பெரியாரும்…. அவதூறுகளும்…. யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை – 16
அங்குசம் சமூக நல அறக்கட்டளை தொடர்ந்து நடத்திவரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையில் “பெரியார் : தொடரும் அவதூறுகள்” என்னும் பொருண்மையில் உரையரங்கம் நடைபெற்றது. அதில் பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் தொடக்க உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் விருதாளர் பெல் ம.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி மாணவர்கள் சுஜாதா சஞ்சய்குமார், வாசீர் அகமது ஆகியோர் கலந்துகொண்டு, பெரியார் மீதான் அவதூறுகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். பெல் ம.ஆறுமுகம் அதற்குப் பதில் அளித்தார். நிகழ்ச்சியைத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் ரெ.நல்லமுத்து ஒருங்கிணைத்து நடத்தினார்.
பேராசிரியர் கி.சதீஷ்குமாரன் தொடக்க உரையில்,
“பெரியாரின் சமூகநீதியில்தான் தமிழ்நாடு இன்று உயர்ந்து நிற்கிறது. பெரியார் மட்டும்தானா சமூகத்தை மாற்றினாரா? என்று கேட்கிறார்கள். பெரியாரைத் தவிர யார் சமூக மாற்றத்திற்குப் போராடியவர்கள் என்று பட்டியலிட முடியுமா? தமிழ் வளர்ச்சிப் பெறவேண்டும் என்றால் அதில் அறிவியல் செய்திகள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் என்பதில் உள்ள உண்மைகளை மறைத்துவிட்டு அல்லது புரிந்துகொள்ளும் திறன் இல்லாது பெரியார் மீது அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். அவதூறுகளால் தந்தை பெரியாரின் உழைப்பை யாரும் மறைத்துவிடமுடியாது. தமிழ்ச் சமூகத்தின் எழுச்சியில் தந்தை பெரியார் என்ற பெயர் எப்போதும் நிலைபெற்றிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
![பேராசிரியர் கி.சதீஷ்குமாரன்](https://angusam.com/wp-content/uploads/2025/02/DSC_0132.jpg)
சிறப்புரையாற்றிய பெல் ம.ஆறுமுகம்,“பெரியார் மீது அவதூறுகள் பரப்புவது என்பது இப்போது தோன்றியது அல்ல. 1925ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் பெரியார் இருந்தபோது நடைபெற்ற கூட்டத்தில் தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சி சுயராஜ்யம் கேட்கிறது. அந்த சுயராஜ்யம் என்றால் என்ன? என்பதை விளக்கவேண்டும். சுயராஜ்யம் அமைத்துக்கொண்டு வெள்ளைக்காரனிடம் சில பதவிகளைப் பெற்றுக்கொள்ளவது என்பதா சுயராஜ்யம் என்று கேட்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த செய்தியை அப்போதைய சுதேசமித்திரன் இதழில், பெரியார் கேட்ட கேள்விகளை எதையும் வெளியிடாமல், பெரியார் சுயராஜ்யம் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று எழுதி அவதூறு பரப்பினார்கள். இன்றைக்கும் எச்.ராஜா, அர்ஜூன் சம்பத், சீமார் போன்றவர்கள் இந்திய விடுதலை வேண்டாம் என்றார் பெரியார் என்று அவதூறு பரப்புகிறார்கள். பெரியார் எப்போது விடுதலை வேண்டாம் என்றார். சாதி ஏற்றத்தாழ்வுகள், பெண்கள் உரிமையற்று வாழ்கிறார்கள். எல்லா சமூகத்தினரும் சமமாக வாழும் நிலைமை இல்லாத நிலையில் இந்திய விடுதலை என்பது உயர்தட்டு மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையாக இருக்காது என்றுதான் பெரியார் இந்திய விடுதலை நாளை துக்கநாள் என்று அறிவித்தார்.
![பெல் ம.ஆறுமுகம்](https://angusam.com/wp-content/uploads/2025/02/DSC_0181.jpg)
சீமான் சாதியினர் எந்தக் கோயிலும் நுழையக்கூடாது என்று தடை இருந்தது. அதை மீறி நாடார் சமூகத்தினர் கோயில் நுழைவு போராட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மன்னர் சேதுபதி கோயில் நுழைவு தொடர்பாக வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில் நாடார் சமூகத்தினர் கோயிலில் நுழைந்தது ஆகம விதிகளை மீறியது என்று சாட்சி சொன்னவர் யார் தெரியுமா? சீமான் தமிழ்த்தாத்தா என்று போற்றுகின்ற, பாராட்டுகின்ற உ.வே.சாமிநாதன். சங்கிகள் பெரியார் மீது மட்டுமல்ல, பெரியார் வழியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரின் தொண்டர்கள் மீதும் அவதூறு பரப்புவார்கள்.
பெரியாரும் அவதூறுகளும் – யாவரும்… கேளீர்… பொதுமேடை -16
வீடியோவை காண
👇👇👇
ஒரு RSS அமைப்பைச் சார்ந்தவர் என் மீது ஒரு அவதூறான செய்தியை என் முன்னே நண்பர்களிடம் சொன்னார். நான் ஒரு கார் வாங்கினேன் என்றும், அந்தக் காரை என் மகனை வைத்து ஓட்டச் சொல்லி சமயபுரம் சென்று புதிய காருக்குப் பூஜை செய்தேன் என்று சொன்னர். நான் அதற்குப் பதில் சொல்லவில்லை. அண்மையில் மறைந்த என் நண்பர் மாரியப்பன் பதில் சொல்வார் என்று சொன்னேன். அவர் சொன்னார்,‘ஆறுமுகம் புதிய கார் வாங்கவில்லை, வாங்காத காரை அவர் மகன் ஓட்டியதாகச் சொல்கிறார். அவருக்கு மகன் கிடையாது. வாங்காத கார், இல்லாத மகன் ஓட்டிய காரில் எப்படி சமயபுரம் சென்று பூஜை செய்திருப்பார் என்று பதில் சொன்னார்.
பெரியார் மாளிகையில், பெரியார் தங்கும் படுக்கறை அறையில் பிள்ளையார் படம் இருக்கும் என்று அவதூறு பரப்பினார்கள். நான் அவர்களிடம் கேட்டேன். பெரியார் மாளிகை எங்கே இருக்கிறது? என்று கேட்டேன். தெரியாது என்றார். பெரியார் மாளிகை எங்கே இருக்கிறது என்று தெரியாத நீ, மாளிகையில் உள்ள படுக்கை அறையில் பிள்ளையார் படம் இருக்கிறது என்று எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்டவுடன் பதில் சொல்லமுடியாமல் விழித்தார். இப்படி பெரியார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.
![வசீர் அகமது](https://angusam.com/wp-content/uploads/2025/02/DSC_0154.jpg)
வசீர் அகமது
பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார் என்கிறார்கள் உண்மை என்ன?
பெல் ஆறுமுகம்
பெரியார் திருக்குறளில் உள்ள தேவையற்ற செய்திகளை எதிர்த்தார். தேவையான செய்திகளை ஆதரித்தார். திருக்குறளுக்குப் பெரியார் மாநாடு நடத்தினார். தமிழ்நாட்டை ஆண்டதாகச் சொல்லப்படும் சேர, சோழ, பாண்டியர்கள் திருவள்ளுவரைக் கொண்டாடினார்களா? முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் 133 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் சிலை வைத்தார். வள்ளுவருக்குக் கோட்டம் கட்டினார். பெரியார் மலம் என்று சொன்னது இராமயணத்தைத்தான் சொன்னார் அதற்கு ஆதாரம் பெரியார் களஞ்சியத்தில் உள்ளது.
சுஜாதா சஞ்சய்குமார்
பெரியார் சாதியை ஒழித்தாரா? பெயருக்குப் பின்உள்ள சாதியின் பெயரை ஒழித்தாரா?
![சுஜாதா சஞ்சய்குமார்](https://angusam.com/wp-content/uploads/2025/02/DSC_0154-1.jpg)
ஆரம்ப காலத்தில் எல்லாரும் சாதி கேட்டுதான் பழகுவார்கள். இப்போது நீ என்ன சாதி என்று கேட்கமுடியுமா? அப்படி கேட்க முடியாத நிலையைத்தான் பெரியார் ஏற்படுத்தினார். அதையும் தாண்டி சானாதவாதிகள் இன்றும் சாதியச் சிந்தனையோடு நோயுற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பெரியார் காரணம் அல்ல. மருத்துவமனைகள் நோயை நீக்குகின்றன. நோயை நீக்கிவிட்டால் மருத்துவமனை தேவையில்லை என்ற பொருள் இல்லை. நோய் ஏற்பட்டால் அதை போக்க மருத்துமனை வேண்டும் அல்லவா? அதுபோல்தான் பெரியார் சிந்தனைகள் இன்றும் சாதிய மறுப்புக்குத் தேவைப்படுகின்றது.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து நன்றி கூற உரையரங்கம் நிறைவடைந்தது.
— ஆதவன்.