20 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய பாம்பு!
உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு பார்படோஸ் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ரீ:வைல்டு (Re:wild) பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய சூழலியல் ஆய்வில் இன்னும் உயிருடன் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது.
இந்த வகையான பாம்பு அழிந்து விட்டதாக நிபுணர்கள் எண்ணிய நிலையில் தற்போது மத்திய பார்படோஸில் ஒரு பாறையின் கீழ் இந்த பாம்பை கண்டறிந்துள்ளனர். 2000-களின் தொடக்கத்திலிருந்து இந்த பாம்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது உலகளவில் ”அறிவியலுக்கு இழந்த” இனங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் பார்படோஸ் த்ரெட் பாம்பை சூழலியல் ஆய்வின் போது கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாகவும், முழு வளர்ச்சி அடையும் போது வெறும் 10 சென்டிமீட்டர் நீளமே இருக்குமாம்.
பார்படோஸ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில் ”ஒரு வருடத்திற்கு மேலாக இந்த பாம்பு மற்றும் பிற அரிய ஊர்வன இனத்தை தேடி வந்ததாகவும் தற்போது இதை கண்டுபிடித்துள்ளதாகவும், 1889 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட இந்த த்ரெட் பாம்பு பாலியல் இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது. பெண் பாம்புகள் ஒரு முறை ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. இது ஊர்வன உலகில் அரிதானது என்று கூறினர். மேலும் விவசாய வளர்ச்சியால் வாழிட இழப்பை இந்த பாம்புகள் எதிர்கொண்டு வருவதால் இவை அழிவின் விளிம்பில் அவர் தெரிவித்திருக்கிறார்.
— மு. குபேரன்.