நான் ஏலகிரி ஏரி பேசுறேன் …!
என் பெயர் “ஏலகிரி ஏரி ” பொதுமக்கள் மட்டுமல்ல, அரசாங்கப் பதிவேடுகளிலும் அதுவே என் பெயர்.
எனக்கு பின்னால் 1410 மீ உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் ஏழைகளின் ஊட்டி என கூறப்படும் ஏலகிரி மலை தான் என் பிறப்பிடம், மழை நீராகவும் மலை உச்சியிலிருந்து ஊற்றாகவும் பெருக்கெடுத்து மலையின் நடுவே ஊத்துக்குளி நீரோடையில் ஒன்று கலந்து மயில் பாறை வழியாக, ஏலகிரி கிராமத்தை ஒட்டி வரும் நான் “ஏலகிரி ஏரி” என்னும் பெயரில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் முன்பாக 164 – ஏக்கருக்கு மேல் என் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு கடல் போல் கம்பிரமாக காட்சியளிப்பேன்.
என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
என் கரைப் பகுதிகளில் செழுமையுடன் ஓங்கி வளர்ந்த புல் வெளிகளையும், பசுந்தழைகளையும் கால்நடைகள் உண்டு கொழுத்தன. என் மீது துள்ளிய விதவிதமான மீன் இனங்களை உண்டு பசியாற சிறகினங்கள் , கண்டம் விட்டு கண்டம் வந்தன.

ரயிலில் பயணித்துக் கொண்டே திருப்பத்தூர் எல்லைவரை என்னை ரசித்தவர்கள் ஏராளமானோர், எனக்கான இருப்பிடம் அன்று அளவிடமுடியாததாக இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பு வரை எந்த தடையும் தடங்களுமின்றி தவழ்ந்து சென்றேன்.
என்னை சுற்றியுள்ள ஜோலார்பேட்டை, ஏலகிரி . கோடியூர் மக்களும் , என்னை தாகம் தீர்த்து நோய் நொடியின்றி வாழ்ந்தனர் சுற்றி இருக்கும். 1000 – க்கும் மேற்பட்ட ஏக்கரில் நஞ்சில்லா விவசாயம் செய்ய உதவினேன்.பொன் விளையும் பூமி என்று என்னை நம்பி விதை விதைத்து எதையெதையோ நட்டார்கள், அறுவடை செய்தார்கள்..
காலப்போக்கில் எனக்கு எதிரேயுள்ள ரயில் பயணிகள் படுக்கைகளை சுத்தம் செய்ய என் இடத்தினை தந்தேன் பிற்பாடு அந்த இடத்தினை ஆண்ட தேசிய கட்சியை சேர்ந்த ஒரு மகாயோகி ஆக்ரமித்து பிரமண்டமாக கட்டிடங்களை எழுப்பி கொண்டார்.
அவரை தொடர்ந்து உன்னால் தான் ஆக்ரமிப்பு செய்ய முடியுமா? நாங்களும் ஆக்ரமிப்பு செய்வோம் என்பதாக ஆண்ட , கர்மயோகியும் அனைத்து கட்சிகளின் பெரும் முதலைகள் முதல் , நேத்து பேஞ்ச மழையில் முளைத்த அரசியல் கட்சிகளின் அடிவருடிகள் வரை ஆக்ரமித்துக் கொண்டார்கள்.
பிற்பாடு ரயில் நிலையத்தின் கழிவுநீரை என்னோடு கலக்க வைத்து முதல் முறையாக எனக்கு நோயை பரிசளித்தீர்கள் , அங்கிகராமாக A Register மற்றும் RSR-இல் 94 முதல் 104 வரை உள்ள சர்வே எண்களை உருவாக்கி , எனக்கான எல்லையை 40 ஏக்கராக சுருக்கி நிர்ணயம் செய்தீர்கள். இதை பார்த்தால் சிரிப்பு தான் வருது. வருண பகவான் மனசு வைத்தால் எனக்கு எண்டே கிடையாது.
கடந்த சில ஆண்டுகளாக என்னில் எதையெதையோ கொட்டி என் வழிப்பாதையைத் திருப்பிவிட்டிர்கள். என் பாதையைத் தொலைத்து நீங்கள் வகுத்த பாதையில் எங்கெங்கோ போனேன் முட்டிக்கொண்டேன் , மோதிச் சிதறி நின்றேன். கசாப்புக் கடைகளின் கழிவுகளை என் மீது கொட்டினிர்.
நோயை கொடுத்த நீங்கள் , என் இருப்பிடத்தை அபகரிக்க தொடங்கினீர்கள் , அடுக்குமாடி வீடுகளும் , மண்டபம் , வனிக வளாகங்கள் , பெட்ரோல் பங்க் என என் மேல்தான் எழுப்பியுள்ளீர் , நான் என்ன பாவம் செய்தேன் . உங்கள் தாகத்தைத் தீர்க்கவும், பசியைப் போக்கவும், உங்களைச் சுகாதாரமாக வைத்திருக்கவும் தானே மலை உச்சியிலிருந்து உங்கள் ஊருக்கு நம்பி வந்தேன் நம்பி வந்தவர்களை கருவறுத்து விட்டீர்களே?
இதனால் முழுமையாக நோய்வாய்ப்பட்டு என்னை நம்பி இருந்த புல் பூண்டு, நீர் வாழ் உயிரினங்கள் வரை அழிந்து போயின , நான் அழிந்துமில்லாமல் என்னை அளித்தவர்களுக்கு நோயை கொடுத்து விட்டோமே..! என்கிற கவலையுமுண்டு.

தேர்தல் வரும்போதெல்லாம் என்னைச் சுத்தப்படுத்தி, படகு விட்டு, கரைகளில் செடி, கொடிகள் நட்டு லண்டனின் ‘தேம்ஸ்’ நதிபோல ஆக்கிக் காட்டுவதாக என் கரையில் நின்றபடி ஆளாளுக்குச் சூளுரைப்பது வாடிக்கை.
அப்படி என்னை உயீர் பெற வைக்கவும் , என் இருப்பிடத்தை மீட்டெடுக்க ஏலகிரி கிராமத்தை சேர்ந்த பெரியவர் கோபி , எம்எல்ஏ தேவராஜ் கலெக்டர் சிவ சௌந்திரவள்ளி ஆகியோர் முயன்று வருவதாகவும் , அதிகாரி ஒருவர் ஆக்ரமிப்பு கும்பலிடம் ஆதாரங்கள் கேட்டு நோட்டிஸ் அனுப்பியதாகவும் , அந்த அதிகாரியை வேறு பணிக்கு மாற்றி விசாரணையை கிடப்பில் போட வைத்தது ஆக்கிரமித்த பெரும் முதலைகள்.
இதனை “அங்குசம் ” செய்தி வழியாக கூக்குரல் எழுப்பிருக்கிறோம் மணம்மாறி அவர்களாகவே காலி செய்தால் சுற்றிலும் கரை கட்டி. நாங்கள் செல்லும் வழி தடங்களை அடையாளம் காட்டினால், தூய்மை பெற்று , புல்வெளி பசுந்ததலைகள், சிறகினங்கள் முதல் , நீர்வாழ் இனங்கள் வரை வாழ வழி பிறக்கும்.

அப்படியே கலெக்டர் அலுவலகம் எதிரேயுள்ள என் அண்ணனையும் (திருப்பத்தூர் பெரிய ஏரி) ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து அழகுபடுத்தி வழிவகை செய்ய வேண்டுகிறேன்.
பொழுதுபோக்க எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்கள் மீது படகு சவாரி செய்து மகிழுங்கள், பூங்காக்கள் இல்லாத மாவட்டத்திற்கு எங்கள் இடத்தில் பூங்காக்கள் உருவாக்கி , எங்கள் அழகை ரசிக்கலாம். அரசு வருவாயை பெருக்கிக் கொள்ளலாம்.
வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என்பார்கள். கடலில் போய் ஆக்கிரமிப்பு செய்து பாருங்கள், கடலில் மண்ணெடுத்து வீடு கட்டிப் பாருங்கள், ஏன் முடியாதில்ல, அது உங்களை விழுங்கும் வாயுள்ள கடல் என்பதால் உங்கள் ஜம்பம் அங்கே எடுபடாது , இத்தோடு என் பேச்சை முடிக்கிறேன்.
ஏலகிரி ஏரி ஏழைக்கானது இல்லை அது பணமுதலைகளின் வருவாய் பெருக்கம் ஏரியாகிபோனது.
— மணிகண்டன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.