யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை ! உறுதியானது எப்படி? விரிவான தகவல் !
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த கொங்கு வெள்ளாக கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்த குற்றத்துக்காக தலைவேறு முண்டம் வேறாக கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது, 2015 ஆம் ஆண்டு ஜூன் 23.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பொழுது, தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் மற்றும் அவருடன் வந்திருந்த ஆட்கள் கோகுல்ராஜை அழைத்துச் சென்றதாகவும், அதன்பின்னரே அவர் மர்மமான முறையில் கொடூரமாக கொல்லப்பட்டு இறந்ததாகவும் நேரடி சாட்சியமாக சுவாதியே நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அவரது சாட்சியம் மற்றும் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளின் அடிப்படையிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டங்களின் காரணமாகவும்தான் யுவராஜ் உள்ளிட்ட கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். அரசியல் ரீதியான புறவயமான அழுத்தம் இல்லாது போயிருந்தால் இந்நேரம் போதுமான சாட்சியங்கள் இருந்தும் யுவராஜ் தண்டனையிலிருந்து தப்பியிருப்பார்.
யுவராஜ் உள்ளிட்டு 15 பேருக்கு எதிரான இந்த வழக்கு மதுரை எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 2022 மார்ச்8ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிமன்றம், 15 பேரில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. யுவராஜ்க்கு இறுதி மூச்சுவரை சிறையிலேயே கழிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு 3 ஆயுள் தண்டனை வழங்கி தமிழகத்தையே திரும்பி பார்க்கும் வகையிலான தீர்ப்பை எழுதியிருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சம்பத்குமார். தனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் யுவராஜ். வழக்கிலிருந்து 5 பேரை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் சுவாதியின் தாயார்.
இந்த மேல்முறையீட்டு வழக்குகள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இரண்டு நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றலாகி போனதையடுத்து, வழக்கை சென்னையில் இருந்தபடியே தொடர்ந்தனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியே பிறழ் சாட்சியாக மாறினார். அவரது தோழி உள்ளிட்ட சிலரும் பிறழ் சாட்சியாக மாறினர். வழக்கு விசாரணையின்பொழுது, பிறழ் சாட்சியமாக மாறியவர்களுக்கு எதிராக நீதிபதிகளே தாமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தனர். திறந்தவெளி நீதிமன்றத்திலேயே பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை கண்டித்தனர்.
கோகுல்ராஜ் கடைசியாக சுவாதியுடன் பேசிக்கொண்டிருந்ததாக அடையாளம் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தனர். தம் கண் முன்னே கொண்டு நிறுத்தப்படும் சாட்சிகளையும் கோப்புகளில் கோர்க்கப்படும் ஆவணங்களையும் மட்டுமே பார்த்து தீர்ப்பு சொல்லிவிட்டு போயிருக்கலாம். ஆனாலும், ஆச்சரியப்படத்தக்க அளவில் இந்த மேல்முறையீட்டு வழக்கை நடத்திய நீதிபதிகள் இருவருமே நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, கோகுல்ராஜின் தாயார் சித்ராவின் முறையீட்டினை ஏற்று சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாட சிறப்பு வழக்குரைஞராக ப.பா.மோகன் அவர்களை நீதிமன்றம் அமர்த்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. ”ஒரு வழக்கில் புலன் விசாரணை தவறாகவே இருந்தாலும் சரியான ஆவணங்கள் ஆங்காங்கே இருக்கும்போது அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.” என சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டபோது பி.பி.சி. நியூஸ் தமிழுக்கு கொடுத்த நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், ப.பா.மோகன்.
விசாரணை நீதிமன்றத்திலேயே, வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோர் வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்ததால்தான், மேல்முறையீட்டில் அசைத்துக்கூட பார்க்க முடியாமல் யுவராஜ் வகையறாக்கள் தோல்வியுற்றிருக்கிறார்கள். சுவாதி பிறழ் சாட்சியானது தற்செயலானது அல்ல. ஆதிக்க சாதியினரின் அழுத்தம்தான் சுவாதியை பிறழ்சாட்சியாக மாற்றியது என்பது தமிழகம் அறிந்த ஒன்று. அதற்காக, சுவாதியை கோழை என்று சொல்லிவிட முடியுமா? அவருக்குள்ள அழுத்தங்களும் கொலைமிரட்டல்களும் நாம் அறியாத ஒன்றல்ல. போலீசின் கண்காணிப்பிலேயே காலத்தை ஓட்டிவிட முடியுமா? சுவாதி இயல்பு நிலைக்கு மாறி, சுதந்திரமாக, சமூகத்தில் ஒன்று கலக்க முடியாதபடி இருக்கிறது, தமிழகத்தில் ஆதிக்க சாதி கட்டமைப்பு.
இந்த தனிச்சிறப்பான சூழல்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான், யுவராஜ் உள்ளிட்டு அவரது கூட்டாளிகளுக்கு எதிராக மதுரை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்திருக்கிறார்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
– ஆதிரன்