14 ஆண்டுகள் கடந்து வாழும் உலகின் வயதான கோழி!
நம் ஊர்களில் எல்லாம் ஒரு கோழி ஒரு கிலோவை தாண்டி வளர்ந்து விட்டாலே அது பெரிய விஷயம். அதை மீறி வளர்ந்தாலும் நாம் அதைப் பிடித்து சமைத்து சாப்பிட்டு விடுவோம். ஆனால் அமெரிக்காவில் ஒரு கோழி அதோட சராசரி ஆயுட்காலத்தை தாண்டி வாழ்ந்து உலகில் வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் சொன்யா ஹல் என்பவரின் ‘Pearl’ என்ற கோழி, 3 முதல் 10 ஆண்டுகள் வரை மட்டுமே வாழும் கோழிகளின் சராசரி ஆயுளை மீறி, 14 ஆண்டுகள் வாழ்ந்து சாதனையைப் படைத்துள்ளது. Pearl இந்த ஆண்டு மே மாதத்தில் 14 ஆண்டுகள் 69 நாட்கள் நிறைவுற்ற நிலையில், “உலகின் மிக வயதான கோழி” என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றது.
இதுகுறித்து பேசியிருந்த கோழியின் உரிமையாளர் சொன்யா ஹல், என் வீட்டில், பெர்ல் (Pearl) உட்பட பல கோழிக்குஞ்சுகள் உள்ளன. ஆனால் நான் வைத்திருக்கும் கோழிகளிலேயே பெர்ல் தான் மிகச் சிறியது எனவும், பிற கோழிகள் எப்போதும் அதைத் துன்புறுத்தியதாகவும், இதனால் பெர்ல் வயதான பிறகு அதைக் கூண்டிலில்லாமல் வீட்டுக்குள் வைத்து பராமரிக்க முடிவு செய்தேன் என்று அவர் கூறினார்.
மேலும் பெர்லின் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தன காலில் எலும்பு முறிவு, அணில் மற்றும் கரடி தாக்குதல், சிக்கன் பாக்ஸ், வாதம் போன்ற பல்வேறு சவால்களை பெர்ல் கடந்து வாழ்ந்து வருகிறது. “இத்தனை பிரச்னைகளையும் கடந்து, இன்னும் வாழ்ந்து வருவது ஆச்சரியம் தான்,” என உரிமையாளர் சொன்யா ஹல் பெருமையுடன் தெரிவித்தார்.
பெர்ல் “ஈஸ்டர்-எக்கர் ஹென்” என்ற இனத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. இந்த இனத்தைச் சேர்ந்த கோழிகள், சராசரியாக 5 முதல் 8 ஆண்டுகள் தான் வாழுமாம். ஆனால் பெர்ல் அந்த எல்லையைத் தாண்டி வாழ்ந்து, உலக சாதனை படைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
— மு. குபேரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.