பார்வையாளர்களா? பங்கேற்பாளர்களா? வினா எழுப்பும் – ஸ்டேன் சுவாமி ( 4 )
கண்ணெதிரே போதிமரங்கள் - 4 (அறியவேண்டிய ஆளுமைகள்) முனைவர் ஜா.சலேத்
ஸ்டேன் சுவாமி நம் ஊருக்கு வருகிறார்… இப்படி நமக்கு ஒரு தகவல் வந்திருந்தால் என்ன செய்திருப்போம்? இப்படி ஒரு வினாவோடு இந்தப்பதிவைத் தொடங்க நினைக்கிறேன்.
நம் ஊரில் வாழும் கல்வியாளர்கள், சமயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், இளையோர் – மகளிர் அமைப்புகள், அரசு சாரா நிறுவனத்தார் என ஒன்றுகூடி ஸ்டேன் சுவாமிக்கு தேவகோட்டை எல்லையில் நின்று, ஒரு பெரிய வரவேற்புக் கொடுத்து – ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அழைத்து வந்திருக்கலாம்.

வாழ்நாள் முழுதும் எளிமையையே அன்பைத் தம் முன்புலமாகவும், அறத்தைப் பின்புலமாகவும் கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதரைச் சந்தித்து, கரம் குலுக்கி ஆசீர்பெற்று மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?அமைதி! மயான அமைதி! அமைதி ஊர்வலம்! யார் இந்த ஸ்டேன் சுவாமி? ஏன் இந்த அமைதி அஞ்சலி? இந்த இரண்டு வினாக்களுக்கும் விடை அளிப்பதாகவே எனது பகிர்வு அமையப் போகிறது.

ஸ்டேன் சுவாமி என்கிற ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி, தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் விரகனூர் கிராமத்தில் பிறந்தவர். இயேசு சபையில் இணைந்து, வடமாநிலங்களில் பணிபுரிய முன்வந்தவர். இளம் வயதிலிருந்தே சமூகப் பிரச்சினைகளை அறிந்துகொள்வது, ஆய்வுசெய்வது, தீர்வுகளைத் தேடுவது என்று ஆர்வம் காட்டினார். இந்திய ஜனநாயகம், அரசியல் சாசனம், மனித உரிமைகள், தலைமைத்துவம் ஆகிய தலைப்புகளில் ஆழமான பயிற்சி பெற்றார். அதன் பிறகு, பல குழுக்களுக்கு அவரே பயிற்சி வகுப்புகள் நடத்தினார். ஆழமான சிந்தனையும் பயிற்சியும் ஆய்வும்தான் அவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் பணியாற்ற உந்தித் தள்ளின.

பின்தங்கிய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள பழங்குடியினரின் வாழ்வோடு கலந்து, அவர்களுடைய அன்றாட வாழ்க்கைமுறை, இயற்கையோடு கொண்டுள்ள உறவு, பண்பாடு, நம்பிக்கை, சடங்குகள் அனைத்தையும் ஆழமாக ஸ்டேன் சுவாமி அறிந்தார். அவர்களின் மண் சார்ந்த உரிமைகளைப் பெற அவர்களோடு சேர்ந்து பல திட்டங்களைத் தீட்டினார். கிராமிய சுயநிர்வாகம் அவர்கள் மத்தியில் சிறப்பாகவும் வலுவாகவும் இருப்பதைக் கண்டுகொண்டார்.
அதன் பின்னணியில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ளதுபோல் பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும் என்று ஸ்டேன் சுவாமி குரல்கொடுத்தார். மேலும், 1996 ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் (பெசா) ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசு 2013 இல் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, நல்ல விளைச்சலைத் தரும் பழங்குடியினரின் வளமான நிலங்களை, கனிம வளங்களைத் தோண்டி எடுக்க அரசே தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தது. இதை எதிர்த்து, மக்களின் பிரதிநிதியாக நின்று கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சுவாமி.
உரிமை உணர்வோடு தலைவர்களாக எழுந்துவரும் பல பழங்குடியின இளைஞர்களுக்கு நக்சல்பாரிகளோடு தொடர்பு இருப்பதாக வழக்குகள் போடப்பட்டு, அவர்களை விசாரணைக் கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது உள்நோக்கம் கொண்ட செயல் என்று குரல் எழுப்பினார் ஸ்டேன் சுவாமி.

அதேபோல, 2006இல் இந்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தின்படி மக்கள் தினந்தோறும் காட்டுக்குள் சென்று உணவு சேகரித்தல், சிறுதானியங்கள் சேகரித்தல், விறகு பொறுக்குதல் போன்றவற்றைச் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமைகளை பழங்குடியினருக்கு ஏன் வழங்கவில்லை என வினா எழுப்ப அவர்களை அணிதிரட்டினார் ஸ்டேன் சுவாமி.
இந்நிலையில், ஸ்டேன் சுவாமிக்கு நக்சல்பாரிகளோடும், பயங்கரவாதிகளோடும் தொடர்பிருக்கிறது என்று சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி வழக்கு போடப்பட்டன. அவை பொய்ச் சான்றுகள் என தந்தையின் ஆதரவாளர்கள் குரல் எழுப்ப, மஹாரா~;டிரத்தின் பீமா கோரேகான் கலவர நிகழ்வுக்குக் காரணமானவர்களுடன் ஸ்டேன் சுவாமி தொடர்புகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
84 வயதான ஸ்டேன் சுவாமி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழங்குடியினரின் சுயநிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காகவும், அவர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உழைத்ததைவிட நான் வேறு என்ன தவறு செய்துவிட்டேன்? என்று கேள்வி எழுப்பினார். அடுத்தடுத்து வலுவான வழக்குகள் போடப்பட்டு, தேசியப் புலனாய்வு அமைப்பின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக் கைதியாக மும்பை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

முதிர்ந்த வயது, பார்கின்சன் நோயால் ஏற்பட்ட கைநடுக்கம் மற்றும் பிற நோய்கள் காரணமாக மருத்துவரீதியிலான பிணை கேட்டபோது, நீதிமன்றம் கடைசி வரை மறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் உடல்நலம் மோசமான நிலையிலும் அவரை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பினார்களே தவிர, ஜாமீனில் வெளியே அனுப்பவில்லை. கைநடுக்கம் காரணமாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு உறிஞ்சுகுழல் வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் ஏற்கப்படாதது கண்டு, அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். மெல்ல மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, கொரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி, ஜூலை 5ஆம் தேதி மரணமடைந்தார்.

அறிவுஜீவிப் போராளிகள், நக்சல்பாரிகளின் நகர்புறத் தொடர்பாளர்களாகச் செயல்பட்டு, நாட்டுக்குள் போர்ச் சூழலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்று என்.ஐ.ஏ. அமைப்பு தொடர்ந்து பொய் வழக்குகளை இறுக்கி, கார்ப்பரேட்டுகளுக்கு இலாபம் சேர்ப்பதற்காக அப்பாவி மக்களின் உரிமைகளும், போராளிகளின் குரல்களும் ஒருசேர ஒடுக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில், கண்ணெதிரே போதிமரமாய் வாழ்ந்த நமது ஸ்டேன் சுவாமியின் சிலைக்கு முன்னால் நிற்கும் நமக்கு முன் தந்தை ஒரு வினாவை எழுப்புகிறார்: இந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகள், அத்துமீறல்கள் என எல்லாவற்றையும் கண்டும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கப்போகிறீர்களா? அல்லது பங்கேற்பாளர்களாக மாறப் போகிறீர்களா?
கட்டுரையாளர்
முனைவர் ஜா.சலேத்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இதையும் படிங்க…