சாத்தூர் : தரமற்ற முறையில் நடைபெறும் 35 கோடி மதிப்பிலான வாறுகால் திட்டம் !
இங்கு என்ன பணி நடக்கிறது என்று கேட்டதற்கு அந்த அதிகாரி நக்கலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளார்.
சாத்தூர் அருகே தரமற்ற முறையில் நடைபெறும் 35 கோடி மதிப்பிலான வாறுகால் திட்டம் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி நெடுஞ்சாலைத்துறை உட்பட்ட பகுதிகளில் சுமார் 35 கோடி திட்ட மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் குறித்து அப்பகுதி வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன் அங்கு பணியில் இருந்த அதிகாரியிடம் திட்டத்தின் விவரங்களை கேட்டபோது இங்கு என்ன பணி நடக்கிறது என்று கேட்டதற்கு அந்த அதிகாரி நக்கலாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் கூறியதாவது பொதுவாக அரசு வேலை நடைபெறும் பொழுது அந்தத் திட்டத்தின் பெயர், திட்ட மதிப்பீடு கால அளவு போன்ற விவரங்களை வைத்த பின்பு தான் பணிகள் தொடங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும், அதற்கு முற்றிலும் மாறாக இந்த வாறுகால் பணிகள் நடைபெறுவதாகவும், ஆனால் அதிகாரிகள் முறையாக விளக்கம் அளிக்காமல் மறைப்பதை பார்க்கும் பொழுது என்னை போன்றவர்களுக்கும் பொதுமக்களுக்கு இந்தத் திட்டத்தின் அளவு மற்றும் தரம் கண்டுபிடித்து புகார் அளித்தால் பணிகள் நின்றுவிடும். மேலும் யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க முடியாமல் போய்விடும் என்ற அச்சத்தில் அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தார்.
இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனால் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற முடியாமலும் அந்த பகுதியில் உள்ள கட்டிட உரிமையாளர் ஆக்கிரமிப்பு பிரச்சனை வரும்போதெல்லாம் அதிகாரிகளை பலமாக கவனித்து வருவதால் தான் அதை கை வைக்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாகவும், இதே இடத்தில் ஒரு சிறு வியாபாரி தவறு செய்து இருந்தால் அவர் அமைத்திருக்கும் கடையை அடித்து நொறுக்கி அப்புறப்படுத்தி இருப்பார்கள் பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டமா ?

மேலும் இந்த வாறுகால் திட்டத்தில் அடித்தளத்தில் முறையாக கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் அதன் மேலே சிமெண்ட் கலவைகளை போட்டு தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாக குற்றம் சாட்டி இந்த பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய முறையில் புகார் அளித்து புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவிக்கிறார், வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணன்.
- மாரீஸ்வரன்.