இன்றைய அவசரமயமான உலக வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுமே தன்னுடைய வாழ்க்கையை மிக வேகமாக வாழ ஆசைப்படுகிறான். இதற்காக அவசரமான பயணத்தை முன்னெடுக்கும் மனிதன் தன்னுடைய பயணம் சரியானதா, தவறானதா என்று கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவை எளிதில் குற்றங்கள் நடைபெற காரணமாக அமைகின்றது.
சமூக காரணிகள் ஒருபுறமிருக்க சிலர் திட்டமிட்டு இளம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகின்றனர் என்ற தகவலும் நம்மை அதிர்ச்சி அடைய செய்தது, சில ரவுடிகள், தெருக்களில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய புள்ளிகள், சாதி சங்கங்களின் பெயரைச் சொல்லி சங்கம் நடத்தும் குறு நில தலைவர்கள் இப்படியான பலரும் தங்களுடைய ஆதிக்கத்தை தங்கள் சார்ந்து இருக்கக்கூடிய பகுதியில் நிலைநாட்ட அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் சிறுவர்கள். சிறுவர்களுக்கு குறைந்த பணத்தை செலவு செய்தால் போதும், மேலும் சொன்னதும் சிந்திக்காமல் செய்துவிடுவார்கள் என்ற எண்ணங்களால் அதிக அளவில் இளம் சிறுவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள்.
தேசிய ஆவணக்காப்பகத்தின் ரிப்போர்ட்:-
தமிழ்நாட்டில் பெரும் பகுதி குற்றங்களில் இளம்சிறார்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர் என்பது தான் மிகப்பெரிய வேதனை. பொருளாதார பின்னடைவு, வாழ்க்கைத்தர பின்னடைவு, கல்வி தடைபடும் சூழல், சாதிய ஏற்றத்தாழ்வு, சினிமா மோகம் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளம் சிறார்களை குறிவைக்கும் ரவுடிகள் அவர்களை மது பழக்கங்களுக்கு உள்ளாக்கி தொடர் குற்றச்செயலில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். 18 வயதுக்கு குறைவானவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை குறைவு என்பதால் சிறையில் இருக்கக் கூடிய ரவுடிகள், சிறையிலிருந்து ஸ்கெட்ச் போட்டு வெளியில் இருக்கக்கூடிய சிறுவர்களை சிறைக்குள் தள்ளுகின்றனர்.
இப்படி இளைஞர்களும் மாணவர்களும் தவறான வழியின்பால் இழுத்துச் செல்லப்பட்டு அவர்கள் வாழ்க்கையையே இழந்து விடுகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள கடந்த ஐந்து ஆண்டுகால பதிவுகளை திருப்பிப் பார்த்தால் அதிர்ச்சி தரும் விஷயங்கள் ஆதாரப் பூர்வமாக அம்பலமாகி இருக்கின்றன.
2016ம் ஆண்டு 48 பேர் சிறுவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 2017ம் ஆண்டில் 53 பேர், 2018 ஆம் ஆண்டு 75 பேர், 2019 ம் ஆண்டு 92 பேர், 2020 ஆம் ஆண்டு 104 பேர் சிறுவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். 367 கொலை வழக்குகளில் சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருக் கின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக்காப்பகம் கூறுகிறது.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறதோ, அந்த அளவிற்கு குற்றச் சம்பவங்களும் அதிகரித்தே வருகிறது. மேலும் இளம்சிறார்கள் குற்றவாளியாக மாற்றப் பட்டு வரும் சம்பவமும் தொடர்கதையாக மாறி இருக்கிறது.
மேலும் திருச்சியில் கொலை செய்யப்பட்ட நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளில் 2 பேர் இளம் சிறுவர்கள் என்பதும், முக்கிய குற்றவாளி இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கூட தவறான சேர்க்கையால் அச்சுறுத்தும் கேங்ஸ்டார்களாக உருவெடுத்து வருகின்றார்கள். இப்படி தற்போது தேனி மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு கத்தி அரிவாளுடன் சென்று ஆசிரியர்களை மிரட்டுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இது குறித்து தேனி மாவட்ட ஆசிரியர்களிடம் கேட்ட போது, “பள்ளிக்குச் சென்று வருவதே கத்திமுனையை எதிர் கொள்வது போல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்களை எதிர்கொள்வதே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுகின்றனர். எதிர்த்து கேள்வி கேட்க முடியாத சூழலில்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நிலைமை மோசமாகும். அதற்குள் பள்ளிக் கல்வித்துறையும் காவல் துறையும் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.