருந்தினர்கள் முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றார்கள் . இதையடுத்து நிகழ்வின் இறுதியாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி சீ. கமலஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வை தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி கௌசல்யா மற்றும் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி ராஜேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
– செய்தி-
ஏ. கிருபாகணேஷ்
முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு நேரு நினைவுக் கல்லூரி
புத்தனாம்பட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டம்