“ஜெய் ராம்’ பெயரில் நடக்கும் தாக்குதலை நிறுத்தக் கோரி மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம்!
இயக்குநர் மணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுரங் காஷ்யப், அபர்ணா சென் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்த 49 திரைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ‘இஸ்லாமியர்கள், தலித்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பிரதமர்
நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில், “ஜெய் ராம்’ பெயரில் பல தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மதத்தின் பெயரால் நடைபெறும் தாக்குதல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றவர்கள், “ஜனவரி 1, 2009 முதல் அக்டோபர் 29, 2018 வரை, 254 மதம் சார்ந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. இதில், 91 பேர் உயிரிழந்துள்ளனர்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், “எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. மக்கள் இந்த அரசை எதிர்த்தால், அவர்களை சிறையில் அடைப்பதோ அல்லது ஆண்டி-நேஷ்னல், அர்பன் நக்சல் என்று முத்திரை குத்தவோ கூடாது. அரசியலமைப்பு சட்டம் 19படி, பேச்சுரிமை உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “நாடாளுமன்றத்தில், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நரேந்திர மோடி கண்டித்துப் பேசியது போதாது. குற்றம் புரிந்தவர்கள், வெளியில் வரமுடியாதபடி சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். த நாட்டில் யாரும் அச்சத்தோடு வாழக்கூடாது” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியை விமர்சிப்பது, தேசத்தை விமர்சிப்பது என்று பொருள் ஆகாது. எதிர்ப்பு நசுக்கப்படாமல் இருந்தால்தான் தேசம் இன்னும் பலமாக மாறும். எங்களது கோரிக்கை சரியான முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில், இயக்குநர் மணிரத்னம், ரேவதி, அடூர் கோபாலகிருஷ்ணன், அனுரங் காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, கொங்கனா சென் சர்மா உட்பட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.