2026 தேர்தல் கள நிலவரம்!
2026 தேர்தல் களம் | 234 MLA தொகுதிகள் அங்குசம் – தேர்தல் கள ஆய்வு முடிவுகள் !
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026 ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கின்றது. தற்போதைக்குத் திமுக + காங்கிரஸ் + விசிக + மதிமுக + மமக + இயூமுலீக் இணைந்த தலைமையில் இந்தியா கூட்டணியும், அதிமுக + பாஜக இணைந்து தேசியத் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும், தமிழக வெற்றிக் கழகம் தனி அணியாகவும் மொத்தம் நான்கு முனைப் போட்டி இருப்பதற்காக வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் பல ஊடகங்கள், தனியார் 2026 தேர்தல் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கணிப்பை வெளியிட்டு வந்தன. அண்மையில் வெளியிடப்பட்ட பல கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்பாக இருந்தது. பொதுமக்களிடம் பெருமளவு வரவேற்பைப் பெறவில்லை. மாறாகப் பொதுமக்கள் ஒதுக்கித் தள்ளும் நிலைமை ஏற்பட்டது.
இந்நிலைப்பாட்டுக்கு மாற்றாக, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இதுவரை யாரும் அணுகாத வகையில் தொகுதியின் கள நிலவரத்தை மக்களின் மனநிலையை சரியாக பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற கருத்தை அங்குசம் செய்தி இதழ் ஆசிரியர் ஜெடிஆர் முன்வைத்தார். அந்த பொறுப்பு, இதழின் பொறுப்பாசிரியர் என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, 2021 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை வெளியிட்ட இந்தியத் தேர்தல் ஆணையின் தரவுகளைச் சட்டமன்ற வாரியாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற வாக்குகளைத் தரவுகளாக 234 தொகுதிகளுக்கும் பட்டியல் தயார் செய்தோம். பின்னர் 2024 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளின் முடிவுகளை இந்தியத் தேர்தல் ஆணையத்திலிருந்து பார்த்து, ஒரு மக்களவைக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்களைத் தரவுகளாகத் தனியாகப் பட்டியல் தயார் செய்தோம்.
பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதா? குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதா? என்பதை ஒப்பிட்டுப் பார்த்து அதிகம் என்றால் எவ்வளவு அதிகம், குறைவு என்றால் எவ்வளவு குறைவு என்பதைப் பட்டியலிட்டோம். தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக + பாஜக வாக்குகளை இணைத்து, திமுக கூட்டணி அதிமுக+பாஜக கூட்டணியைவிடக் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளதா? குறைவாகப் பெற்றுள்ளதா? என்பதைப் பட்டியலிட்டோம். அடிப்படையில் எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதைச் சட்டமன்ற வாரியாகப் பட்டியலிட்டு, அதைத் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட வாரியாக வெளியிடுவது என்று முடிவு செய்தோம்.
மாவட்ட வாரியாகக் கூட்டணிகள் வெற்றி வாய்ப்பு மொத்தத் தொகுதிகளின் விவரங்கள் பட்டியல் இணைப்பில்.
இதன் அடிப்படையில் 2026 இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 145 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. 14 தொகுதிகளில் திமுக + அதிமுக கூட்டணிகளுக்கிடையே இழுபறி நிலை உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. 2,000 வாக்குகளுக்குக் குறைந்த வித்தியாசம் உள்ள தொகுதிகளின் இழுபறி நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 145 – அதிமுக கூட்டணி 75 – இழுபறி 14.
இன்னும் கூட்டணியில் இணையாத பாமக, தேமுதிக கட்சிகளை அதிமுக கூட்டணியில் வைத்துத்தான் இந்தக் களநிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை பாமக, தேமுதிக இணையவில்லை என்றால் அதிமுகவுக்குத்தான் இதனால் பாதிப்பு ஏற்படுமே தவிர, திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. இந்தக் களநிலவரத்தில் சீமான் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். வாக்கு வங்கியே இல்லாத தவெக-வை களநிலவரக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் களநிலவரம் அனைத்தும் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையிலும், ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் வெளியிடப்பட்டுள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல என்பதை அங்குசம் இதழ் வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து அங்குசம் இதழ்களில் மாவட்ட வாரியாக எந்தெந்தத் தொகுதி எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புள்ள தொகுதியாக உள்ளது என்ற விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்பதையும் வாசகர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
– பேரா. நெடுஞ்செழியன், பொறுப்பாசிரியர்.