”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள் படும்பாடு!
”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள் படும்பாடு!
”தினந்தோறும் திருச்சி நகருக்குள் வேலைக்கு வந்து போவதே, ஒரு போர்க்களத்திற்கு சென்றுவருவதற்கு நிகரான இன்னல்களை சந்தித்து வருவதாக” சலித்துக்கொண்டார், அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் சக தோழி ஒருத்தி. என்னதான், பிரச்சினை? ஏன் இந்த சலிப்பு? கேட்டேன். ”டெய்லி இனாம்குளத்தூர்ல இருந்து தினமும் திருச்சி சிட்டிக்கு வந்து போகனும்.
திருச்சி – திண்டுக்கல் வழித்தடத்தில் இருக்க இனாம்குளத்தூர் கொஞ்சம் பெரிய ஊராட்சி. பத்துக்கு மேற்பட்ட சின்ன சின்ன கிராமங்கள் இருக்குது. பெரும்பாலும் கூலித்தொழிலாளிங்கதான். அதுலயும், ஆபீஸ்க்கு, அன்றாடக்கூலி வேலைக்கு போற பெண்கள் நிறைஞ்ச ஏரியா. தனியா பைக் வச்சிகிட்டு வேலைக்கு போக வசதியில்லாதவங்க. பஸ்ல போயிட்டு வர்றதுதான் அவங்க பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும்.
சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கருமண்டபம், ராம்ஜி நகர் வழியாக இனாம் குளத்தூர் வழித்தடத்தில் 120 ,120 G, 120m, 1g , 20A, 112 A, 1D, னு நிறைய பஸ் வருது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் னு கவர்மெண்ட் அறிவிச்ச நாளிலிருந்து, கலெக்சன் ஆகலைனு பிரைவேட் பஸ் காரன் டிரிப்ப குறைச்சிட்டான். எந்த நேரத்துல வண்டிய விட்டா, பஸ் புல்லா வழிஞ்சி சனம் ஏறுமோ அந்த நடை மட்டும் மறக்காம வந்துருவான்.
குறிப்பா, நைட் டிரிப் பஸ் நெறஞ்சி போகும். பிரைவேட் பஸ் காரன் இப்படி பன்றானா, கவர்மென்ட் பஸ் அதுக்கும் மேல மோசம். டயம்க்கு பஸ் வர்றது கிடையாது. வந்தா ஒன்னு பின்னாடி ஒன்னா வருவான். காலைல ஆபீஸ்க்கு போகனும்னு அரக்க பறக்க கிளம்பி ஓடியாந்தா. கொறஞ்சது அரை மணி நேரத்துல இருந்து முக்கால் மணி நேரம் காத்து கெடக்கனும். இந்த கேப்ல, பஸ்டாண்டல கூட்டம் வேற சேர்ந்து போயிரும்.
நிக்கிற கூட்டத்தை பார்த்துட்டு பஸ் டாண்டுக்கு முன்னாடியோ இல்ல கொஞ்சம் தள்ளியோதான் நிப்பாட்டுறாங்க. அதுலயும் பெண்கள் நாங்க பத்து பேருக்கு மேல நிக்கிறோம்னா, டிரைவருக்கு எப்படி இருக்குமோ தெரியாது. வேனும்னே பத்தடி தள்ளிதான் நிப்பாட்டுவாரு. ஸ்கூல் பசங்க இருந்து வயசானவங்க வரைக்கும் ஏதோ ஓட்டப்பந்தயத்துக்கு ஓடுற மாதிரிதான் ஓடிப்போயி ஏற வேண்டியிருக்கு. அப்பவும்கூட, நிக்கிற எல்லாத்தையும் ஏத்திட்டு போகமாட்டாங்க.
பாதி ஏறி மீதிப்பேர் ஏர்றதுக்குள்ள பஸ்ஸ கெளப்பிருவாங்க. எங்க டயர் நம்ம மேல ஏறிட போதுனு பதறிப்போயி நாம விலகினா தப்பிச்சோம். அப்படியும் சில பேரு தடுமாறி விழவும் செய்றாங்க. ஆனா, அதயெல்லாம் அவங்க கண்டுக்கறதே இல்லை.
ரொம்ப நெரிசலா இருக்கே, அடுத்த பஸ்ல போயிக்கலாம்னு கொஞ்சம் பால்மாறினால் போச்சு. அடுத்த அரை மணிநேரத்துக்கு ஒரு பஸ்கூட வராது. அரசன நம்பி புருசன கைவிட்ட கதையா, நாங்க பாட்டுக்கு நின்னுகிட்டே இருக்க வேண்டியதுதான். பின்னாடியே பஸ் வருது அதுல ஏறி வாங்கனு முன்னாடி போற பஸ் வேகம் வேகமா எடுத்துடறாங்க…
பின்னாடி வர்ற பஸ்ஸோ, முன்னாடி போனவன் ஏத்திட்டானேனு அவன்பாட்டுக்கு ஓவர்டேக் பன்னிட்டு போயிட்டே இருக்கான். இவங்க காட்ற கண்ணாமூச்சி ஆட்டத்தை வேடிக்கை பார்த்துட்டு கால்கடுக்க காத்து கிடக்க வேண்டிதான்.
இப்படியெல்லாம் பன்றீங்களே, உங்களுக்கே சரியா படுகிறதா? என்றுதான் கேட்டேன். உடனே, டிரைவர் பஸ்ஸ நிப்பாட்டிட்டாரு. உனக்கெல்லாம் பதில் சொல்லனும்னு அவசியம் இல்லை. அப்படி இப்படினு அவருபாட்டுக்கு பேச ஆரம்பிச்சிட்டாரு. அப்புறம் சக பயணிகள்தான் சமாதானம் செய்து பேருந்தை எடுக்க வைத்தார்கள்.
மகளிருக்கு கட்டணமில்லா பயணம்னு அறிவிச்சதும் அறிவிச்சாங்க. எங்களையெல்லாம், ரொம்ப எளக்காறமாகத்தான் நடத்துறாங்க இந்த டிரைவர் கண்டக்டர் எல்லாம். ஓ.சி.யில வர்றவனுதானே பதில் சொல்ல மாட்டேங்கிற. நாளைக்கு நான் 10 ரூபாய் டிக்கெட் எடுத்துகிட்டு கேள்வி கேட்டா பதில் சொல்வாங்களா? ” என மூச்சிறைக்க புலம்பி தீர்த்தாள், அந்தத் தோழி.
போக்குவரத்து துறை தரப்பில் பேசினோம். நீண்ட தயக்கங்களுக்கு பிறகு, பெயர், பதவி, புகைப்படம் தவிர்த்து பேசினார் துறைசார்ந்த அதிகாரி ஒருவர்.
”நாங்களும் முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம். டிரைவர், கண்டக்டர்களுக்கு டெய்லி மீட்டிங் போட்டு அட்வைஸ் கொடுத்துகிட்டுதான் இருக்கிறோம். அங்காங்கே ஆள்போட்டு தொடர்ச்சியா கண்காணிச்சிட்டு வர்றோம். தப்பு பன்ற டிரைவர் கண்டக்டர்களுக்கு மெமோவும் கொடுக்கிறோம். டிரைவர், கண்டக்டர் ஷார்ட்டேஜ்லயும், எந்த ஒரு ஊருக்கும் பஸ் போகலைன்னு குற்றச்சாட்டு இல்லாத அளவுக்கு பேருந்துகளை இயக்கிகிட்டுதான் இருக்கிறோம்.
டிரைவர், கண்டக்டரிடம் பேசி ஓவர்டைம் கேட்டு வாங்கி, பேருந்துகளை இயக்கிகிட்டு இருக்கோம். அவங்களும் பிரஷர்லதான் வேலை செஞ்சிகிட்டு இருக்காங்க. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலையில 8.30 முதல் 9.15 மாலையில் 4.45 முதல் 6.15 வரையிலான பீக் ஹவர்ஸ்ல போதுமான பேருந்துகளை இயக்கிட்டுதான் வாரோம்.” என்றார், அவர்.
தி.மு.க., அ.தி.மு.க. னு கட்சிக்கு ஒரு தொழிற்சங்கங்கள் இருக்குதுல்ல. அந்தந்த அரசியல் கட்சிகளும் தங்களது தொழிற்சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஓட்டுநர், நடத்துனர்களிடம் பொதுமக்களிடம் நல்லுறவாகவும், கண்ணியத்தோடும் நடந்துக்கனும்னு கொஞ்சம் எடுத்துச் சொல்லலாம்ல… அதிகாரிகளை மட்டுமே குறை சொல்ல முடியுமா என்ன?