திராவிடத் திருமகளே வருக – கனிமொழி கருணாநிதி !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கனிமொழி கருணாநிதி – திராவிடத் திருமகளே வருக !!

 

சென்னையில் 09.10.20221ஆம் நடந்து முடிந்த திமுக பொதுக்குழுவில் 2ஆம் முறையாக திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் கலைஞரின் மகள், ஸ்டாலின் தங்கை, உயதநிதியின் அத்தை, தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டார். கட்சியின் பெரும்பாலானவர்கள் கனிமொழியின் நியமனத்தை பெரும் ஆரவாரத்தோடு பொதுக்குழுவில் வரவேற்றார்கள். மாநில மகளிர் அணிச் செயலாளர் மற்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற இரு பொறுப்புகளில் கனிமொழி செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கலைஞரின் கனிமொழி

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஸ்டாலின் கலைஞரின் மகன். தாய் தயாளு அம்மாள் கனிமொழி கலைஞரின் மகள். தாய் இராஜாத்தி அம்மாள். கலைஞர் குடும்பத்தில் முத்து (பத்மாவதி தாய். சிதம்பரம் ஜெயராமன் தங்கை), அழகிரி, தமிழரசு, ஸ்டாலின், செல்வி என்று பிள்ளைகள் மீது கலைஞர் அன்பு, பாசம் காட்டினாலும், அதிகளவு அன்பு காட்டியது கனிமொழியிடம்தான். கோபாலபுரத்தில் கலைஞர் அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி முடித்து காலை 5.30 மணிக்கு அன்றைய அனைத்து நாளிதழ்களையும் படித்து முடித்துவிடுவார். காலை உணவுக்குப் பின் அறிவாலயம் செல்லுதல், ஆட்சிப் பொறுப்பில் இருந்தால் கோட்டைக்குச் செல்லுதல். பகல் உணவை கோபாலபுரத்தில் முடித்து கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை அறிவாலயம் சென்று இரவு உணவுக்கு கனிமொழி இருக்கும் சி.ஐ.டி. காலனிக்குச் சென்றுவிடுவார். அங்கேயே உறங்கி காலை 4.00 மணிக்கு கோபாலபுரம் வந்துவிடுவார். 1968ஆம் ஆண்டு தொடங்கி கலைஞர் உடல் நலிவு அடையும் வரை இந்த முறையில் மாற்றம் ஒருபோதும் இருந்தது கிடையாது.

கனிமொழிக்குத் தலைவர் தந்தை பெரியார்

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

சி.ஐ.டி.காலனியில் இரவு தாங்கும்போது மகள் கனிமொழியோடு நாள்தோறும் அன்றாட அரசியல் நிலவரங்கள் குறித்து உரையாடுவார். தந்தை கலைஞர் மூலம் கனிமொழி அரசியல் அறிவைப் பெற்றார் என்பது மிகையில்லா உண்மையாகும். கலைஞரை அவரின் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ‘தலைவர்’ என்றே அழைப்பது தொண்டர்களிடமிருந்து பெற்ற வழக்கமாக மாறிவிட்டது. “நான் கட்சிக்குத் தலைவர். குடும்பத்திற்கும் தலைவர் என்பதால் என்னை எல்லாரும் தலைவர்….. தலைவர் என்றே அழைப்பர். என் குடும்பத்தில் என் மகள் கனிமொழிக்கு மட்டும் தந்தை பெரியார்தான் தலைவர். நான் தலைவர் இல்லை” என்று நண்பர்களிடம் மகளின் பெருமை குறித்து பேசி கலைஞர் சிரித்து மகிழும் அளவிற்குக் கனிமொழியின் மீது அளவற்ற அன்பு காட்டினார் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும்.

சட்டமன்ற விவாதத்தில் கனிமொழி

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

கனிமொழி 1968ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கலைஞர் – இராஜாத்தியம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். (ஸ்ரீமுஷ்ணம் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ளது) அப்போது கலைஞர் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர். கலைஞரின் மனைவி உயிரோடு இருக்கும்போது எப்படி இராஜாத்தியம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இது இந்து சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனையைக் கிளப்பினர். இதன் தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்றன. கலைஞர் இது தொடர்பாக சட்டமன்றத்தில் பதில் அளிக்கும்போது, கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் இராஜாத்தியம்மாள் என்று கூறினார். இராஜாத்தியம்மாள் என் மனைவி என்று கலைஞர் சட்டமன்றத்தில் பதிவு செய்யவில்லை என்பது சுவையான செய்தியாகும். கனிமொழியின் பிறப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றன என்பது இந்தத் தலைமுறை அறியாத செய்தியாகும். மேலும், இராஜாத்தியம்மாள் நாடார் சமூகம் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். கலைஞர் கதை, வசனம் எழுதிய காகிதப்பூ நாடகத்தில் இராஜாத்தியம்மாள் நடித்தார். இதன் தொடர்ச்சியாக கலைஞருக்கும் இராஜாத்தியம்மாளுக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது என்பது தனிக்கதை.

கனிமொழியின் கல்வி – திருமணம்

கனிமொழி பள்ளிப் படிப்பைச் சென்னை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியல் முதுகலைப் பட்டத்தை 1989ஆம் ஆண்டு எத்திராஜ் கல்லூரியில்  பெற்றார். கல்லூரி காலங்களில் கனிமொழி தான் கலைஞர் மகள், முதலமைச்சரின் மகள் என்று தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொண்டது கிடையாது. கலைஞரைப்போல் இளமையில் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். 1989 ஆம் ஆண்டு தாய் உறவினர் ஐயன் பட்டாசு நிறுவனத்தின் அதிபன் போஸ் என்பவரை மணந்தார். இதைத் தொடர்ந்து அதிபன் போஸ் அவர்களுடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார். கனிமொழியின் அரசியல் சிந்தனைகள், கவிதை எழுதுதல் போன்ற செயல்பாடுகள் தொடர்பாக அதிபன் போஸ் – கனிமொழி இடையே பிணக்கு ஏற்பட்டது. இரு வருடங்களில் அதிபன் போஸ் அவர்களிடமிருந்து மணவிலக்கு பெற்று தமிழ்நாடு திரும்பினார்.

அங்குசம் இதழில் வெளியான அட்டை பட கட்டுரை
அங்குசம் இதழில் வெளியான அட்டை பட கட்டுரை

கனிமொழி கவிஞரானார்

தமிழகம் திரும்பிய கனிமொழி இதழியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். குமுதம், குங்குமம் போன்ற வார இதழ்களில் பணியாற்றினார். பின்னர் ஆங்கில நாளிதழ் ‘தி இந்து’வில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அகில இந்திய இந்து நாளிதழ் பணியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். தமிழ் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் பணியில் இருந்தார். தொடர்ந்து இலக்கியத்தில் ஆர்வத்துடன் செயல்பட்ட கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி என்னும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார். கருவறை வாசனை என்னும் கவிதைத் தொகுப்பு இலக்கியவாதிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு கவிதைத் தொகுப்பாகும். மகள் கனிமொழி கவிஞராக மாற்றம் பெற்றது குறித்து கலைஞர் தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். கலைஞரின் பிள்ளைகளில் கலைஞரைப் போன்று இதழியல் துறையில் ஆர்வம் கொண்டிருந்தது, கவிதை நூல்களை வெளியிட்டு அறிவு தளத்தில் இயங்கியது கனிமொழி மட்டுமே என்பது தனிச்சிறப்பாகும்.

சிங்கப்பூரில் கனிமொழி

ஆகஸ்டு 21,1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழரான அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார். இதனைத் தொடர்ந்து பல ஆண்டு காலம் கனிமொழி சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார். அப்போது சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு’ என்னும் நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். சிங்கப்பூர் வானொலி நிலையத்திலும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார். சிங்கப்பூரிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தார்.

சர்ச்சையில் கனிமொழி

கனிமொழி தமிழகம் வந்து இலக்கியத்தில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி வந்தார். காலச்சுவடு மாத உதவி ஆசிரியர் மற்றும் ஆலோசகர் பொறுப்பில் இருந்தார். இலக்கியம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் கனிமொழி, “பாரதியின் கவிதைகள் என்னைப் பாதித்த அளவிற்குப் பாரதிதாசன் கவிதைகள் என்னைப் பாதிப்பு அடைய செய்யவில்லை” என்று கூறினார். இது தமிழ் உணர்வாளர்கள் இடையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புரட்சிகவிஞர் என்றும் தமிழ்த்தேசிய கவிஞர் என்றும் கொண்டாடப்படும் பாரதிதாசனைக் குறைத்து கனிமொழி மதிப்பீட்டு விட்டார் என்றும் புரட்சிகவிஞரைப் படிக்காமல் எப்படி இப்படி விமர்சனம் செய்யலாம் என்று புலவர் செந்தலை கவுதமன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் கட்டமான அறிக்கைகளை வெளியிட்டனர். கனிமொழி கட்டமான அறிக்கைகளுக்கு எதிர்வாதம் செய்யாமல், கலைஞரின் அறிவுரைப்படி, “பாவேந்தரின் படைப்புகளை முழுதாகப் படிக்கிறேன்” என்று வெளியிட்ட அறிக்கை தமிழ் உணர்வாளர்களை அமைதி கொள்ளவைத்தது.

கலைஞர் கைது – சிறை வாசலில் கனிமொழி

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி – கருணாநிதி 

2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். கடந்த ஆட்சிக் காலத்தில் சென்னையில் கட்டப்பட்ட மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகளில் ஊழல் நடைபெற்றது என்று 2001ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். உடனே அவர் நீதிபதியின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே கலைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. பின்னர் சென்னை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையின் கலைஞரைக் கொண்டு சென்றனர். “எனக்கு இதயநோய் உள்ளது. மருத்துவமனையில் என் உடல் பரிசோதனை செய்த பின்னரே சிறையில் அடைக்கவேண்டும் என்று சிறைக்குள் செல்லமறுத்து சிறையின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினார். விடியற்காலையில் இதை அறிந்த கனிமொழி உடனே மத்திய சிறைச்சாலைக்குச் சென்று சிறை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தன் தந்தைக்கு ஆதரவாக அவரும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை விடியத் தொடங்கியதும் கலைஞரின் போராட்ட செய்தி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி என்று செய்திகள் அகில இந்திய அளவில் ஒலி/ஒளிபரப்பப்பட்டது. அதில் கலைஞர் கைது முறையற்றது; முறையான மருத்துவச் சோதனைகள் செய்யப்படவேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கனிமொழி வாதாடிய செய்தி பெரிய அளவில் வெளியிடப்பட்டன. கனிமொழி மீது மக்கள் கவனம் திரும்பத் தொடங்கியது. கலைஞர் முறைப்படி மருத்துவச் சோதனை முடிந்து சிறையில் அடைக்கப்படும் வரை கனிமொழி ஒருவர் மட்டுமே கலைஞரோடு உடன் இருந்தார் என்பதன் மூலம் கனிமொழியின் மனவலிமையையும் யாருக்கும் அஞ்சாத மனத்துணிவை அறிந்துகொள்ளலாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அரசியலில் கனிமொழி

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

இலக்கியத்தில் இதழியல் ஆர்வமுடன் செயல்பட்டு வந்த கனிமொழியை அரசியல் வெகுவாக ஈர்க்கவில்லை. அரசியல் நடவடிக்கைகளில் கனிமொழி ஒதுங்கியே இருந்தார். 2006ஆம் ஆண்டு கலைஞர் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். 2007ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டார். அறிவிக்கப்படுவதற்கு முன்பு கனிமொழி அரசியலுக்கு வரவிரும்பவில்லை என்பதைக் கலைஞரிடம் நேரடியாகவே தெரிவித்துவிட்டார். என்றாலும் கலைஞரின் கட்டாயத்தின்பேரில்தான் மாநிலங்களவைக்குப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவையில் அடியெடுத்து வைத்தார். மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்களில் கனிமொழி கலந்துகொண்டு தன் தரப்பு கோரிக்கைகளை முன்வைப்பார். மாநிலங்களவையில் ஆற்றொழுக்காகத் தெளிந்த நீரோடையாக பரபரப்பு, ஆக்ரோஷம் எதுவுமின்றி அவரின் உரை அமையும். இவரின் உரை கட்சிகளைக் கடந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்தது என்பதும் உண்மையே. இதனைத் தொடர்ந்து 2013இல் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலிலும் கனிமொழி வெற்றிபெற்று 2019ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்டார். மாநிலங்களவை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார். 2018ஆம் ஆண்டு முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான தேர்வுக்குழுவால், சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதுக்கு கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை குடியரசுத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு இந்த விருதை வழங்கி சிறப்பு செய்தார்.

கனிமொழியின் பொது வாழ்வு

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

அரசியலில் கனிமொழி இறங்கினாலும் தன்னுடைய வேர் என்று நினைக்கும் இலக்கியத்தை அவர் விடவில்லை. பல இலக்கிய கூட்டங்களில் கலந்து உரையாற்றினார். இந்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து ‘கருத்து’ என்னும் இணைய தளத்தை நடத்தி வந்தார். இதன் மூலம் பொதுமக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக அருள்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்களோடு இணைந்து இயங்கினார். சிலப்பதிகாரம் (பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து) இசைத் தொகுப்புகளை வெளியிட்டார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார். கனிமொழி அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, மூன்றாம் பாலினத்தவரை 9 என்று இழிவுபடுத்தியதையும், ‘அலிகள்’ என்று கொச்சைப்படுத்தி அழைப்பதையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது மூன்றாம் பாலினத்தவர்கள் ‘திருநங்கைகள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு தனிவாரியத்தை அமைக்க அரசுக்குக் கனிமொழி உறுதுணையாக இருந்தார். இதனைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. விண்ணப்பங்களில் ஆண் / பெண் / மூன்றாம் பாலினம் என்று கேட்கப்படும் நிலை உருவாக கனிமொழியின் அயராத உழைப்பே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.

2ஜி வழக்கில் சிறையில் கனிமொழி

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களின் பெயர்களில் கனிமொழியின் பெயர் இருந்ததால் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு குற்றப்பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும் இடம் பெற்றது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக இவர் குற்றம் சாட்டப்பட்டார். இவர் பிணை (ஜாமீன்) வேண்டி நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மே 20, 2011ஆம் நாள் கனிமொழி கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் சிறைப்படுத்தப்பட்டார். சூன் 8, 2011ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவரது பிணை மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு மீண்டும் திகார் சிறையிலேயே சிறைப்படுத்தப்பட்டார். இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.

கனிமொழி விடுதலை – பொதுமக்களுக்கு விருந்து

கனிமொழி கருணாநிதி - விடுதலை
கனிமொழி கருணாநிதி – விடுதலை

வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார். இந்தத் தீர்ப்பால் முடிவுக்கு வரவிருந்த கனிமொழியின் அரசியல் வாழ்வு மீண்டும் உயிர்த்தெழுந்தது. திமுகவின் தோழமை கட்சியாக ஒன்றியத்தை ஆளும்பொறுப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தன் மகள் சிறையில் இருந்தது என்பதைக் கலைஞர் தாங்கமுடியாத வேதனையில் தவித்து வந்தார். மகள் விடுதலை என்ற செய்தி கலைஞரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கனிமொழி விடுதலை பெற்று இல்லம் வந்தபோது கலைஞர் கண்ணீர் மல்க, தன் ஆசை மகளின் கன்னங்களை வருடி, முத்தம் கொடுத்து வரவேற்றார். கனிமொழியின் விடுதலையொட்டி, சி.ஜ.டி. நகரில் பொதுமக்களுக்கு விருந்து உணவு பரிமாறப்பட்டது. அந்த அளவுக்கு மகள் கனிமொழியின் விடுதலையைக் கலைஞர் கொண்டாடி மகிழ்ந்தார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர்

கனிமொழி கருணாநிதி
கனிமொழி கருணாநிதி

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கனிமொழி அம்மா வழி சமூகத்தைச் சார்ந்த நாடார்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் இன்றைய தெலுங்கனா மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை போட்டியிட்டார். சுமார் 3.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றார். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக முதல்முறையாக அடியெடுத்து வைத்தார். நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காகக் கனிமொழி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கத்தின் அடிநாதமாக இந்தி எதிர்ப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், விமானநிலையத்தில் இந்தி பேசுங்கள் என்று கனிமொழியைக் கட்டாயப்படுத்தியபோது “நான் இந்தியன்தான். அதற்காக இந்தி பேசமாட்டேன்’ என்று புலியாய் சீறி பதில் அளித்து தமிழ்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும், நாடாளுமன்ற தொகுதி நிதியிலிருந்து, தூத்துக்குடி மக்களவைக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதி நிதியை முறையாகப் பயன்படுத்துகின்ற உறுப்பினர் என்ற நல்லபெயரைக் கனிமொழி பெற்றிருக்கிறார்.

கனிமொழி - ஸ்டாலின்
கனிமொழி – ஸ்டாலின்

கட்சியிலும் பொதுமக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்ற கனிமொழி அவர்களுக்குத் தற்போது சென்னையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் கனிமொழி துணைப் பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது ‘பொன்குடத்திற்குப் பொட்டு வைத்தது போல்’ என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எளிய மக்களோடு எளிமையாகக் கலந்துகொள்ளும் ஓர் அற்புத அரசியல்வாதியாக கனிமொழி அரசியல் அரங்கில் விண்மீனாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறார். கனிமொழிக்கு வழங்கப்பட்ட இந்த கட்சி பொறுப்பினால் கட்சி, பெண்களிடத்தும், பொதுமக்களிடத்தும் பேராதரவைப் பெறும். எதிர்கால திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர் வரிசையில் ’திராவிடத் திருமகள்’ கனிமொழி தற்போது இடம் பெற்றுள்ளார். முதல் வரிசையில் வருவதற்குக் கனிமொழிக்குக் காலங்கள் நிறைய இருக்கின்றன. காலங்கள் காத்துக்கொண்டும் இருக்கின்றன. ‘திராவிடத் திருமகளே! வருக! வருக!! எனக் கனிமொழியை வரவேற்போம்.

கனிமொழி கருணாநிதி 3
கனிமொழி கருணாநிதி 3

 

பெட்டிச் செய்தி

 

கனிமொழி வகித்த நாடாளுமன்றக் குழு பொறுப்புகள்

2009 வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற வளாக உணவு மேலாண்மை கூட்டு குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.

2010 கிராமப்புற மேம்பாடு தொடர்பான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் கனிமொழி.

2012 கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பொதுச் சபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

2012 உள்துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

2012 ஆகஸ்ட்  முதல் கனிமொழி, மனித வள மேம்பாட்டு துறையின் கட்டாயக்கல்வி சட்டத்தின் செயலாக்க துணைக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

திராவிட திருமகள் கனிமொழிக்கு ஜனவரி 5 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

– ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.