மீசையுடன் … காட்டு மைனா தனி அழகு !
மைனாக்களில் (starling) பல வகைகள் இருந்தாலும் நான் பார்த்தவை கிட்டத்தட்ட ஆறு வகைகள். அதில், 1.மைனா – நாகணவாய் (common mynah); 2. கருந்தலை மைனா – கருந்தலை நாகணவாய் (Brahmini starling) 3. காட்டு மைனா – காட்டு நாகணவாய் (jungle myna); 4. மலை மைனா(hill mynah) ; 5. ரோசாமைனா-சூறைக்குருவி (Rosy starling) ; 6. சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling).
மைனாக்கள் ஒவ்வொன்றுமே அழகு. அதிலும் இந்தக் காட்டு மைனா தனி அழகு. இதன் அடர்ந்த நிறமும் அலகும், அலகிற்கு மேலுள்ள மீசையும் இன்னும் கூடுதல் அழகுதான். காட்டு மைனாவானது சாதாரண மைனாவில் இருந்து கொஞ்சம் மாறுபட்டதோற்றமும் நிறத்தையும் உடையவை. பார்க்க நல்ல பளபளப்பாக இருக்கும்.
சாதாரண மைனாவுக்கு கண்களைச் சுற்றி பிரகாசமான மஞ்சள் வண்ணத் திட்டு இருக்கும். காட்டு மைனாவுக்கு கண்களைச் சுற்றிய திட்டு இல்லை. இந்த திட்டு முடி / இறகுகளற்ற தோல் பகுதிதான். மலைமைனாக்களுக்கு கண்களைச் சுற்றி இளம்நீல நிற வளையம் இருக்கும். இந்த நீலவண்ண புருவம் நமது பகுதி காட்டு மைனாக்களுக்கே உரிய தனித்துவமான ஒன்று. சாதாரண மைனாக்களுக்கு மூக்கின் மேல் பகுதியில் மீசை இல்லை. இந்த மீசையை காட்டு மைனாக்களுக்கு இருப்பதை பார்க்கலாம்.
ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்தே வாழும் என்பதற்கு இந்தப் படத்திலுள்ள மைனா நல்ல உதாரணம். நாங்கள் பார்க்கும்போது அந்த பெண் கடமானின் கண்களிலும் மூக்கிலும் உள்ள கழிவுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தது. அதற்கு வாகாக அந்த மானும் தலையை அசைக்காமல் லயித்து நின்று கொண்டிருந்தது. நமக்கு காது குடைவதுபோல் அதற்கும் சுகமாகக்கூட இருந்திருக்கலாம். அது அசையாமல் அனுபவித்ததை அப்படித்தான் பார்க்க அனுபவித்ததை அப்படித்தான் பார்க்க முடிந்தது. ஒரு உயிரினத்திற்கு அந்தக் கழிவுகூட உணவாகவும், இன்னொன்றிற்கு சுகமும் சுத்தமும் நடந்துகொண்டிருப்பதுதான் இயற்கையின் சிறப்பு.
மானின் மீது சவாரி செய்து கொண்டே பறக்கும் பூச்சிகளை பிடித்துண்ணுவது, மைனாவிற்கு கூடுதல் பயன். காட்டுமாடுகள் மீதும் இப்படித்தான் சவாரி செய்யும். புழு பூச்சிகள் மட்டுமல்ல பழங்களையும், பூக்களில் உள்ள மதுரத்தையும் மிக விருப்பமாக உண்ணும். வனக்காடுகளில் மட்டுமே இதைப் பார்த்திருக்கிறேன். நீலகிரி மலையிலுள்ள கிராமங்களில், எல்லாமே இங்குள்ள சாதாரண மைனாக்களைப்போல், வீடுகளுக்கு முன்புள்ள கழிவுகளில் உணவைத் தேடுவதையும், சோற்றுப் பருக்கைகளை தின்பதையும் பார்த்திருக்கிறேன்.
தொடரும்…
ஆற்றல் பிரவீன்குமார்,
சூழல் செயல்பாட்டாளா்








Comments are closed, but trackbacks and pingbacks are open.