கிளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு எழுதுவார்களா?
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட போது அமெரிக்காவின் முக்கியமான ஊடகமான நியூயார்க் டைமஸ் “US Attacked” என்று அதை தலைப்புச் செய்தியாக போட்டது . யூஎஸ்ஏ டுடே ஊடகம் “Act of War” என்று பிரகடனப்படுத்தியது . பிற ஊடகங்களும் கிட்டத்தட்ட இதே தொனியில் – அமெரிக்கா தாக்கப்பட்டது – என்றே செய்தியை போட்டன.
இதில் பிழை ஏதும் இல்லை. யாருமே எதிர்பார்த்திராத, மாபெரும் அழிவை உண்டாக்கிய தாக்குதல் அது. அதை ஒட்டு மொத்த அமெரிக்க மீதான தாக்குதல் என்ற புரிதலாக முன்வைத்தது நியாயமானதே.
தகவல்களை திரட்டுவதும், தரவுகளையும் சரிபார்ப்பதும் செய்தி சேகரிப்பின் அடிப்படைகள். சிக்கலான விஷயங்களில் புலனாய்வு செய்து உண்மையை கண்டறிவதும் அதன் இன்றியமையாத அங்கமே. ஆனால், அதையும் தாண்டி ஒரு நிகழ்வு சமூகத்தில் என்ன விதமாக தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையும் அது முன்வைக்க வேண்டும்.
தற்போது, ஈரான் மீது நடந்துவரும் தாக்குதலில் ஒரு ஆரம்பபள்ளி மீது குண்டு விழுந்து 160-கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் இறந்தது மனதை தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. பஸ்ஸில் ஏறும் போது யார் மேலாவது தெரியாமல் மோதிக்கொண்டால், ஒரு அரை செகண்ட் மட்டும் முகத்தை பாவமாக வைத்துகொண்டெ சாரி கேட்போமே – அது போலவே மொத்த உலகமும் அந்த கொடுந்துயரை மிகத்துரிதமாக கடந்து போய்விட்டது போல இருந்தது.
இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன் நியூயார்க் டைம்ஸில் வந்த செய்தி – குறிப்பாக அது எழுதப்பட்ட விதம் மற்றும் தொனி பெரும் உறுத்தலாக மனதில் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. அதன் தலைப்பு இப்படி இருந்தது.
“Analysis Suggests School Was Hit Amid U.S. Strikes on Iranian Naval Base” இந்த தலைப்பு ஏன் ஒரு Phd thesis தலைப்பு போல இவ்வளவு திருகப்பட்டு எழுதப்பட வேண்டும்? இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை கவனித்தால் எப்படி மிகக்கவனமாக – குழந்தைகள் என்பதோ , பெண் குழந்தைகள் என்பதோ, ஆரம்பப் பள்ளி என்பதோ தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.
“ஈரானிய கப்பற்படை தளத்தின் மீதான தாக்குதலுக்கு இடையில் ஒரு பள்ளி தாக்கப்பட்டதாக ஆய்வு சுட்டுகிறது ” இதைவிட ஒரு செய்தியை நீர்த்துப்போகச் செய்ய முடியுமா தெரியவில்லை ? மேலும் விவரணையில் குழந்தைகள் என்பதை மிகுந்த தயக்கத்துடனேயே பயன்படுத்துகிறது. அதற்கு பதிலான பல இடங்களில் ‘Civilians’ , ‘Persons’ என்பதை கையாள்கிறது . அந்தப் பள்ளி பெண்களுக்கான ஆரம்பப் பள்ளி. ஆனால், செய்தியில் என்னவோ Girls என்பதே வருவதில்லை.
இதில் நாம் தகவல் ரீதியாக குறை எதையுமே கண்டு பிடிக்க முடியாது. ஆனால், ஒரு மாபெரும் சோக நிகழ்வு நடந்திருக்கும் போது இப்படித்தான் clinical ஆக கிளவுஸ் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு எழுதுவார்களா? இரட்டைக் கோபுரம் தாக்குதலுக்கு உள்ளான போது NYT இப்படித்தான் ஆற அமர ஆராய்ச்சி செய்து தலைப்புச் செய்திகளை போட்டதா ?
இப்படியான ஒரு மொழியை ராணுவம் கையாளலாம். வக்கீல்கள் கையாளலாம். ஆனால், ஒரு பத்திரிக்கை இவ்வளவு கவனமாக பட்டும் படாமல் இதை அணுகுவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
NYT ஐ நான் முற்றாக குறை கூறவில்லை. இன்றளவு அமெரிக்க ஊடகங்களில் மிகத்தரமான முறையில் செய்திகளை அளித்து பாரம்பரியம் மிக்க நிறுவனம் , அவர்களே இதை பட்டும் படாமல் அணுகுவது ஏமாற்றமாக இருக்கிறது .
சரி, பிற ஊடகங்கள் , கிட்டத்தட்ட அந்தந்த நாடுகளின் நிலைப்பாட்டை ஒட்டி எழுத்தப்படவை போலவே தொனிப்பது ஆச்சரியமாக இருந்தது. அமெரிக்க ஊடகங்களிடையே அவசரப்பட்டு அமெரிக்காவை குற்றம் சொல்லிவிடக்கூடாது என்ற மீத மிஞ்சிய ஜாக்கிரதை உணர்வு தெரிகிறது.
பெரும்பாலான அமெரிக்காவின் நட்பு நாட்டு ஊடகங்கள் , ஜப்பான் டைம்ஸ் உட்பட – தாக்குதல் குழந்தைகள் போன்றவற்றை பெரிதாக மையப்படுத்துவதில்லை. ஐரோப்பிய ஊடகங்கள் சற்றே விமர்சன தொனி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் தாக்குதல் என்பதை அவை பரவலாக சுட்டுகின்றன. ஸ்பெயின் பத்திரிக்கையான El Pais – பெண் குழந்தைகள் , அமெரிக்க தாக்குதல் என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.
நான் பார்த்தவரை The Guardian (UK ), SCMP (HongKong ) , Al Jazeera (Qatar ) , ABC ( Australia ) El Pais ( Spain ) போன்ற ஊடகங்கள் இந்த தாக்குதலை பூசி மெழுகாமல் அதே சமயம் தகவல்களை மிகைப்படுத்தி பரபரப்பாக்காமலும் முன்வைத்திருக்கின்றன. உலக ஊடகங்களிலேயே, இந்தப் போர் குறித்து அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கடுமையாக கழுவி ஊற்றியவை வட கொரிய ஊடகங்கள் என்பது ஒரு அவல நகைச்சுவைதான்.
ஈரானின் பெருந்தலைவர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு மிகக்கச்சிதமான குண்டு வீசி அழிக்கும் வல்லமை உடைய ஒரு நாட்டுக்கு ஒரு கட்டிடம் ஆரம்பள்ளி நடந்து வரும் கட்டிடம் என்று தெரியாமல் போயிருந்தால் அது ஆச்சரியமே. அப்படி உறுதியாக தெரியாத சூழலில் அங்கு தாக்குதல் நடத்தக்கூடாது என்று தான் சர்வதேச சட்டங்களும் சொல்கின்றன.
நிகழ்வு ஒன்று தான். கிடைக்கும் தகவல்கள் பொதுவானவைதான். ஆனால் அதை முன்வைக்கும் விதமும், வார்த்தை தேர்வும் , மொழிபு உருவாக்கலும் நம்மை வெவ்வேறான ஒரு புரிதலை நோக்கு இட்டுச்செல்கின்றன. விழிப்புடன் இருப்பது நம் கையில் தான் உள்ளது.
— கார்த்திக் வேலு








Comments are closed, but trackbacks and pingbacks are open.