யாரால் இலக்கியம் பிழைத்திருக்கிறது… !
புத்தகக் கண்காட்சிகளில் எழுத்தாளர்களை அழைக்காமல் பேச்சாளர்களை அழைப்பது குறித்து எனக்கும் கேள்விகள் உண்டு. புத்தகக் கண்காட்சிக்குள் போகும்போதெல்லாம் மேடையில் பேசுவது காதில் விழும். ஒரே மாதிரியான குரல், ஒரே மாதிரியான வரிகள்..”பகத்சிங் தன்னைத் தூக்கிலிடுவதற்கு முந்தைய நொடி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா மக்களே…நாமெல்லாரும் நினைத்துப் பார்க்க முடியாத, நாமெல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றைச் செய்து கொண்டிருந்தார்..ஆம்..புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்..
கடைசி வரை வாசிப்பில் இறங்கியபின் தான் மரணத்தைத் தழுவிக் கொண்டார். சாக்ரடீஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா” இந்த வகையான உரை வீச்சுகளை ஒவ்வொரு முறையும் கடந்து வரவேண்டியிருக்கிறது. ரத்னா கஃபே சாம்பார் போல ஒரே மாதிரியான ருசியை அவர்களும் பேச்சில் பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள். நிர்வாகிகளின் பரிந்துரையின்பேரில் எழுந்தருளுகிறவர்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
அதே நேரம், இன்னொரு வருத்தமும் உண்டு. ஒரு புத்தகத்துக்கான அறிமுக அல்லது விமர்சனக் கூட்டங்கள் நடந்தால் அதற்காகப் பேசுபவர்களை கால அவகாசம் கொடுத்து தான் அழைக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும், அதைக் கேட்க வருபவர்களும் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்து தான் நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள்.
எழுத்தாளர்களும், விமர்சகர்களும், திரைப்பட இயக்குநர்களும் என பேச அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் புத்தகத்தினைப்ப் படித்துவிட்டு அதைக் குறித்துப் பேசுகிறார்கள்? மொத்தமே பத்து கதைகள் தான் ஒரு தொகுப்பில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், “நான் ஒரு கதை தான் படிச்சேன். ரெண்டு கதை படிச்சிட்டேன் . எனக்கு டைம் இல்ல. இந்த இரண்டு கதையையும் வச்சுப் பாக்கும்போது. ” என்று பேசுவது அந்த எழுத்தாளரையும், அங்கு வந்திருப்பவரையும் இகழும் செயல் தான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இவர்கள் மேடையில் ஏறினால் தங்களுக்கு விருப்பமான அரசியலைப் பேசுகிறார்கள், அல்லது தொடர்பே இல்லாமல் சொந்த அனுபவங்களை நீட்டி முழக்குகிறார்கள். பேச்சாளர்களாவது தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு தயாரிப்பில் ஈடுபட்டுப் பேசுகிறார்கள். இந்தப் பக்கம் பலர் புத்தகத்தைப் படிக்காமல் அந்தப் புத்தக அறிமுகத்துக்கு வந்து நின்று பேச்சாளர்களாக முயற்சித்து எரிச்சலை உண்டாக்குகிறார்கள்.
மேடையைத் தங்களுடைய சாமர்த்தியங்களுக்குப் பயன்படுத்துபவர்களால் அல்ல, இவர்களின் உந்துதல் இல்லாமல் இவர்களைப் பின்பற்றாமல் வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பவர்களால் தான் இலக்கியம் கொஞ்சம் பிழைத்திருக்கிறது.
— தீபா ஜானகிராமன்.