“அடுத்த விஜய் தனுஷ் மருமகன் தான்” – டைரக்டர் டேஞ்சர் சிக்னல்!
‘சினிமா மீடியா & எண்டெர்டெய்ன்மெண்ட்’ தினேஷ் ராஜுடன் இணைந்து ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டெர்டெய்னர்ஸ் தயாரிக்கும் படம் ‘லவ் ஓ லவ்’. மகேஷ் ராஜேந்திரன் என்பவர் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் பவிஷ் நாராயணன், நாகதுர்கா, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார், செளந்தர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஜூலையில் ரிலீசாகும் ‘லவ் ஓ லவ்’-ன் டிரெய்லர் & பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூன்.15-ஆம் தேதி மதியம் நடந்தது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான தினேஷ் ராஜ் பேசும் போது, “இந்தக் கதையின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து தயாரித்துள்ளோம். ஜென் இசட் இளசுகளுக்கு இப்படம் ரொம்பவும் பிடிக்கும். இதற்கடுத்து வரிசையாக இரண்டு படங்களைத் தயாரிக்கிறோம். எங்களின் முயற்சிக்கு மீடியாக்களின் ஆதரவு தேவை” என்றார்.

மற்றொரு தயாரிப்பாளர் தனஞ்செயன், “நான்கு மாதங்களில் முடித்துவிடலாம் என ப்ளான் பண்ணினோம். ஆனால் எக்ஸ்ட்ரா ஒரு மாதமாகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் டைரக்டரின் சுறுசுறுப்பால எல்லாமே எளிதாக முடிந்தது. இந்த நிகழ்ச்சி ஒரு அறிமுகம் தான். அடுத்தடுத்து சில புரமோ நிகழ்ச்சிகளை நடத்திவிட்டு ஜூலையில் ரிலீஸ் பண்ணுகிறோம். அப்புறம் முக்கியமான விஷயம் என்னன்னா, ஒரு மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்து மூணு மணிக்குள் முடித்துவிட்டோம். சில நிகழ்ச்சிகளை நாலு மணி நேரம், ஐந்து மணி நேரம் நடத்தி பத்திரிகையாளர்களை டயர்டாக்குகிறார்கள். அவர்கள் டயர்டானால் நம்ம நியூஸும் டல்லாகிரும். இதத்தான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லிக்கிட்டிருக்கேன்”
ஹீரோ பவிஷ் பேசும் போது, “நான் எல்லா மேடைகளிலும் தனுஷ் சாருக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். ஏன்னா அவர் தான் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்திய குரு. அதே போல் இந்தப் படத்தில் லெஜெண்ட் டைரக்டர்களான ரவிக்குமார் சார். செல்வராகவன் சாருடன் நடித்தது பெரும் பாக்கியம். அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். என்னுடைய வளர்ச்சிக்கு பத்திரிகைகள் துணை நிற்க வேண்டும்” என்றார்.
தெலுங்கானாவில் இன்ஸ்டாவில் பல மில்லியன் ஃபாலோயர்ஸை வைத்திருக்கும் குச்சிப்புடி நடனக் கலைஞரான நாகதுர்கா தான் இந்த ‘லவ் ஓ லவ்’ மூலம் தமிழில் எண்ட்ரியாகிறார்.
நடிகர் கேபிஒய் பாலா பேசும் போது, “சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் என்னைப் பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் சார், சீக்கிரம் ஹீரோவாகிருவடான்னு சொன்னார். அது இப்ப பலிச்சிருச்சு. இந்தப் படத்தின் கதை முழுவதும் எனக்குத் தெரியும். படம் சூப்பரா வந்துருக்கு” என்றார்.
அதிரடி நடிகையான வனிதா விஜயகுமார், “ஜூனியர் விஜய் தான் இந்தப் படத்தின் ஹீரோ பவிஷ். தமிழ் சினிமாவில் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”.
அடுத்துப் பேச வந்த ‘திருடா திருடி’ டைரக்டர் சுப்பிரமணிய சிவாவின் பேச்சு தான் பகீர் கிளப்பியது. தனுஷின் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கும் சுப்பிரமணிய சிவா, தனுஷ் குடும்பத்துடன் நெருங்கிய நட்புடனும் பாசமிகு உறவுடனும் இருப்பவர் . தனுஷின் சகோதரி டாக்டர் விமலாவின் மகன் தான் இந்த ‘லவ் ஓ லவ்’-ன் ஹீரோ. சின்ன வயசுலிருந்தே பவிஷைத் தெரியும் என்பதால் ரொம்பவே ஓவராக புகழ்ந்து தள்ளி புல்லரிக்க [ யாருக்கு… யாருக்கோ] வைத்தார் சுப்பிரமணிய சிவா.
“முதல் படமான ‘நிலவுக்கு என்மேன் என்னடி கோபம்’ படத்தைவிட இப்படத்தில் நடிப்பில் பல மடங்கு முன்னேறியிருக்கான் பவிஷ். அதைவிட சூப்பரா டான்ஸ் ஆடுறான். இப்ப சிஎம்மா இருக்கும் விஜய்யும் சூப்பரா டான்ஸ் ஆடுவாரு. நல்லா டான்ஸ் ஆடும் ஹீரோக்களைத் தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதனால் அடுத்த விஜய்யான பவிஷையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். கேரியரின் உச்சத்துக்குப் போவான் அவன்” என பவிஷே வெட்கப்படும் அளவுக்கு வில்லுப்பாட்டு பாடினார் சுப்பிரமணிய சிவா.
கே.எஸ்.ரவிக்குமார் பேசும் போது தன்னுடைய வீட்டிற்கு டைரக்டர் மகேஷ் ராஜேந்திரன் கதை சொல்ல வந்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பவிஷைப் பார்த்து “ஆமா நீ செல்வராகவனை மாமான்னு கூப்பிடமாட்டியா? சார்னு தான் மேடையில சொல்றே” என கமெண்ட் அடித்துவிட்டு, கேபிஒய். பாலாவைப் பார்த்து “ஹீரோங்கிறத மண்டையில ஏத்திக்கிறாத” என செம பஞ்ச் வைத்தார். இந்த ‘பஞ்ச்’ அடுத்த விஜய்க்கும் சேர்த்து தான்.
தற்குறித்தனமாகப் பேசி குழந்தைகளைத் தூண்டிவிட்டு, பெரியவர்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்தார் டேஞ்சர் விஜய். இப்ப பவிஷையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்னு அடுத்த டேஞ்சர் சிக்னல்’ போட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.