போலி விளம்பரங்கள் மூலம் மக்களிடம் இருந்து 350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்களில் 80 பேர் கைது !
பொதுமக்களிடம் ரூ.350 கோடி மோசடி செய்த 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும், ஆருத்ரா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் ஐஜி ஆசியம்மாள் நிருபர்களிடம் பேசிய போது… 1.1.2023 முதல் 15.5.2023 வரை 347 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 791 ரூபாய் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது 19 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 2023ம் ஆண்டுக்கு முந்தைய வழக்குகளில் கடந்த 1.1.2023ம் தேதி முதல் 16.5.2023ம் தேதி வரை காலக்கட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்த 49 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆருத்ரா ஹாரிஸ்தான் சமீபத்தில் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் இந்த மோசடி குறித்து இதுவரை நேரடியாக பேசாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின், முதல் முறையாக நேரடியாக கருத்து சொன்னார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நேரடியாக பேசினார்.
அதில், மக்களிடம் அதிகம் வட்டி.. அதாவது 23 முதல் 30 சதவிகிதம் மாத வட்டி கொடுப்பதாக கூறி மக்களிடம் இருந்து பணத்தை பெற்று உள்ளனர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேரிடம் இவர்கள் முதலீட்டை பெற்று உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 243 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று , அதை திருப்பியும் தராமல் ஏமாற்றி உள்ளனர்.
இது தொடர்பாக பலர் புகார்களை அளித்துள்ளனர். அந்த புகார்கள் மீது குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து இருக்கிறோம். இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் 22 பேருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறோம். 11 பேர் இதில் ஏஜெண்டுகள் என்று பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுவரை வங்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இவர்களின் 6 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன. இதில்தான் 2 வாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் வெளிநாடு தப்பி ஓடிச்சென்ற ராஜசேகர், ஷாராணி ஆகியோர் ரெட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆருத்ரா வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய ஏஜெண்டுகளான திருவள்ளூர் வரதராஜநகர் ராஜராஜசோழன் தெருவை சேர்ந்த சசிக்குமார், ராணிபேட்டை மாவட்டம் சோழிங்கட்டூர் அருகே ரெண்டடி கிராமத்தை சேர்ந்த உதயகுமார், ராணிபேட்டை மாவட்டம் சயனபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ், சென்னை ஆண்ரசன்பட் பகுதியை சேர்ந்த மாலதி, ராணிபேட்டை மாவட்டம் பெரும்புலிபாக்கம் அருகே உள்ள ஆவலூர் கிராமத்தை சேர்ந்த அசோக்குமார், வேலூர் மாவட்டம் காட்பாடி கிழிஞ்சூர் பகுதியை சேர்ந்த நவீன், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டை பஜனை கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் 2 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
இதேபோல், திருச்சியை தலைமையிடாக கொண்டு செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனம் மோசடி வழக்கில் தொடர்புடைய விடுதலைசிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் வந்த பிரபாகரன் என்பவரை கைது செய்துள்ளோம்.
ஆருத்ரா வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஆர்.கே.சுரேஷ் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கரை மாதங்களில் புதிய வழக்கு மற்றும் பழைய வழக்குகள் என மொத்தம் 80 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார்.