‘திருட்டுப்பயலே’ சுசி
பின்னணியில் குவைத் ராஜா?
‘திருட்டுப்பயலே-2’ ரிலீசாகி நான்கு வருடங்களாகிவிட்டன. இப்போது மீண்டும் தமிழ் சினிமா மைதானத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்து டைரக்ட் பண்ணும் வேலைகளில் செம சுறுசுறுப்பாக களம் இறங்கியுள்ளார் சுசி கணேசன்.
இந்த பேனரின் முதல் தயாரிப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’, இரண்டாவதாக வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு, மூன்றாவதாக ‘புல்லட்-19’ என வரிசையாக தயாரிப்புக் களம் காண்கிறார் சுசி கணேசன். ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ படத்திற்கான இரண்டு ஹீரோக்களை ‘வருங்கால சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் பிரபல தொலைக்காட்சியில் ‘டேடல்ண்ட் ஷோ’ நடத்தி செலக்ட் பண்ணும் சுசி கணேசன் பின்னணியில் இருப்பவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் குவைத் ராஜாவாம்.
பெரிய பேனரில் ஜோடி சேர…
சின்னச் சின்ன படங்கள், பட்ஜெட் குறைவான பேனர் படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருபவர் பி.ஆர்.ஓ.ப்ரியா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பி.ஆர்.ஓ.வாக இருப்ப வருமான டைமண்ட் பாபுவின் உதவியாளராக இருந்தவர் தான் இந்த ப்ரியா. சிருஷ்டி டாங்கே, தான்யா ஹோப், சாய் தன்ஷிகா, ஷெரின் போன்ற முகம் தெரிந்த ஹீரோயின்களுக்கு பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ப்ரியா, வைசு சுந்தர், மரியா வின்செண்ட், ஹேமா என பல இளம் புதுமுக ஹீரோயின்களுக்கும் பி.ஆர்.ஓ.வாக இருக்கிறார்கள். மேற்படி இளம் புதுமுகங்கள் ‘ பெரிய பேனரில், பெரிய ஹீரோவுடன் ‘ஜோடி’ சேர ஒப்பந்தமாகப் போகிறார்கள் என அவ்வப்போது அவர்களின் போட்டோஷூட்டுகளை ரிலீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார் ப்ரியா.
சிலு சிலுப்பா
படம் தயாரிக்கும் ஏ.சி.எஸ்.
‘அரண்மனை-3’ அட்டர்ஃப்ளாப் ஆனாலும் ( அதெல்லாம் கிடையாது படம் ஹிட்டு தான் என ஒரு குரூப் அப்ப சொல்லிக்கிட்டிருந்துச்சு) அசரவில்லை டைரக்டர் சுந்தர் சி. இனிமே ‘அரண்மனை’ சீரிஸ் படங்கள் வேணாம் கலகலப்பா, ஜிலுஜிலுப்பா ஒரு படம் எடுப்போம் என்ற முடிவுடன் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று ஹீரோக்களையும் மாளவிகா ஷர்மா, அம்ரிதா, ஐஸ்வர்யா தத்தா என மூன்று ஹீரோயின்களையும் வைத்து தனது அடுத்த படத்திற்கான பூஜையையும் போட்டு விட்டார். சென்னையிலும் ஊட்டியிலும் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கும் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளார் சுந்தர் சி. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை குஷ்பு & சுந்தர் சி.யின் ஆவ்னி சினிமேக்ஸ் பேனரில் தயாரித்தாலும் படத்திற்கு மொத்த ஃபைனான்ஸும் மெடிக்கல் காலேஜ் ஓனரான ஏ.சி. சண்முகத்தின் பென்ஸ் மீடியா தான். சுந்தர் சி.யின் சுறுசுறுப்புக்கு காரணம் இப்ப தெரிஞ்சிருக்குமே?