யார் இந்த ரேவந்த் ரெட்டி ! தெலுங்கானா சொல்லும் அரசியல் பாடம் என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி  வெற்றி சொல்லும் பாடம் என்ன ?

தெலுங்கான காங்கிரஸ் வெற்றி
தெலுங்கான காங்கிரஸ் வெற்றி

ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. தெலுங்கானா பிரிவினைக்காகத் தொடர்ந்து போராடியவர் சந்திரசேகர ராவ். தெலுங்கானா பிரிவினையைக் கொள்கையளவில் காங்கிரஸ் ஏற்கவில்லை. மக்களின் போராட்டத்தின் காரணமாகத் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுக் கடந்த 10 ஆண்டுகள் தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி செய்து வந்தது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 இடங்களைப் பெற்றிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்தப் பேரெழுச்சிக்கான காரணங்கள் குறித்து இக் கட்டுரை ஆராய்கின்றது.

ஒற்றை மனிதன் – ரேவந்த் ரெட்டி

ரேவந்த் ரெட்டி - ராகுல்காந்தி
ரேவந்த் ரெட்டி – ராகுல்காந்தி

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தெலுங்கானா மாநிலம் உருவான பின் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர ராவின் கட்சி 63 இடங்களிலும் காங்கிரஸ் 21 இடங்களிலும் தெலுங்கு தேசம் 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2018இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர ராவின் கட்சி 88 இடங்களிலும் காங்கிரஸ் 19 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களிலும் சந்திரசேகர ராவின் கட்சி 39 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஆட்சியைக் கைப்பற்றிக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த வளர்ச்சிக்கு அகில இந்திய அளவில் சோனியா காந்தி, இராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்ற எவரும் காரணம் இல்லை என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாகும். காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்களிடம் காங்கிரஸ் கட்சியைக் கொண்டு சேர்த்த பெருமை தற்போதைய முதல்வர் அ.ரேவந்த் ரெட்டி என்ற தனிமனிதர்தான் காரணம் என்பது மிகையில்லா உண்மையாகும்.

ரேவந்த் ரெட்டி – ஒரு முன்னோட்டம்

ரேவந்த் ரெட்டி - பிரியங்கா - ராகுல்காந்தி
ரேவந்த் ரெட்டி – பிரியங்கா – ராகுல்காந்தி

ரேவந்த் ரெட்டி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்  படிக்கும்போது, பாஜகவின் மாணவர் பிரிவான ABVPயில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2007ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டமன்ற மேலவைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மேலவை உறுப்பினரானார். பின்னர்த் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 2009ஆம் ஆண்டு ஆந்திர மாநிலச் சட்டமன்றத்திலும், 2014 தெலுங்கானா சட்டமன்றத்திலும் தெலுங்குதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார்.

2017ஆம் ஆண்டு ரெட்டி தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகிக் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் கோடங்கல் தொகுதியில் தோல்வியடைந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக இருந்தார். 2021ஆம் ஆண்டு ரெட்டி தெலுங்கானா பிரதேசக் காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

சூறாவளி பயணத்தில் ரேவந்த் ரெட்டி

ரேவந்த் ரெட்டி - ராகுல்காந்தி பிரச்சாரம் வியுகம்
ரேவந்த் ரெட்டி – ராகுல்காந்தி பிரச்சாரம் வியுகம்

ஒருங்கிணைந்த ஆந்திராவில் நடிகர் என்.டி.இராமாராவ் எழுச்சியால் பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியை இழந்து வந்தது. 2004ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஆந்திராவில் காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஓய.எஸ்.இராஜசேகர ரெட்டி, தெலுங்குதேசம் கட்சிக்கு எதிராக ஆந்திரா முழுவதும் 1400 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டார். மக்களைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சியை மக்களிடம் சேர்த்தார். 2004இல் நடைபெற்ற ஆந்திரச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில முதல் அமைச்சரானார் என்பது வரலாறு. இந்த அரசியல் வரலாற்றை அப்படியே தெலுங்கானாவில் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ரெட்டி கடைபிடித்தார்.

2021 ஆண்டு முதல் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மக்களைச் சந்தித்தார். சந்திரசேகர ராவ் அவர்களின் கட்சியின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை மக்களிடம் சுட்டி காட்டினார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யக்கூடி மக்கள் நலத் திட்டங்களைப் பொதுக்கூட்டங்களில் எடுத்துரைத்தார். ஒரு நாள்கூட ஓய்வெடுக்காது தெலுங்கானா மாநிலம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டார். ரெட்டி மக்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது மறுக்கமுடியாத உண்மையானது. ஒரு நாளில் 4 பொதுக்கூட்டங்களில் பேசினார்.

மாநிலத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளை ரெட்டி கலந்து ஆலோசிப்பதில்லை என்றும் கட்சியில் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ரெட்டி மீது வீசப்பட்டது. ரெட்டி விமர்சனங்களைக் கடந்தது மக்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். ரேவந்த் ரெட்டிக்கு எதிராகக் கட்சிக்குள் உத்தம் குமார் ரெட்டி, ஜெயபிரகாஷ் ரெட்டி, ஹனுமந்த ராவ், மது யாக்‌ஷி கவுட், ஷஷிதர் ரெட்டி, கீதா ரெட்டி ஆகியோர் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான கோஷ்டியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

கிராமங்களில் ரேவந்த் ரெட்டி

ரேவந்த் ரெட்டி - கிராமங்களில்
ரேவந்த் ரெட்டி – கிராமங்களில்

காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்காக ரெட்டி மக்களிடம் பயணம் செய்தார். படித்தவர்கள் நிரம்பிய நகர் புற மக்களைவிடவும் கிராமப்புற மக்களிடம் அதிக நாள், அதிக நேரம் பயணம் செய்தார் என்று அவரின் பயணக்குறிப்பின் மூலம் அறியமுடிகின்றது. சாலை வசதிகள் இல்லாத கிராமங்களில் மக்களைச் சந்தித்தார். அடிப்படை வசதிகள் குறைவாக இருந்த கிராமங்களில் மக்களிடம் உரையாடினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கிராமங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கிராமப்புற மக்களும் ரெட்டியும் உணர்வில் ஒன்றாகக் கலந்தனர். மக்கள் ரெட்டி நம் உறவு என்று கொண்டாடக்கூடிய மனநிலைக்கு வந்தனர். ரெட்டி அரசியல்வாதி போன்று கிராமப்புற மக்களிடம் பேசாமல், அவர்களின் மொழியில் எளிமையாகப் பேசினார். கிராமப்புற மக்களின் உள்ளங்களை வென்றார் என்பது நடந்து முடிந்த தேர்தலில் எதிரொலித்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காங்கிரஸ்-க்குக் கைகொடுத்த கிராமங்கள்

தெலுங்கானாவில் நகர் புறங்களில் 28 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 15இல் சந்திரசேகர ராவ் கட்சியும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் Semi Urban என்று சொல்லக்கூடிய புறநகர் பகுதிகளில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் 8 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் கட்சியும், 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியும், பாஜக, சிபிஐ கட்சி (காங்கிரஸ் கூட்டணி கட்சி) தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. மாறாகக் கிராமப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் பெரிய அளவில் சாதித்துள்ளது. அதாவது கிராமப்புறப் பகுதிகளில் மொத்தம் 75 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் காங்கிரஸ் கட்சி 54 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிஆர்எஸ் (சந்திரசேகர ராவ்) கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க நகர்ப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளைவிட கிராமப்புறச் சட்டசபை தொகுதிகள் தான் கைகொடுத்துள்ளது என்ற உண்மை தெளிவாகியுள்ளது.

ரெட்டியின் வாக்குறுதிகள்

ரேவந்த் ரெட்டி பிரச்சாரம்
ரேவந்த் ரெட்டி பிரச்சாரம்

கிராமப்புறங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற அவர்கள் அளித்த 6 முக்கிய வாக்குறுதிகள்தான் முதன்மை காரணங்காக அமைந்துள்ளன.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்தின் கீழ்த் தெலுங்கானாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500க்கு வழங்கப்படும்.

அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதோடு விவசாயிகளின் குத்தகை நிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். நெல் பயிர் விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.500 போனஸ் வழங்கப்படும் எனக் கூறியது. மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாகக் காங்கிரஸ் உறுதியளித்தது.

இதுதவிர மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரோசா அட்டை வழங்குதல் முதியவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்குவது மற்றும் ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன்மூலம் முதியவர்கள் செலவின்றி மருத்துவச் சிகிச்சைகளைப் பெறலாம் எனக் காங்கிரஸ் 6 திட்டங்களின் கீழ் மொத்தமாகத் தெரிவித்து இருந்தது உண்மையிலேயே தெலுங்கானாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரெட்டியின் ஆட்சி

ரெட்டி ஆட்சி
ரெட்டி ஆட்சி

 

47 வயதாகும் அனுமுலா ரேவந்த் ரெட்டி இந்திய மாநில முதல் அமைச்சர்களில் குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். கடந்த டிசம்பர் 7ஆம் நாள் தெலுங்கானா மாநிலத்தின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பட்டியல் இனம் சார்ந்த பட்டி விக்ரமார்க்கா துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். பழங்குடியினம் சார்ந்த பெண் சீதக்கா என்பவரும் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். மொத்தம் 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஸ்ரீதர்பாபு சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரெட்டியின் அமைச்சரவையில் அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இஃது ஓர் சமூகநீதி அமைச்சரவை என்பதும் பொருத்தமுடையதாக இருக்கும்.

ரெட்டியின் வாக்குறுதிகள் நிறைவேற்றம்

ரேவந்த் ரெட்டி முதல் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டதும், முதலில், தேர்தலில் காங்கிரஸ் அளித்த முக்கிய 6 வாக்குறுதிகளுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி, பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 மாத உதவித் தொகை, மாநிலம் முழுவதும் பெண்களுக்கு நகர மற்றும் விரைவு பேருந்துகளில் இலவசப் பஸ் பயணம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ. 16,000 முதலீட்டு நிதி உதவி, ரூ.500-க்கு சமையல் கேஸ் சிலிண்டர், ஏழைகளுக்கு ரூ. 10 லட்சம் வரை ராஜீவ் ஆரோக்கியத் திட்டத்தில் இலவச மருத்துவச் சேவை போன்ற திட்டங்களுக்கான கோப்பில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கையெழுத்திட்டுள்ளார்.

தெலுங்கானா சொல்லும் பாடம்

தெலுங்கானா.. சொல்லும் பாடம்
தெலுங்கானா.. சொல்லும் பாடம்

ரெட்டியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் சோனியா, தலைவர் கார்கே, இராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட்டியின் உழைப்பு பாராட்டுக்குரியது. காங்கிரஸ் எழுச்சி பெற, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மக்களைச் சந்திக்கவேண்டும். மக்களிடம் உரையாடவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி சாத்தியப்படும் என்ற உண்மையை ரெட்டியின் வெற்றி உணர்த்தியுள்ளது.

இந்த வெற்றியை ஒரு மாடலாக எடுத்துக்கொண்டு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை, மாநிலத் தலைமைகளுக்கு உணர்ச்சியூட்டி 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் வெற்றி கிட்டும் என்பதைத்தான் தெலுங்கானா வெற்றி சொல்லும் பாடம்.

கட்டுரையாளர் – ஆதவன் 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.