அதிரடி திருப்பங்களுடன் மீண்டும் உயிர்ப்பெற்ற கலைமகள் சபா வழக்கு !
அதிரடி திருப்பங்களுடன் மீண்டும் உயிர் பெற்ற கலைமகள் சபா வழக்கு !
தமிழகத்தில் பெருந்திரளான பொதுமக்கள் பாதிப்பை சந்தித்திருக்கும், கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீண்ட இழுபறியில் சிக்கித்தவிக்கும் சிக்கல் நிறைந்த வழக்குகளுள் ஒன்று கலைமகள் சபா வழக்கு.
இதுநாள் வரையிலும் தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என ஏங்கித்தவித்தவர்களுக்கு நம்பிக்கையின் தொடக்கமாக நல்ல செய்தியை வழங்கியிருக்கிறது, ஜூன்-13 அன்று திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி வளாகத்தில், ஏ.சி. ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கலைமகள் சபா உறுப்பினர்கள் கூட்டம்.
தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா மற்றும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2024 பிப்ரவரி 13 ஆம் தேதி பிள்ளையார் சுழி போடப்பட்ட இந்த வழக்கு, நீதியரசர்கள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வந்தது. தற்போது, நீதியரசர்கள் அனிதாசுமந்த் மற்றும் சுந்தர்மோகன் அமர்வின் முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. இதுவரை, 28 இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன.
அப்போதைய பதிவுத்துறை தலைவர் ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ்.ஸை கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்ததோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் அவர் வேறு எந்த துறைக்கு சென்றாலும் இந்தப் பொறுப்பில் அவர் தொடர்வார் என்ற உத்தரவும்; ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் தலைமையில் தனிநபர் ஆணையம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் கலைமகள் சபா விவகாரத்தில் முக்கிய திருப்பங்களாக பார்க்கப்படுகிறது.
கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்வது; கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை அடையாளம் காணுவது; அந்த சொத்துக்களின் தற்போதைய நிலையை அறிய 33 மாவட்ட ஆட்சியர்களையும் வழக்கில் பார்ட்டியாக சேர்த்து சொத்துக்களின் விவரங்களை சேகரித்தது ஆகிய பணிகளை சிறப்பு அலுவலர் ஆலிவர் பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது தனிநபர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.எஸ். சுந்தர் தன் பங்கிற்கு கலைமகள் சபாவின் உறுப்பினர்களின் எண்ணங்களை தெரிந்துகொள்ளும் நோக்கில் இத்தகைய கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
தமிழகத்தில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட இதுபோன்ற ஆணையங்கள் தந்த அயற்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஏ.சி. அறைகளில் அமர்ந்துகொண்டு கோப்புகளை மட்டுமே ஆராய்ந்து காலத்தை கடத்தும் ஆணையத்தின் தலைவராக அல்லாமல், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் கருத்தை கேட்டு அதற்கேற்ப தீர்வுத்திட்டங்களை நீதிமன்றத்தில் முன்மொழிய வேண்டுமென்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முன்னெடுப்பு நிச்சயம் முன்னுதாரணமான ஒன்றுதான்.
அதுவும் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட முதலீட்டாளர்கள் மத்தியில், ஒரு பிரிவினர் சொத்துக்களை விற்று பணமாகவே வேண்டுமென்ற கோரிக்கையில் உறுதியாகவும்; மற்றொரு பிரிவினர் கலைமகள் சபாவின் பைலா விதியின் படி ஆளுக்கு ஒரு அடியாக இருந்தாலும், நிலமாகவே பிரித்துக்கொடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் உறுதியாக நிற்கும் நிலையில்தான் இப்படி ஒரு கூட்டம் முக்கிய கவனத்தை பெற்றிருக்கிறது.
முன்கூட்டியே, தமிழகத்தின் முன்னணி செய்தி தாள்களில் கூட்டம் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிட்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கலைமகள் சபா உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தார்கள். நமது அங்குசம் அறம் சேனலில் இந்த கூட்டம் தொடர்பாக வெளியான வீடியோ பதிவை பார்த்து பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்கள். வெறும் விளம்பரத்தோடு நிறுத்தாமல், சோசியல் மீடியா மற்றும்ஃ பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருந்தால் இன்னும் பல உறுப்பினர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்ற கருத்தும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற கலைமகள் சபாவின் உறுப்பினர்கள் பலரும் பேரார்வத்தோடு தங்களது கருத்துகளை, ஆதங்கங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்தனர். கூடுமான வரையில், கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்பிய உறுப்பினர்கள் அனைவருக்கும், அவர்களது கருத்தை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது இந்த கூட்டத்தின் சிறப்புகளில் ஒன்று. ஒருவரின் கருத்துகளிலிருந்து மாறுபட்டவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினாலும், அது கூட்டத்தின் நோக்கத்தை சிதைக்காத வகையில் அமைந்தது, கலைமகள் சபா உறுப்பினர்களின் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வந்திருந்த கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலத்துக்கு பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ஒருவர், கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலத்தில் சில சமூக விரோதிகள் கிராவல் மணல் அள்ளி வருவதாகவும் அதனை தான் முடிந்த அளவு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் பேசியது உறுப்பினர்களை நெகிழ்வில் ஆழ்த்தியது.
அதுபோல, நிலத்தின் சொத்துரிமை எனது பெயரில் உள்ளது; ஆனால், பதிவுத்துறை ஆவணங்களில் கலைமகள் சபாவுக்கு சொந்தமானது என நிலத்தின் மதிப்பை பூஜ்யமாக்கி வைத்திருக்கிறார்கள். இதனால் எனது சொத்தை விற்க முடியவில்லை என்பது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்களையும் பலர் முன்வைத்திருந்தார்கள்.
இன்னும் சிலர், நேரடியாகவே கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலரையும், தனிநபர் ஆணையத்தையும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் ஆட்சேபித்து, ”பெரும்பான்மை உறுப்பினர்களான எங்களை கேட்காமல் எப்படி இப்படி அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பிப்பீர்கள்? எங்களது சொத்துக்களை எப்படி நீங்கள் பொது ஏலத்துக்கு கொண்டு வருவீர்கள்? எங்களது சொத்தை எங்களுக்கே பிரித்துக்கொடுங்கள்.” என்பதாக, சிலர் தங்களது ஆதங்கங்களை ஆவேசத்துடன் எடுத்துரைத்தார்கள்.
இதுபோன்ற, கருத்துகள் ஒவ்வொன்றையும் நிதானமாகவும், பொறுமையாகவும், கேட்டுக்கொண்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், குடும்பத்தின் மூத்த உறுப்பினராக தமது இளவல்களுக்கு எடுத்துரைப்பதுபோலவே, அவரவர் கருத்துக்களுக்கான பதிலுரையாக வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான இடத்தில், கிராவல் மண் அள்ளுகிறார்கள் என்ற தகவலை கேட்ட மாத்திரத்தில், இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாவட்டத்தின் மேலாளரை உடனடியாக ஸ்பாட்டுக்கு அனுப்பி தற்போதைய நிலையை அறியத்தருகிறேன் என்பதாக சிறப்பு அலுவலர் ஆலிவர் பொன்ராஜ் காட்டிய வேகமும் அனைவரின் கவனத்தை பெற்றது.
மிக முக்கியமாக, தற்போது கலைமகள் சபாவின் சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றின் மீதான வில்லங்களை தீர்த்து பொது ஏலத்திற்கு கொண்டு வந்து அவற்றை விற்று காசாக்கி உறுப்பினர்களின் தகுதி நிலைக்கேற்ப பணமாக பிரித்துக் கொடுப்பதற்கான தீர்வுத் திட்டத்தைத்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த உத்தரவை அமல்படுத்தும் பொறுப்பில்தான் தாங்கள் நியமிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய பணிகள் இதற்கேற்பத்தான் அமைந்திருக்கிறது. இந்த உத்தரவில் மாறுபட்டு சங்க பைலா விதியின்படி நிலமாகத்தான் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் அல்லது பல்வேறு காரணங்களுக்கான முரண்படுபவர்கள் நீதிமன்றத்தில் தங்களையும் ஒரு பிரதிவாதியாக இணைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் தங்களது கருத்துக்களை முன்வைத்து வாதாடுவதே சரியானதாக இருக்கும். நீதிமன்றத் தீர்ப்புகள் நிச்சயம் மாறுதலுக்கு உட்பட்டதுதான். இதுபோன்று பொதுவெளியில் ஆக்ரோஷமாக கருத்துக்களை பகிர்வதைவிட, நீதிமன்றத்தில் உங்களது கருத்துக்களை முன்வைப்பதே தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதாக நீதியரசர் எஸ்.எஸ்.சுந்தர் பதிலுரைத்தார்.
அதிலும் குறிப்பாக, தங்களுடைய தற்போதைய பணி கலைமகள் சபா உறுப்பினர்களின் அவர்களின் முதலீட்டு தொகைக்கு ஏற்ப தகுதி நிலையை தீர்மாணிப்பது; அடையாளம் கண்ட சொத்துக்களின் வில்லங்கங்களை தீர்த்து அவற்றை மதிப்பீடு செய்து பொது ஏலத்துக்கு கொண்டு வருவது என்பதை நோக்கி இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியதோடு, எப்படியும் இந்த நடைமுறைகள் நிறைவுபெற குறைந்தபட்சம் மூன்றாண்டு காலத்தை பிடிக்கும் என்ற யதார்த்தத்தையும் பதிவு செய்தார்.
மேலும், கலைமகள் சபாவுக்கென்று பிரத்யேகமாக இயங்கிவரும் இணையதளத்தில் இனி இதுபோன்ற பொது தகவல்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆணையம் செயல்படும் என்பதையும் அவர் பதிவு செய்தார்.
நிறைவாக, இதுபோன்ற கலைமகள் சபா உறுப்பினர்களின் கருத்துக்கேட்பு கூட்டங்கள் தமிழகத்தின் 33 மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து மண்டல வாரியாக தொடர்ந்து நடத்தப்படும் என்பதாகவும் அறிவித்தார்.
சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, நீடித்த இந்த கருத்துக் கேட்பு கூட்டம் பங்கேற்ற கலைமகள் சபா உறுப்பினர்களிடத்தில் தங்களுக்கு எப்படியும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையையும் அதை நோக்கிய சட்டப்போராட்டம் பற்றிய புரிதலையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இத்தனை ஆண்டுகாலம் என்னதான் நடக்கிறது என்ற விவரமே தெரியாமல், அறியாமையிலும், தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற விரக்தியிலும் இருந்த உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக புதிய பாதையில் தீர்வுக்கான திசையை நோக்கி மெல்ல நகரத்தொடங்கியிருக்கிறது கலைமகள் சபா வழக்கு!
அதிரடி திருப்பங்களுடன் மீண்டும் உயிர் பெற்ற கலைமகள் சபா வழக்கு !
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.