விளம்பரம் பார்த்தா காசு இது என்ன புது உருட்டா இருக்கு?
விளம்பரம் பார்த்தா காசு இது என்ன புது உருட்டா இருக்கு?
மோசடிகளுள் இது புதுவகை என்றாலும், தனிரகம் போல! தங்களது ”My V3 Ads” நிறுவனத்திற்கு எதிராக ஒரே ஒரு புகார் போலீசில் பதிவான நிலையில், ஆந்திரா, கர்நாடகா என எல்லை கடந்த வாடிக்கையாளர்களால் ஸ்தம்பித்து போய்விட்டது கோவை மாநகரம்.
இந்த நிறுவனத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் ரூ.360 தொடங்கி அதிகபட்சமாக ரூ.1,21,000 வரை பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார்கள். முதலீடு செய்யும் பணத்துக்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள், அழகுசாதனப்பொருள்கள் வழங்கப்படுவதாகவும்; புதிய நபர்களை இணைத்துவிடுபவர்களுக்கும் தனியாக வெகுமதி வழங்கப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த நிறுவனத்தில் இணைந்து நாளொன்றுக்கு இரண்டு மணிநேரம் முதல் விளம்பரங்களை பார்ப்பதன் மூலம் தினசரி ரூ.5 தொடங்கி ரூ.1,800 வரை சம்பாதிக்கலாம் என்றும் அந்த நிறுனத்தின் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது.
மல்டிலெவல் மார்க்கெட்டிங் பாணியில், மோசடியான முறையில் முதலீடைப் பெறுவதாகக்கூறி, முறைப்படுத்தப்படாத முதலீட்டு தடுப்புச் சட்டத்தின் கீழ் ”My V3 Ads” நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாமக வைச் சேர்ந்த அசோக்ஸ்ரீநிதி என்பவர் கோவை மாநகர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாருக்குத்தான் இந்த எதிர்வினை.
”இதற்குப் பின்னால் இனிமேல் எவனாவது ”My V3 Ads” பெயரை தவறாக நினைத்தாலே கொலை நடுங்கும் அளவுக்கு கூட்டம் சேர வேண்டும்” என்று வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். பத்தாயிரம்பேர் கூடிய அந்தக் கூட்டத்திற்கு மத்தியில் திறந்தவெளி காரில் கம்பீரமாக நின்றபடி அரசியல்வாதியைப்போல கையசைத்து பந்தா காட்டியிருக்கிறார், ”My V3 Ads” நிறுவன உரிமையாளர் சத்யானந்த்.
முன் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டத்தைக் கூட்டினார் என்று ”My V3 Ads” நிறுவனத்திற்கு எதிராக உள்ளூர் வி.ஏ.ஓ. புகார் அளித்திருக்கும் நிலையில், மேலும் ஒரு வழக்கு கூடியிருக்கிறது, அந்த நிறுவனத்திற்கு. அவர்களே வடிவமைத்திருக்கும் ஆப்-ஐ தரவிறக்கம் செய்துதான் பயன்படுத்த முடியும். அவர்கள் தினமும் பதிவிடும் வீடியோக்களை தொடர்ந்து பார்த்தாக வேண்டும். அதுவும் குறைந்தது ஒரு நிமிடத்திற்கு இரண்டு முறையாக வாவது அந்த ஆப்-பில் பார்வையாளரின் விரல்பட்டால் தான் அடுத்த நிலைக்கும் நகரும் என்ற விதத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்.
வீடியோவைப் பார்த்தால் காசு என்று, சைடு வருமானத்திற்கு ஆசைப்படும் இளைஞர்களை குறிவைத்து தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று சில்வர், கோல்டு, டைமண்ட, கிரவ்ன் என பல்வேறு படிநிலைகளில் உறுப்பினர் கட்டணமாகவும் 1 இலட்சம் வரை வசூலிப்பது; மல்டிலெவல் மார்க்கெட்டிங் பாணியில் ஆயுர்வேத பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களின் விற்பனை வரையில் விரிவான அளவில் வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலித்திருக்கிறது, அவர்களிடையே தனது பொருட்களையும் சந்தைப்படுத்தியிருக்கிறது.
தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக பல மோசடி கதைகளை கண்ட தமிழகத்தில், இதுபோன்று புதுசு புதுசா கிளம்பி வரும் நிறுவனங்களை கண்டறிந்து தொடக்கத்திலேயே, முறைப்படி பதிவு செய்திருக்கிறார்களா? அரசின் சட்ட திட்டங்களுக்குட்பட்டுதான் தொழில் செய்கிறார்களா? என்பதையெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் பொறுப்பு என்ற கேள்வியை முன்னிறுத்தியிருக்கிறது, இந்த விவகாரம்.
– ஆதிரன்
வீடியோ லிங்: