நீ செத்தாலும் பரவாயில்லை … என் சொத்தை விற்றாவது வெளியே வந்துவிடுவேன் !
சாத்தான்குளம் பாகம் – 03
சாத்தான் குளம் வழக்கில் மிகவும் முக்கியமான சாட்சி தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி. காவலர் ரேவதியிடம் தைரியம் சொல்லி உண்மையை வெளிவர காரணமாக இருந்தவர். உண்மையை வெளி கொண்டு வந்து விட்டு சொந்த ஊர் விட்டு 350 கிமீ தொலைவில் பணி மாறுதல் பெற்று குடும்பத்துடன் இடம் பெயர்ந்தவர். உயர் அதிகாரிகள் சட்ட விரோதமாக உத்தரவு போட்டால் கட்டுப்பட கூடாது என்று காவலர் ரேவதியிடம் நெருக்கடியான நேரத்தில் அறிவுரை வழங்கியவர். சாத்தான் குளம் காவல் நிலைய எழுத்தராக (ஸ்டேசன் ரைட்டர்) பணியாற்றியவர். நீதிபதி பாரதிதாசன் அவர்களிடம் இவர் கொடுத்த தெளிவான வாக்குமூலம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை பெற்று கொடுக்க காரணங்களில் ஒன்றாகும்.
நீதிமன்றத்தில் பியூலா செல்வகுமாரி சொன்ன சாட்சியத்திலிருந்து …
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 12.08.2019 முதல் 30.06.2020 வரை நிலைய எழுத்தராக பணிபுரிந்து வந்தேன். சம்பவம் நடந்த தேதி 19.06.2020 ம் தேதியன்று காலை 8 மணியில் இருந்து இரவு 21 (இரவு 9) மணி வரை நிலைய எழுத்தராக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியில் இருந்தேன்.
அன்று இரவு 7.45 மணிக்கு காவல்ஆய்வாளர் அவர்கள் வாகனத்தில் இருந்து பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், பின்னர் பெயர், விலாசம் கேட்டு தெரிந்த ஜெயராஜ் என்பவரை அழைத்து காவல்நிலையம் வந்தனர். அதன் பின்னர் காவலர் முத்துராஜ் காவல்நிலையம் வந்தார். அவரைத் தொடர்ந்து காவலர்கள் முருகன், செல்லத்துரை ஆகியோர் வந்தனர்.

உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்கள் ஜெயராஜ் என்பவரை கைது அறைக்கும், மாடிப்படி அறைக்கும் இடையில் நிற்க வைத்து, ஜெயராஜ் என்பவரை கையை நீட்டச் சொல்லி, லத்தியால் கையில் சாத்தான்குளத்தில் நீ பெரிய ரவுடியா, போலிசை அடிக்க வேண்டும் என்று சொன்னீங்களாமே, இப்போ போலிசை அடிங்க என்று சொல்லி ஜெயராஜை நான்கு, ஐந்து அடிகள் அடித்தார்.
ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மகனான பென்னிக்ஸ் என்பவர் காவல்நிலையத்திற்குள் வந்தார். உள்ளே வந்து என்னுடைய அப்பாவை எதற்கு அழைத்து வந்தீர்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டார். எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் காவலர் முத்துராஜிடம் பென்னிக்சை வெளியில் இருக்கும்படியும், பின்னர் அழைப்பதாகவும் கூறினர். காவலர் முத்துராஜ் பென்னிக்சை வெளியில் இருக்கும்படி கூறினார். பென்னிக்ஸ் வெளியில் செல்லாமல் காவலர் முத்துராஜ் என்பவருடைய காலர் சட்டையை வலது கையில் பிடித்து தள்ளிவிட்டார்.
பின்னர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் பென்னிக்ஸ் என்பவரை அடிக்க சென்றார். பென்னிக்சை பிடிக்க காவலர்கள் முத்துராஜ், முருகன், செல்லத்துரை, பால்துரை எஸ்.ஐ., ஆகியோர் பென்னிக்சை பிடிக்க முயன்றார்கள். அவரை பிடிக்க முடியவில்லை. எஸ்.ஐ.பால்துரை வலது முழங்கையை வைத்து பென்னிக்சின் முதுகின் பின்புறத்தில் குத்தினார். பென்னிக்ஸ் நிலைதடுமாறி நின்றுவிட்டார். காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் அவருடைய அறையில் இருந்து வெளியே வந்து, போலிசை தள்ளிவிட்டு விட்டான். நீங்கள் சும்மாவா இருக்கிறீர்கள் என்று போலிசாரை சத்தம் போட்டார்.

பின்னர், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை உடைகளை கழற்றி விட்டு வரும்படி கூறியதால், அவர்கள் உடைகளை கழற்றிவிட்டு மேற்படி உடைகளை காவல்நிலையத்தில் இருந்த கூடையில் உடைகளை போடச் சொன்னார்கள். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்நிலையத்தில் கைதி அறைக்கும், மாடிப்படி ஏறுவதற்கும் இடையே உள்ள இடத்தில் நிற்க வைத்து அடித்தார்கள்.
எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் அடித்தார். காவலர்கள் முருகன், சாமத்துரை, வெயிலுமுத்து, செல்லத்துரை ஆகியோர் கையைப் பிடித்துக் கொண்டார்கள். எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் லத்தியால் பிட்டப்பகுதியில் அடித்தனர். ஜெயராஜை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் அடிக்கும் போது எனக்கு சுகர், பிரஷ்ஷர் உள்ளது என்று கூறியதால் அதன்பிறகு அவரை அடிக்கவில்லை.
காவல்ஆய்வாளர் ஸ்ரீதர் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து பாலு என்ன சத்தம் கேட்கவில்லை என்று கேட்டார். அதன் பிறகு பென்னிக்சை மாடிப்படிக்கும், கைதிஅறைக்கும் இடையே உள்ள சுவற்றிற்கு கீழே உட்கார வைத்து எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.பால்துரை, காவலர்கள் முருகன், சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோர்கள் பென்னிக்சின் இரண்டு கால்களையும் விரித்தார்கள். பென்னிக்ஸ் வலிக்குது, அய்யோ அம்மா என்று கத்தினார். அப்போது ஜெயராஜ் கைதிஅறையில் இருந்தார். அப்போது அவர் தனக்கு டி.எஸ்.பி. தெரியும் என்றும், அவரை வைத்து உங்களுடைய வேலையை காலி செய்துவிடுவேன் என்று சொன்னார்.
சிறிது நேரத்தில் பென்னிக்ஸ் அங்கிருந்த அனைத்து காவலர்களிடமும் காலில் விழுந்து நான் தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். அதன்பிறகு சிறிதுநேரம் கழித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அவரது அறையில் இருந்து வந்து என்ன பாலு சத்தம் கேட்கல, இன்னும் அடிக்காமல் இருக்கீங்க என்று கூறினார்.
அதன்பிறகு எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை உதவி ஆய்வாளர் அறைக்கும், எழுத்தர் அறைக்கும் இடையில் உள்ள சுவற்றில் வைத்து பென்னிக்சின் வலது கையை தாமசும், செல்லத்துரையும், இடது கையை சாமத்துரை, வெயிலுமுத்து ஆகியோர் பிடித்திருந்தனர். பென்னிக்சின் காலை நகர்ந்து போகாமல் இருக்க முருகன் காலை பிடித்துக் கொண்டார்.
எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜை பிட்டப்பகுதியில் லத்தியால் மாறிமாறி அடித்தார்கள். கொஞ்ச நேரம் இடைவேளை விட்டார்கள். பின்னர் பத்து நிமிடம் கழித்து பென்னிக்சையும் அதே இடத்தில் ஜட்டியை கழற்றிவிட்டு வைத்து அடித்தார்கள்.
… ஹாலில் உள்ள டேபிளில் பென்னிக்சை குப்புற படுக்க வைத்திருந்தார்கள். மற்ற காவலர்கள் பென்னிக்சை பிடித்திருந்தனர். எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் அவரை அடித்தார். அவ்வாறு அடிக்கும் போது நீ செத்தாலும் பரவாயில்லை. என் சொத்தை விற்றாவது நான் வெளியே வந்துவிடுவேன் என்று கூறி அடித்தார்.
தொடரும் …
வழக்கறிஞர் Dr நல்வினை விஸ்வராஜு .








Comments are closed, but trackbacks and pingbacks are open.