யார் இந்த ரத்னவேல் பாண்டியன்?
‘சிறை’ படம் பார்த்துவிட்டு சில தகவல்களுக்காக தோழர் மகிழ்நனிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘அப்துல் ரவூப் மாதிரியே, அதுல நீதிபதியா வர்றவர் பேரும் ரொம்ப முக்கியமான பேர் தோழர். ரத்னவேல் பாண்டியன். அவரப் பத்தி படிச்சுப் பாருங்க. ரொம்ப முக்கியமான ஆளு அவரு. அந்த பேர பயன்படுத்துனதுலயே ஒரு அரசியல் இருக்கு’ என்றார்.
அதன்பின் தான் எங்கேயோ கேட்டது போலிருந்த அந்த பெயரைக் குறித்து தேடினேன். அவரது மறைவின் போது எழுதப்பட்ட சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். பல தளங்களில் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் பற்றிய முக்கியமான கட்டுரைகள் இருக்கின்றன. சமூக நீதி வரலாற்றில் மிக முக்கியமான மனிதராக, நீதிபதியாக இருந்திருக்கிறார். பல லேன்ட்மார்க் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஒரு மாபெரும் ஆளுமை. நண்பர் கார்த்திக் புகழேந்தி எழுதியிருக்கும் இந்தப் பதிவு நீதிபதி ரத்னவேல் பாண்டியன் குறித்த சிறப்பான அறிமுகத்தை கொடுக்கிறது.
“அப்துல் ரவூப்பின் வழக்கை சேம்பரில் வைத்து விசாரிக்கும் நீதிபதி கதாபாத்திரத்தின் பெயர்.
ரத்னவேல் பாண்டியன்!
ஆம், இந்திய நீதித்துறையில் மிக முக்கியமான மறக்கக்கூடாத ஆளுமை நீதியரசர் எஸ்.ரத்னவேல் பாண்டியனின் பெயரை அந்தக் கதாபாத்திரத்துக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

ஒரு வழக்கறிஞராகத் தொடங்கி, உச்ச நீதிமன்ற நீதிபதி வரை உயர்ந்தவர். விசாரணைக் கைதிகளின் உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் ரத்னவேல் பாண்டியன் அவர்கள் ஆற்றிய பணிகளைக் குறிப்பிடும் வகையில் குறிப்பிட்ட நீதிபதி கதாபாத்திரம் கையாளப்பட்டிருக்கிறது.
1929 பிப்ரவரி 13ம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் பிறந்து, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சென்னை சட்டக் கல்லூரியில் (1954) சட்டமும் முடித்தவர் ரத்னவேல் பாண்டியன்.
திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் அறிமுகமானவர் அவர். 1960-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது, கலைஞர் கருணாநிதி அவர்கள் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் இருந்தார். அப்போது, கலைஞரை தினமும் சந்தித்து சட்ட ஆலோசனைகள் நடத்தி வந்தார் ரத்னவேல் பாண்டியன்.
அதே காலகட்டத்தில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1962ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியிலும் 1971ல் சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, இரண்டு முறையயும் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
அதன் பிறகு, அரசியலில் இருந்து விலகி வழக்கறிஞர் பணிகளில் கவனம் செலுத்திய ரத்னவேல் பாண்டியன் அவர்களை 1971 ஆகஸ்ட் மாதம் திமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞராக நியமித்தார் கலைஞர் கருணாநிதி. (மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ரத்னவேல் பாண்டியனிடம் ஜூனியர் வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.)
1974-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்ற நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் 1988-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதி மற்றும் 1988 முதல் 1994 வரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்தவர்.
1992-ம் ஆண்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இவர் இடம்பெற்றார். சமூக நீதிக்காக அவர் எழுதிய தனித் தீர்ப்புரை (மண்டல் கமிஷன் வழக்கு, 1992) இந்திய வரலாற்றில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான உரிமை சாசனம்.

அதுமட்டுமல்ல, மாநில அரசுகளை மனம்போலக் கலைத்து வந்த ஒன்றிய அரசின் அதிகாரத்தை முறைப்படுத்திய முக்கிய வழக்கின் தீர்ப்பிலும் பங்கு வகித்தவர் நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்.
அவருடைய பணிகளில் உச்சம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் அவர்கள் இருந்தபோது, எப்.ஐ.ஆர் (FIR) கூட இல்லாமல் சிறையில் வாடிய ஆயிரக் கணக்கான விசாரணைக் கைதிகளை (remand / trial delay detainees) விடுவிக்க உத்தரவுகள் பிறப்பித்தார். மனித உரிமை வரலாற்றில் முக்கியமான நிகழ்வு அது!
தனது பணி ஓய்வுக்குப் பிறகு 5-வது ஊதியக் குழுவின் தலைவராகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராகவும் (2006-2009) பணியாற்றி, 2018ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தனது 89வது வயதில் சென்னை அண்ணா நகரில் மறைந்தார்.
2017ல் அவருடைய ‘My Life Journey: A to Z’ என்ற சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது (டைகர் புக்ஸ்). தெற்கத்தி கிராமப்புறத்தில் இருந்து புறப்பட்டு இந்திய அரசியலில் தனித்துவமான இடம் பெற்ற பெயர் ‘ரத்னவேல் பாண்டியன்!'”
— ஜெயசந்திர ஹாஸ்மி








Comments are closed, but trackbacks and pingbacks are open.