இது பக்கா பிசினஸ் … உங்கள் மீனவனுக்காக நாம் ஏன் உருக வேண்டும்?
”நம்பிக்கை துரோகம் இப்படி நடக்கணும்னு நான் நினைச்சு கூட பாக்கல எல்லாமே போச்சே” என்ற தலைப்பில், ”உங்கள் மீனவன்” என்ற சேனலை நடத்திவரும் யூடிபரும் மூக்கையூரைச் சேர்ந்த மீனவருமான கிங்ஸ்டன் வெளியிட்டிருக்கும் வீடியோதான் மெய்நிகர் உலகம் என்பதாக அறியப்படும் சமூக வலைத்தளத்தில் இப்போதைய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
“உங்கள் மீனவனுக்கு” ஆதரவாக, அவருக்கு நேர்ந்த நம்பிக்கை துரோகத்திற்கு எதிராக பெருங்கூட்டமே அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு பார்வையாளர்களிடத்தில் கழிவிறக்கத்தை ஏற்படுத்திவருகிறார்கள். இதுவரை அவரது வீடியோக்களை கண்டு களித்ததற்கு, பிராயசித்தமாக கைம்மாறையும் எதிர்நோக்குகிறார்கள்.
யார் இந்த உங்கள் மீனவன்? அவருக்கு என்னதான் பிரச்சினை? அவரது தனிப்பட்ட பிரச்சினை, எங்கே எப்போது சமூக பிரச்சினையாக உருமாறியது? உங்கள் மீனவனுக்காக, அவர்களது யூடியூப் பார்வையாளர்களும் சேர்ந்தே ஏன் உருக வேண்டும்? என்ற கேள்விகள் முன் எழுகின்றன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்த கடற்கரை கிராமமான மூக்கையூரை சேர்ந்தவர் கிங்ஸ்டன். அடிப்படையில் மீனவரான கிங்ஸ்டன் மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்தவர். ஆனாலும், தனது மீன்பிடி தொழில் வழியே கற்ற அனுபவங்களை, கடலில் தான் பிடித்த மீன்களின் வகைகளை அதன் குணாதிசயங்களை டிக்டாக் கில் வெளியிட்டு பிரபலமானவர்.

அதன்பிறகு, மீன்பிடி தொழிலுக்காக தான் கடலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஆன்ட்ராய்டு ஃபோன் கையுமாக சென்றவர், மீன் பிடிப்பதையும், மீன்களையும் படம்பிடித்து தனக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெச்சூர் வீடியோக்களாக பதிவேற்றம் செய்து வருகிறார். தொடர்ந்து, நண்பர்கள் உதவியுடன் தனியே ”உங்கள் மீனவன்” என்ற அடையாளத்தோடு யூடியூப் சேனலையும் தொடங்கிவிடுகிறார். பார்வையாளர்களின் எண்ணிக்கையும், வருமானமும்கூட அதையே நேர்த்தியாக செய்ய முடிவெடுக்கிறார். இதற்கிடையில், அவரது யூடியூப் சேனல் தொழில்நுட்ப சிக்கல்களையும் எதிர்கொள்கிறது. அப்போதுதான், அவரது உறவுக்கார பையன் ஸ்பெல்மென் அறிமுகமாகிறார்.
ஐ.டி. நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணியாற்றி வந்த ஸ்பெல்மெனை, டெக்னிக்கல் சப்போர்ட்டாக பணியமர்த்துகிறார். அதற்காக, தனது யூடியூப் வருமானத்தில் 30% வழங்க ஒப்புக்கொள்கிறார். பின்னர், ஸ்பெல்மென் ஆலோசனையின்படி, ”உங்கள் மீனவன்” என்ற பெயரில் மீன் விற்பணையகத்தை நடத்த தீர்மானிக்கிறார்கள்.
அதிகபட்சம் 10 முதல் 12 மணி நேரத்திற்குள் மீன்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு சென்று சேர்த்துவிடுவது என்பதை உத்தரவாதப்படுத்தியதால், “உங்கள் மீனவன்” கடை பிரபலமாகிறது. இதனையடுத்து, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி, நாமக்கல், மதுரை, சிங்காநல்லூர், சரவணம்பட்டி, வடவள்ளி, திண்டுக்கல், தர்மபுரி, திருநெல்வேலி என அடுத்தடுத்து கிளைகளை நிறுவியிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் நிறுவனரும் தனிப்பட்ட உரிமையாளருமாக கிங்ஸ்டன் மட்டுமேயாக இருந்த நிலையை மாற்றி, லிமிடெட் கம்பெனியாக மாற்றியதிலிருந்துதான் பிரச்சினையே தொடங்கியதாக குறிப்பிடுகிறார். அப்போது, அவரது பேச்சை நம்பி ஆளுக்கு 50% – 50% என்ற ஷேர் முறைக்கு ஒப்புக்கொண்டதாகவும்; அவர் நீட்டிய இடங்களிலெல்லாம் கெயெழுத்தைப் போட்டதாகவும் குறிப்பிடுகிறார், கிங்ஸ்டன். லிமெடெட் கம்பெனியாக மாறியபிறகு, ஸ்பெல்மென் மச்சினன், தம்பி என பலரையும் நிர்வாகத்தில் உள் நுழைத்துவிட்டதாகவும் கூறுகிறார்.

மிக முக்கியமாக, கம்பெனி தொடங்கி ஓராண்டுக்கு பின்னர் ஸ்பெல்மென் அவரது தம்பி ஹெம்ராஸிடம் கணக்கு வழக்கு பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்ததில் இருந்து முறையான கணக்கு வழக்குகளை ஒப்படைத்ததே இல்லை என்கிறார். இதற்கிடையில் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் நட்டத்தை சந்திக்க நேர்ந்ததாகவும்; அதனை சரி கட்ட அவரது மனைவி, அவரது தம்பி மனைவியின் நகைகளை விற்றும் பைனான்சில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றும் சமாளித்ததாகவும் குறிப்பிடுகிறார், கிங்ஸ்டன்.
அதற்கு பிறகும்கூட, ஏதோ சாக்கு சொல்லி உரிய இலாப பங்கீட்டை ஸ்பெல்மென் வழங்கவில்லை என்றும்; புதிய புதிய கிளைகளை திறப்பது; வாகனம் வாங்குவது என்பதாக முதலீட்டு செலவுகளாக செய்து கொண்டிருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார். சரி, இன்று இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அனைத்தும் நமது சொத்துக்களாகத்தானே மாறும் என்பதாக நம்பி இருந்ததாகவும் சொல்கிறார்.
இந்த பின்னணியில், ஒருமுறை மைல்டு ஹார்ட் அட்டாக் வந்து உயிருக்குப் போராடிய அந்த சமயத்தில்கூட, தனது மருத்துவ தேவைக்காக பத்தாயிரம் ரூபாய் போட்டுவிடுமாறு தனது தம்பி அவ்வளவு கெஞ்சியும் ஸ்பெல்மென் உரிய நேரத்தில் பணத்தை போட்டுவிடவில்லை என்றும் உருக்கமாக குறிப்பிடுகிறார்.
அதன்பிறகே, ஸ்பெல்மென்னிடம் சண்டையிட்டதாகவும், அதற்கு அவர் இது என் கம்பெனி என்றும் உன்னால் முடிந்ததை பார் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும்; தொடர்ந்து, ஸ்பெல்மெனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாட்டுக்கும் தங்கள் இருவரால் வரமுடியவில்லை என்றும்; ஜீரோவாக இருந்த ஸ்பெல்மென்னை இந்த அளவுக்கு உயர்த்தியது எனது தனிப்பட்ட உழைப்பும் உங்கள் மீனவன் என்ற எனது தனிப்பட்ட பிரபலமும்தான். ஆனால், எனக்கே நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான். கடனில் தத்தளிக்கிறேன். நீங்கள்தான் எனக்கு ஆதரவு தர வேண்டும். என்பதாக கண்ணீரும் கம்புலையுமாக கோரிக்கை விடுக்கிறார், கிங்ஸ்டன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த விவகாரம் தொடர்பாக, இரு தரப்பிலும் கருத்தையறிய முயற்சித்தோம். அவர்கள் வெளியிட்டிருந்த பெரும்பாலான எண்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கின்றன. அழைப்பை ஏற்ற எண்களில் பேசியவர்களும் இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று ஒதுங்கிவிட்டனர்.
மீனவனாக, மீன்களின் வகைகளை பற்றிய அறிமுகமாக அவர் வீடியோ வெளியிட்டது வரையில் எந்த பிரச்சினையும் இல்லை. இதன் வழி கிடைத்த பிரபலமும் அந்த பிரபலத்தை மூலதனமாக கொண்டு யூடியூப் சேனல் தொடங்கிய தருணத்திலேயே அது முழுக்க வணிக நோக்கம் கொண்டதாக மாறிவிடுகிறது. அதற்கடுத்து, “உங்கள் மீனவன்” என்ற பெயரில் விற்பணையகத்தை தொடங்குவதெல்லாம், பக்கா பிசினஸ். அதில், அவர்களுக்கு இடையில் நடந்த வியாபார ஒப்பந்தம் குறித்து பார்வையாளன் எதற்காக அக்கறை கொள்ள வேண்டும்? உங்கள் மீனவன் பதிவிடும் வீடியோக்களால், புதிய தகவலை பெறுகிறான் பார்வையாளன். அதற்கு கைம்மாறாக, யூடியூப் வருமானமாக உங்கள் மீனவனுக்கு திரும்ப வந்தும் சேர்ந்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், வீடியோக்களை பார்த்து முடிப்பதோடு உங்கள் மீனவனுக்கும் பார்வையாளனுக்குமிடையிலான வர்த்தகம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அதையும் தான்டி, எதற்காக உங்கள் மீனவனுக்காக உருக வேண்டும்?
தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக, உங்கள் மீனவன் வெளியிட்ட வீடியோ பல இலட்சக்கணக்கான பார்வைகளை தாண்டியிருக்கிறது. அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வெளியான வீடியோக்களின் பார்வைகளும் வைரலாகியிருக்கின்றன. உங்கள் மீனவன் என்ற பெயரில் தொடங்கப்பட்ட விற்பணையகங்களும் பெயரில் சில மாற்றங்களுடன் வழக்கம்போல வியாபாரத்தை நடத்தி வருகின்றன. இவ்வளவுக்குப்பிறகும், நீங்களும் நானுமாகிய உங்கள் மீனவனின் பார்வையாளர்களாக உருகத்தான் வேண்டுமா?
— இளங்கதிர்.