கழுத்தளவு நீரில் இறங்கி ஆண்களும் பெண்களும் வாய்க்காலை கடக்கும் அவலம்!
ஆண்களும் பெண்களும் கழுத்தளவு வாய்க்கால் நீரில் இறங்கித்தான் அன்றாடம் வயல் வேலைகளுக்குச் சென்றாக வேண்டும் என்ற அவலத்தை நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?
ஊரின் ஒரு எல்லையில் இருந்து அந்த வாய்க்காலை தாண்டி எந்த ஒரு விவசாயம் தொடர்பான வாகனங்களோ, செல்ல முடியாத சூழலில் உழவுப்பணி தொடங்கி அறுவடை வரையில் மனித உழைப்பை மட்டுமே சார்ந்து விவசாயம் செய்தாக வேண்டும் என்ற அவலத்தையும் அறிந்திருக்கிறீர்களா?
தலையில் சுமையோடு வாய்க்காலின் குறுக்கே போடப்பட்டிருக்கும் அந்த ஒற்றை பன மரத்தின் மீதேறி ஆண்கள் கடந்து செல்லும் சாகசங்களையாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?
கழுத்தளவு நீரில் இறங்கி அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தும் நீரில் மூழ்கி தொப்பையாக நனைந்த நிலையிலும் அந்த ஈரத்தோடே விவசாய பணிகளையும் நூறுநாள் வேலையையும் பார்த்தாக வேண்டும் என்ற அந்த கிராமத்து பெண்களின் சாபக்கேட்டை வெறும் வார்த்தைகளால் விவரிப்பது இயலாத ஒன்று.
இந்த அதிசய கிராமம், அமேசான் காடுகளில் ஒன்றும் இல்லை. தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் இந்த அவலம். திருச்சி சிறீரங்கம் தாலுகா, திருப்பராய்த்துறை வருவாய் கிராமங்களில் ஒன்றான எலமனூர் என்ற கிராமத்தின் அவலம் தான் இது.
இந்த விவகாரம் தொடர்பாக திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கே.தங்கராஜிடம் பேசினோம்,
“எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது. இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றால், நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன.
கொடிங்கால் பாசன வாய்க்காலை தாண்டியும் நிறைய விவசாயிகள் நிலங்கள் உள்ளன. அந்த விவசாய நிலங்களை அடைவதற்கு வேறு ஒரு வழிகள் கிடையாது. வாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால், அந்த வாய்க்காலில் பாலம் கிடையாது. பல சமயங்களில் மக்கள் கழுத்தளவு நீரில் இறங்கி தான் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும்.
மக்களாக ஒரு தென்னை மரத்தை வெட்டி அதன் மேல் பாலம் போல் போட்டுள்ளனர். ஆனால், அதன் மேல் நடப்பது என்பது சர்க்கஸில் வித்தை செய்வது போன்றதாகும்.
எல்லாராலும் அந்த பாடத்தில் நடக்க முடியாது பொதுவாக சுமைகளை வைத்துக்கொண்டு விவசாய கருவிகளை வைத்துக்கொண்டு உரங்கள் நெல்கள் வைத்துக் கொண்டு அந்த பாலத்தின் மேல் நடக்க முடியாது. அதனால், மக்கள் கழுத்தளவு நீரில் இறங்கியே வாய்க்காலை கடக்க வேண்டி உள்ளது.
அந்தப் பாலத்தின் மேல் நடப்பது மிகவும் அபாயகரமாக உள்ளதால், ஆண்கள் பெண்கள் அனைவரும் அந்த நீரில் இறங்கித் தான் விவசாய வேலைகள் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்ல வேண்டிய அவலத்தை எதிர்கொள்கிறார்கள்.
பாலம் பாதுகாப்பாக இல்லாமல் இருப்பதால் பெண்கள் நீரில் இறங்கி செல்கின்றனர். அந்த வாய்க்காலுக்கு அந்த புறமும் 100 நாள் வேலைக்கு பெண்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் அந்த பாலத்தை கடந்து தான் ஆக வேண்டும். இது பெண்களுக்கு மிகவும் இடையூறாகவும் ஒரு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்னும் சொல்லப்போனால், இது பெண்களுக்கு கழுத்தளவு நீரில் இறங்கி வாய்க்காலை கடப்பது என்பது வேதனையாகவும், ஒரு பெரிய சுமையாகவும் உள்ளது. பெண்கள் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டும் என்றால், அவர்களது உடைகள் அனைத்தும் நனைந்து விடும் அதற்குப் பின்னால் அவர்கள் எவ்வாறு வேலை செய்வது? இயற்கை உபாதை உள்ள காலங்களில் பெண்கள் வாய்க்காலை கடந்து வேலைக்கு செல்வதில்லை. இதனால் வேலையை தவிர்த்து விடுகின்றனர்.
எலமனூர் விவசாயிகளின் வேண்டுகோள் என்னவென்றால்,
- தற்காலிக நடவடிக்கையாக இரண்டு புறமும் கைப்பிடி சுவர் உள்ள மரத்திலான பாதுகாப்பான பாலம் உடனே அமைத்து தர வேண்டும்.
- விவசாயத்தை பாதுகாக்க, விவசாயம் செழிக்க, விவசாயம் நன்றாக விவசாயிகள் நடப்பதற்கு கொடிங்கால் வாய்க்காலில் மேல் ஒரு பாலம் கட்டி தர வேண்டும். அந்தப் பாலத்தில் டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள் லாரிகள் செல்வது போன்று ஒரு பெரிய பாலம் கட்டித் தர வேண்டும்.
- அனலை ரோட்டில் கொடிங்கால் வாய்க்காலின் மேல்கட்டி உள்ளது போன்று ஒரு பெரிய பாலம் வேண்டும்.
- அனலையை கொடிங்கால் கரையின் மேல் பெருகமணியுடன் இணைத்தது போல் எலமனுரை அனலை கொடிங்கால் பாலத்துடன் இணைக்க வேண்டும்.
- கொடிங்கால் வாய்க்காலின் இரண்டு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் மேல் ஒரு ரோடு அமைத்து தர வேண்டும் அது நீர்வழிச் சாலையாக செயல்படலாம்.
- இந்தப் பாலத்தை ராமவாத்தலையிலிருந்து வரும் நீச்சல் குழி கிணறு வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். ஏனென்றால், நீச்சல் குழி கிணறு வாய்க்காலின் அகலம் குறைந்தபட்சம் 16 அடி அதிகபட்சம் 19 அடி, அதன் கரையில் ஒரு ரோடை போட்டு இணைத்து விட்டால் எஎலமனூருக்கென்று ஒரு மாற்று வழி கிடைத்து விடும்.” என்கிறார் கே.தங்கராஜ்.
வாய்க்காலின் குறுக்கே ஒரு தரைப்பாலம் அமைத்துத் தர ஐ.நா. சபையில் பேசி ஐந்தாண்டு திட்டம் போட வேண்டுமா, என்ன?
– ஆதிரன்.