நியோமேக்ஸ் : வேகமெடுக்கும் இரண்டாம் கட்ட ஏலம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கு விவகாரத்தில் தற்போது இரண்டாம் கட்ட ஏலம் நடைமுறையில் இருந்துவருகிறது. முதற்கட்டமாக நடைபெற்ற ஏலத்தில் வெறுமெனே 150 கோடி அளவுக்கே ஏலம் போன நிலையில், தற்போது ஒரு வார காலத்தில் 360 மனைகள் ரூ.53,02,82,534/-க்கு ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாக அமைந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இ.எம்.டி. கட்டணம் இல்லாமல் ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்களது பாண்டுகளின் மதிப்பைவிட கூடுதல் விலை மதிப்புள்ள இடங்களை தேர்வு செய்துவிட்டு பின்னர் ஏலத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவிக்கும் போக்கு தொடர்வதை நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. அவரவர்களின் பாண்டுகளின் மதிப்புக்கு குறையாமல் ஏலம் எடுப்பவர்களை பொறுத்தமட்டில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், அவர்கள் ஏலத்தை நடத்தும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கான சேவை கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.
ஆனால், பாண்டுகளின் மதிப்பை காட்டிலும் கூடுதலாக ஏலம் எடுத்தவர்கள், வித்தியாசத் தொகையை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கட்டியாக வேண்டும் என்ற நிலையில் அதனை மறுத்து ஏலத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு அவ்வாறு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பை தவறுதலாக பயன்படுத்துபவர்களிடம் ரூ25,000 அபராதம் வசூலிக்கப்படும் என சுட்டிக்காட்டியிருக்கிறது.
மேலும், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக இணைந்து ஏலத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் நீதிமன்றம் தற்போது அனுமதித்துள்ளது. ஒரே குடும்ப உறுப்பினராகவோ, குடும்ப நண்பராகவோ இருந்தாலும் அவரவர்கள் தனிப்பட்ட அடையாள சான்றுகளுடன் சுய உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதித்திருக்கிறது, நீதிமன்றம்.
குற்றாலம் ரிசார்ட்ஸ், விருதுநகர் டிரைவ்-இன் ஹோட்டல், கொடை ரோடு டிரைவ்-இன் ஹோட்டல் மற்றும் உச்சிப்புளி ரிசார்ட்ஸ் உள்ளிட்டு நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்ற சொத்துக்களையும் இணையாக ஏலத்தில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை நீதிமன்றம் முடுக்கிவிட்டிருக்கிறது.
ஜே.வி. பத்திரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத விவகாரத்தை பொறுத்தமட்டில், அவர்கள் தற்போதைய நிலையில் ஏலத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள்தான் என்றும்; அவர்களின் முதலீட்டு தொகையை நிறுவனத்தரப்புடன் இணைந்து உறுதி செய்தபிறகு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
பெயிலை கேன்சல் செய்வதற்கு மூன்று நிமிடங்கள்கூட ஆகாது என்று தெரிவித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, சிறிய அளவில் முதலீடு போட்ட பல முதலீட்டாளர்கள் பரிதவித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஏதேனும் குறைந்தபட்ச நிவாரணத்தையாவது பெற்றுத்தந்துவிட வேண்டும் என்றே இந்நீதிமன்றம் விரும்புகிறது என்றும் அதற்கேற்பவே இந்த விவகாரத்தை தான் கையாண்டு வருவதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.