தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவும் – கட்டணங்களை அரசே நிர்ணயிக்கவும் – தமிழ்நாடு அரசுக்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு வேண்டுகோள்.
சமீபத்தில் தமிழ்நாடு தகவல் ஆணையம் வழங்கியுள்ள முக்கிய ஆணையில் (வழக்கு எண்: SA4827/A/2023 & SA17794/A/2023), தனியார் மற்றும் CBSE பள்ளிகள் வகுப்புவாரியான கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களிலும், பள்ளி இணையதளங்களிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசும் பள்ளிக்கல்வித் துறையும் உடனடியாக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது:
1. அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தனியார், CBSE மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புவாரியான கட்டண விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். இவ்வாறு பள்ளி வளாகத்திலும், இணையதளத்திலும் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்.
3. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கல்வியை வணிகமாக்கும் போக்கை தடுத்து, வெளிப்படையான மற்றும் சமத்துவமான கல்வி சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசும், பள்ளிக்கல்வித்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.







Comments are closed, but trackbacks and pingbacks are open.