5-A செட்டில்மென்ட் – EOW போலீசாரின் எச்சரிக்கை – நியோமேக்ஸ் மோசடி வழக்கு எந்த நிலையில் இருக்கிறது ?
5-A செட்டில்மென்ட் – EOW போலீசாரின் எச்சரிக்கை – நியோமேக்ஸ் மோசடி வழக்கு எந்த நிலையில் இருக்கிறது ? நியோமேக்ஸ் மோசடி வழக்கில், 5A செட்டில்மென்ட் உள்ளிட்டு தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேள்வி – பதில் பாணியில் விளக்கம் அளித்திருக்கிறார், சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.
கேள்வி: நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களுக்கு உண்மையில் அதன் முதலீட்டாளர்களுக்கு பணமாகவோ, இல்லை நிலமாகவோ செட்டில்மென்ட் செய்து கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா?
பதில்: நிச்சயமாக இல்லை என்று உறுதியாக கூறமுடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான முறையில் பணமாக தீர்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், உயர்நீதி மன்றத்தின் உத்தரவை செயல்படுத்தி இருக்கும். தங்களிடம் உள்ள நிலங்களை 5A செட்டில்மென்ட்டிற்கு கொடுத்து தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் இருப்பின், நீதி மன்றத்தை நாடி நிலமாக தீர்வு கொடுப்பதற்கு தேவையான உத்தரவு பெற முயற்சி செய்திருக்கும். இந்த இரண்டையும் இன்று வரை செய்யாததால், நல்ல எண்ணங்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
கேள்வி : மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தீர்வு காண்பதற்கு, நிறுவனம் எதாவது முயற்சி செய்திருக்கிறதா?
பதில்: சிறு முயற்சி கூட எந்த விதத்திலும் செய்ய வில்லை என்பது பலரும் அறிந்த விசயம். வங்கி கணக்குகள் மூலமாக முடக்கப்பட்ட பணத்தை மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக கொடுப்பதற்கு எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஒரு பார்மாலிட்டிக்கு கூட இதுவரை கூறவில்லை. நிறுவனத்தின் அன்றாட செலவுகளுக்கு வங்கியில் உள்ள தொகையை விடுவிக்க வேண்டும் என்று TNPID நீதி மன்றத்திடம் கோரியது. அதில் சுய நலம் இருந்தது.
கேள்வி: 5A செட்டில்மென்ட் விதி முறைப்படி, முறையான தீர்வு காண்பதற்கு, நிறுவனம் இதுவரை முயற்சி செய்திருக்கிறதா?
பதில்: நிச்சயமாக இல்லை என்று கூற முடியும். அதற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை இன்றைய செய்தித் தாள்களில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திகள் மற்றும் உயர்நீதி மன்றம் கொடுத்த தீர்ப்புகளே சாட்சி. சட்டப்படி 5A செட்டில்மென்ட் எப்படி செய்ய வேண்டும் என்று நிறுவனத்திற்கு தெரியும். அப்படி செய்தால் நிறுவனத்தின் பல கெட்ட எண்ணங்கள் நிறைவேறாது என்பதால் சுயநலத்திற்காக குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்து இரண்டு முறை தோற்று போய் விட்டது. முதலில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி மூலமாக 5A செட்டில்மென்ட் செய்து முடிக்க அனுமதி வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தை நாடியது, அது சரியான தீர்வை ஏற்படுத்தாது என நீதி மன்றம் நிறுவனத்தின் மனுவை ரத்து செய்து விட்டது.
இரண்டாவது முறையாக DRO அலுவலகம் மூலமாக நேரடியாக செய்ய வேண்டியதை TNPID court மூலமாக அட்வகேட் கமிஷனர்களை வைத்து தனது கெட்ட எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்தது, அதற்கு தடை விதித்து விட்டார்கள். எதை செய்ய நினைத்தாலும் முறையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறுவனத்திற்கு சிறிதளவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது முறையாக இப்பொழுது 5A செட்டில்மென்ட் என்று, அங்கீகரிக்கப்படாத முறையில் செய்து கொண்டிருப்பது 100 சதவீதம் தோல்வியில் முடியும் என்பதை உறுதியாக கூற முடியும். பாதிக்கப்பட்டவர்கள், எது நடக்கும், எது நடக்காது என புரிந்து செயல்படுங்கள். யார் வாருங்கள் இதை இப்படி செய்து கொடுக்கிறோம் என அழைத்த உடன் நமக்கு தீர்வு கிடைத்து விடும் என்று அங்கு ஓடாதீர்கள். சட்டத்தை மீறி அவர்களால் ஒன்றும் செய்து விட இயலாது. தவறான வழிகளில் செல்பவர்களுக்கு துணை போக வேண்டாம். இறுதியில் தோல்வியை சந்திக்க நேரிடும் பொழுது உங்கள் மனது வேதனைக்கு உள்ளாகும். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
கேள்வி: இப்பொழுது நடைபெறும் 5A செட்டில்மென்ட் என்ற நாடகம் எப்பொழுது தடை செய்யப்படும்?
பதில்: சட்ட போராட்ட குழு சார்பாக ஓரிரு வாரங்களில் மாண்புமிகு உயர்நீதி மன்றத்தில் நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பலன் பெரும் வகையில் பொது நலனுடன் நான்கு வழக்குகள் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளின் விசாரணையின் போது, முறையற்ற 5A செட்டில்மென்ட் என்ற இந்த நீதி மன்ற அவமதிப்பு செயலை செய்து கொண்டிருப்பவர்கள் பற்றி முறையாக தெரிவித்து, நீதி மன்றம் தானாக முன்வந்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும் அளவிற்கு வழக்கின் தன்மை அமையும்.
கேள்வி: பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமாக வேண்டிய அனைத்து தரமான நிலங்களை இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 5A செட்டில்மென்ட் நாடகத்தின் மூலமாக தீர்வு காண்பதற்கு பயன்படுத்தப்படுமா?
பதில்: இல்லை. இது காலம் கடத்துவதற்காக நிறுவனத்தார்களால் அவர்களுக்கு துணை போகும் சிலரால் நடத்தப்படும் ஒரு நாடகம். நிறுவனத்தார்களுக்கு நல்ல எண்ணங்கள் இல்லை என்பதை அவர்கள் அனைத்து சொத்துக்களுக்கும் தீர்வு காண்பதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையை நிர்ணயம் செய்து அதிகாரப் பூர்வமாக வெளிப்படையாக சமர்பிக்கவில்லை என்பதில் இருந்து புரிந்து கொள்ள இயலும். இது தானாக தடை பெற வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்படும் ஏமாற்று வேலை. சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் எதிலும் நியாயம், உண்மை மற்றும் நேர்மை இருக்காது. எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டோம் என்பதை நிறுவனம் வெளிப்படையாக அதன் செயல்கள் மூலம் காட்டிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பலர் உண்மையை புரிந்து கொள்ளாமல் எதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்காதா என மோசடி செய்ய திட்டமிட்டு செயல்படுபவர்களிடம் சென்று மீண்டும் மன கவலைக்கு ஆளாகிறார்கள்.
கேள்வி: இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 5A செட்டில்மென்ட் நாடகத்தில் பங்கேற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் ஏற்படுமா.
பதில்: நிச்சயமாக இல்லை என்பதை உறுதியாக கூற இயலும். முதலில் நிலமாக செட்டில்மென்ட் கொடுப்பதற்கு சட்டத்தில் வழி முறைகள் ஏற்படுத்தப்படவில்லை. சிறப்பு சலுகை வேண்டும் என்ற உத்தரவை பெற நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நீதி மன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு எந்த வித நியாயமான செயல்களையும் வெளிப்படையாக செய்யவில்லை. நீதி மன்றத்தில் நியாயமான கோரிக்கைகளை வைத்து கடுமையான எதிர்ப்பு மனு அதிகளவில் தாக்கலாகும் என்பதால் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு நிச்சயமாக கிடைக்காது என்பது தான் உண்மை.
கேள்வி: புகார் கொடுக்காதவர்களுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம் எங்களுடன் நிறுவனத்தார்கள் இணக்கமாக செயல்படுகின்றனர் என திருச்சியை மையமாக வைத்து செயல்படும் சீனியர் சிட்டிசன் சங்கத்தினரை நம்பலாமா?
பதில்: நம்ப வேண்டாம். பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தங்களது எச்சரிக்கையை செய்தித் தாள்கள் மூலமாக வெளியிட்டிருப்பதை பலரும் அறிவர். அதையும் மீறி இனிமேல் செட்டில்மென்ட் விசயமாக மக்களை திசை திருப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வைப்பதற்கான வேலைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். சுந்தர் சொல்லும் அனைத்தும் பொய்த்து விடும். அவர் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை. பொய் பித்தலாட்டம் என்பது விரைவில் நிரூபணம் ஆகி விடும். நேர்மையான தீர்வு அவர் மூலமாக நிச்சயமாக கிடைக்காது. நிறுவனத்தை பற்றி நன்கு புரிந்து கொண்டவர்கள் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் தன் சுயநலத்திற்காக ஏதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார். அதனால் எந்த பலனும் ஏற்படாது.
கேள்வி: இரண்டு சங்கங்கள் செட்டில்மென்ட் விசயமாக பாதிக்கப்பட்டவர்களை திசை திருப்புவதால் நடந்து கொண்டிருக்கும் வழக்கிற்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு சங்க நிர்வாகிகள் எவ்வகையில் தண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பதில்: சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கான வழி முறைகளை தேர்ந்தெடுப்பதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. அவர்களை பல விதங்களில் நம்ப வைத்து புகார் கொடுக்க விடாமல் செய்வதால், பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நிலை அறிந்து அதன்பின் புகாரை காலதாமதமாக சமர்பிப்பதால் வழக்கு விசாரணையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை. மீண்டும் மோசடி செய்து காலம் கடத்தி விடுகிறார்கள். நாங்கள் 5A செட்டில்மென்ட்டை ஒரு சங்கம் மூலமாக செய்து முடித்துக் கொள்கிறோம் என உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகளுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு தராமல் புலன் விசாரணையை விரைவில் முடிக்க விடாமல் பல இடையூறுகளை ஏற்படுத்து கின்றனர். இரண்டு சங்க நிர்வாகிகள் மீது பல்வேறு மோசடி வழக்குகள் விரைவில் பதிவு செய்யப்படும். வழக்கை காலதாமதப் படுத்துவதற்காக மக்களை சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட வைத்து மோசடி நிறுவனத்திற்கு மீண்டும் மோசடி செய்ய துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
கேள்வி: சட்ட போராட்ட குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன.
பதில்: a). 09/09/2024, திங்களன்று காலை 10: 00 மணியளவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக ஒரு மனுவும். DGP அவர்களுக்கு அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் மூலமாக ஒரு மனுவும் கொடுக்க இருக்கிறோம்.
b). ஓரிரு வாரத்தில் உயர்நீதி மன்றத்தில் முன்பு தீர்மானம் நிறைவேற்றிய அந்த நான்கு வழக்குகளை தொடுக்க இருக்கிறோம்.
c). மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களை சந்திக்க முறையாக அனுமதி பெற்று சில அமைச்சர்கள் மூலமாக நேரடியாக தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை சந்தித்து, துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு கொடுத்து நடந்து கொண்டிருக்கும் விசயங்களை எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
d). சிவில் சூட் (கமர்சியல் சூட்), தனி நபராகவோ இல்லை குழுவாகவோ அந்தந்த மாவட்ட நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்க விரும்புபவர்கள் சார்பாக வழக்கு தொடுப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். ஒரு வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்ற கட்டணம் ரூபாய் ஆயிரம். வழக்கறிஞர் கட்டணம் தனி. அவர் அவர்களுக்கு நம்பிக்கையான வழக்கறிஞர்களை அவர் அவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும். வழக்கின் மாதிரி மனுவை மற்றும் தேவையான ஆதாரங்களை குழுவில் பதி விடுவோம்.
மூன்று மாதத்தில் சமரச தீர்வை நீதி மன்றம் மூலமாக நிறுவனம் ஏற்படுத்த வேண்டும், தவறினால் மனுதாரர் வழக்கு மூலம் கேட்கப்படும் தீர்வு தொகைக்கு மூன்று சதவீதம் நீதி மன்றக் கட்டணம் செலுத்தினால், விரைவான நீதி விசாரனை நடைபெற்று விரைவில் தீர்ப்பு கிடைப்பதற்கான வழி வகைகள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. நிறுவனத்தின் சொத்துக்களை, சொத்து உள்ள, மாவட்ட நீதி மன்றம் மூலமாக ஏலம் விட்டு பணமாக்கி மனுதாரர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இல்லை அந்த சொத்துக்களை நீதி மன்றம் மூலமாக மனுதாரர் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம். இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாதம் சுமார் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்படும். நிறுவனம் ஒழித்து வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது.
e) உயர்நீதி மன்றத்தில் நான்கு வழக்குகளுக்கும் நேர்மையான தீர்ப்பு நமக்கு சாதகமாக கிடைக்கவில்லை என்றால், உடனடியாக உச்ச நீதிமன்றம் செல்ல தயாராக இருக்கிறோம். அங்கு நமக்கு சாதகமான தீர்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. ஜாமீன் ரத்து வழக்கை முக்கியமானதாக கருதுகிறோம். அண்மையில் உச்ச நீதி மன்றம், நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் பொழுது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கீழமை நீதி மன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பலர் அறிந்த விசயம்.
இந்த வழக்கில் நடப்பதோ நேர் எதிர் மாறான செயல்கள். முக்கிய இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியில் இருக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்புகள் இல்லை. தங்களின் பண பலம் மற்றும் மறைமுக அதிகார வர்க்கத்தின் செல்வாக்கை பயன்படுத்தி எந்த விதத்திலும் தீர்வு ஏற்படுத்த ஒத்துழைக்க மாட்டார்கள், தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்தி வழக்கை கால தாமதப்படுத்த முயற்சி செய்வார்கள். கயவர்களை உள்ளே அனுப்பி விட்டாள், அதிகாரிகள் தங்களின் வேலைகளை திறம்பட செய்து விரைவில் தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
கேள்வி: பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்படுவதால் யாருக்கு நல்லது.
பதில் : நிறுவனத்திற்கும் அதற்கு துணை போகும் சங்க நிர்வாகிகளுக்கும் நல்லது.
நிறுவனம் ஒரு சங்கம் மூலமாக பெரும்பாலோரை புகார் கொடுக்க விடாமல் தடுத்து விடுகிறது. அதனால் பல வகைகளில் நிறுவனம் இலாபம் அடைகிறது. புகார் கொடுக்க வில்லை என்றால் அந்த முதலீட்டாளருக்கும் நிறுவனத்திற்கும் பிரச்சினை இல்லை என்று தானே அர்த்தம். அதனால் அதில் சட்டம் மற்றும் நீதி மன்றம் தலையிடாது.
அப்பொழுது அது நிறுவனத்திற்கு இலாபம். 5A செட்டில்மென்ட் என்று கூறி ஆகாத வேலைகளை செய்து காலம் கடத்துவதால் நிறுவனத்திற்கு இலாபம். எவ்வளவு நாட்கள் அவர்கள் வெளியில் இருந்தால் அவ்வளவு அவர்களுக்கு நல்லது. பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களை விற்று புதிய தொழில் தொடங்கி நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்பதாக சிவகாசி பொறியாளர் ராமமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.