2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ்! 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு!
2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ்! 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு!
இரண்டு வயது குழந்தைக்கும்கூட டயாலிசிஸ்… 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியாத விசயங்களாக அச்சமூட்டுகின்றன. நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்களை தொடர்ந்து சிறுநீரக செயலிழப்பு தொடர்பான நோய்களும் தற்போது பரவலான கவனத்தை பெற்று வருகின்றன. இந்த பின்னணியிலிருந்து, சிறுநீரகம் தொடர்பான பொதுவான சிக்கல்கள் குறித்து, திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு சிகிச்சை மருத்துவர் எஸ்.கணேஷ் அரவிந்த் MD.,DM.,DNB அவர்களை அங்குசம் சார்பில் சந்தித்து கலந்துரையாடினோம்.
சிறுநீரக செயலிழப்பு – டயாலிசிஸ் போன்ற பிரச்சினைகள் பரவலாக கேள்விபட நேரிடுகிறதே, காரணம் என்ன?
சிறுநீரகம் செயலிழப்பிற்கு வாழ்க்கை முறை மாற்றம்; மரபணு மாற்றம்; பரம்பரை வழி பாதிப்பு என சில பொதுவான காரணங்களோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் முக்கிய பங்காற்றிவருகின்றன. அந்தக் குறிப்பிட்ட பகுதியில் குடிநீரில் உள்ள உப்புத்தன்மையின் அளவு, சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. புதுச்சேரி, இராமநாதபுரம், அரியலூர் உள்ளிட்ட சில குறிப்பான பகுதிகளில் சிறுநீரக செயலிழப்பு சிக்கல்கள் அதிகமாக கண்டறியப்பட்டிருக்கின்றன.
எவ்வித முன் அறிகுறி எதுவுமின்றி திடீரென்று, 25 – 30 வயதினருக்கும்கூட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதையும் பார்க்கிறோம். இதுதான் காரணம் என சொல்லமுடியாத நிலை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை சி.கே.டி.யு. என்று வகைப்படுத்துகிறோம்.
சுற்றுச்சூழல் சார்ந்த சிக்கல்களோடு, தனிப்பட்ட மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், உணவு பழக்கம், உடற்பயிற்சி குறித்த அக்கறையில்லாத வாழ்க்கை முறையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன. மருத்துவர் பரிந்துரை அல்லாத அல்லது உடலுக்கு ஒவ்வாத மாத்திரைகளை உட்கொள்வதாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
சிறுநீரகத்தை ஏமாற்றும் உறுப்பு என்று சொல்கிறார்களே, அப்படியா?
உண்மைதான். சர்க்கரை நோயை போலவே, ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதில்லை. உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு. கொஞ்ச வேலை பார்த்தாலும் கை கால் வலி வருவது. கை கால் இழுப்பது போன்ற உணர்வு. அதிகமான சிறுநீர் கழிப்பது. குறிப்பாக, இரவில் அதிகமாக சிறுநீர் கழிப்பது, போன்றவை சில பொதுவான அறிகுறிகள். பரம்பரையில் சிறுநீரகம் தொடர்பான நோய் தொடர்ச்சி இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதே போல, நீரிழிவு நோயாளிகளும், இதய நோயாளிகளும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். எனக்கு ஒரு நோயும் இல்லை, ஆரோக்யமாகத்தான் இருக்கிறேன் என்பவரும்கூட, 30 வயதிற்கு மேல் சிறுநீரகத்தின் செயல்பாட்டை கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், இது சைலன்ட் கில்லர் மாதிரி. தொடக்கத்திலேயே, பாதிப்பை கண்டறிந்துவிட்டால் குணப் படுத்துவதும், நோயிலிருந்து மீண்டு திரும்புவதும் எளிதாகும். குறிப்பிட்ட ஸ்டேஜ்க்கு மேலே போயிடுச்சுன்னா எதுவுமே பண்ணமுடியாது.
டயாலிசிஸ் என்பது அவர்களது வாழ்வாதாரத்தை வாழ்க்கை முறையை ரொம்பவே பாதிக்கும். அதே போல உறுப்புமாற்று சிகிச்சையிலும் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.
ஒன்று போனால் மற்றொன்று இருக்கிறதே, அதை வைத்து சமாளித்துக் கொள்ள முடியாதா?
சிறுநீரகத்தில் தொற்று அல்லது கல் ஏற்பட்டதாலோ அல்லது கேன்சர் தாக்குதல் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் மட்டும் பாதிப்படைந்தவர்கள் மற்றும் ரத்த உறவுகளுக்கு சிறுநீரக தானம் செய்தவர்களைப் பொறுத்த மட்டில், ஒன்று போனாலும் மற்றொன்றை வைத்து உயிர் வாழ முடியும். நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில், இரண்டு சிறுநீரகங்களுமே செயலிழப்பதுதான் சிக்கல்.
சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை தவிர்த்துவிட்டு, டயாலிசிஸ் வழியாகவே வாழ்க்கையை கடத்திவிட முடியாதா?
இரத்தம் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம். டயாலிசிஸில் இயந்திரத்தின் துணையோடு அதை செய்கிறோம். சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மாற்று உறுப்பை வைத்து செய்கிறோம் அதுதான் வித்தியாசம். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கான முன் தயாரிப்புக்கு, அல்லது அதற்காக காத்திருக்கும் காலங்களில் டயாலிசிஸ் மிக அவசியமானதாகிறது.
சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள சிக்கல்கள் என்ன?
ஒவ்வொரு டயாலிசிஸ் சென்டரிலுமே நூறு நோயாளிகள் டயாலிசிஸ் செய்து வருகிறார்கள். அத்தனை பேருக்குமே சிறுநீரகம் தேவை. யாரும் யாரிடமிருந்தும் சிறுநீரகத்தை பெற்று பொருத்திவிட முடியாது. குறிப்பாக, இரத்த உறவுகள் அல்லாதவர்களிடமிருந்து பெறப்படும் சிறுநீரகங்களை பெறுவதில் நிறைய நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதற்கு ஒரே தீர்வு. மூளைச்சாவு அடைவர்களின் உறுப்புகளை எந்தளவுக்கு நாம் முழுமையாக பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், எப்போதும் போல, பழையபடி தனது வாழ்க்கையை தொடர முடியுமா?
கண்டிப்பாக, ஆனால் சில கட்டுப்பாடுகள் உண்டு. என்ன இருந்தாலும், அது மற்றொருவருடைய உறுப்புதான். மரபனு ரீதியிலான வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவது; வித்தியாசமான அணுக்களை கண்டறிந்து அதனை பாதிப்படைய செய்யும் நிகழ்வும் நடக்கும். இவற்றையெல்லாம் தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம்.
டயாலிசிஸ், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை இரண்டுமே அதிக செலவு பிடிக்கும் நோய்களாயிற்றே?
உண்மைதான். வேறு வழியில்லை. இதன் காரணமாகத்தான் போதிய விழிப்புணர்வுடன் இருந்து தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
நமது மருத்துவமனையில், டயாலிசிஸ், சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரண்டையும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக பெற்று கொள்ளலாம். இதற்கு அவசியமான அனைத்து அங்கீகாரங்களையும்,
அரசின் முன் அனுமதிகளையும் பெற்றிருக்கிறோம்.
வீடியோ லிங்:
நேர்காணல் : வே.தினகரன். வீடியோ : ஜெபராஜ்
Read more. Really looking forward to reading more. Great blog.
[…] 2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ்! 16 வயதில் … […]