ஏ.ஐ. டெக்னாலஜி … ஆன்லைன் லாட்டரியில் மாபெரும் மோசடி !
ஏ.ஐ. டெக்னாலாஜி | ஆன்லைன் லாட்டரியில் மாபெரும் மோசடி !
தமிழகத்தில் என்னதான் லாட்டரி விற்பணைக்கு 2003 ஆம் ஆண்டிலிருந்து தடை இருப்பதாக சொல்லப்பட்டாலும், தங்குத்தடையின்றி ஆன்லைன் லாட்டரி சக்கைப்போடு போட்டுதான் வருகிறது. அவ்வப்போது, வெளியாகும் போலீசாரின் கைது நடவடிக்கைகளே இதற்கு சான்றாகவும் இருக்கின்றன.
நமது அங்குசம் இணையத்திலும், தொடர்ந்து கள்ள லாட்டரி விற்பணை குறித்த செய்திகளை புகைப்பட ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியும் வந்திருக்கிறோம்.

ஆனால், போலீசாரின் கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயப்படாமல் துணிச்சலாகவே கள்ள லாட்டரி பிசினஸை தொடர்ந்து வருகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விசயமாக மாறியிருக்கிறது.
மூனு சீட்டு லாட்டரி, கேரளா லாட்டரி, ஆன்லைன் லாட்டரி என பல வடிவங்களில் இந்த லாட்டரி விற்பணை நடைபெற்று வருவதாக சொல்கிறார்கள். பெரும்பாலும் மூனு சீட்டு லாட்டரி விற்பணையில் மாற்றுத்திறனாளிகளை, ஆதரவற்ற மூத்த குடிமக்களைத்தான் ஈடுபடுத்தி வருகிறார்கள். போலீசாரும் கருணை பார்த்து பெயருக்கு ஒரு கேசை போட்டு விட்டுவிடுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
வாட்சப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பக்கா நெட்ஒர்க்கை கட்டமைத்திருக்கிறார்கள். தனி வாட்சப் குழுக்களை உருவாக்கி அதில் லாட்டரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பழைய உறுப்பினரின் பரிந்துரை இல்லாமல், புதியதாக எவர் ஒருவரும் இத்தகைய குழுவில் இடம்பெற்றுவிடமுடியாது. கூகுள்பே, போன்பே, யு.பி.ஐ. பணபரிவர்த்தனைகளில், இதனை சாத்தியமாக்கியும் வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் 20 இலட்சம் வரையில் புழங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.

இதையெல்லாம்விட கொடுமை. நாளுக்கு நாள் மாறும் பங்குசந்தை குறியீட்டு எண்களை கூட, குலுக்கல் நடைமுறைகளில் ஒன்றாக பாவித்து வருகிறார்கள் என்பதுதான். கேரளா மற்றும் அசாம் மாநிலத்தில் எந்த எண்ணில் பரிசு விழுகிறதோ, அதே எண்ணின் கடைசி மூன்று இலக்கங்களை தீர்மானிக்கிறார்கள். இதில் இன்னும் உச்சக்கட்ட கொடுமை, அன்றைய நாளில், அவரவர்கள் விரும்பிய எண்களை தேர்வு செய்து முடித்தபிறகு, ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் எவருமே தேர்வு செய்யாத எண்களை கண்டறிந்து அல்லது ஆகமிக சொற்பமான நபர்கள் தேர்வு செய்த எண்களை முடிவாக அறிவித்து பெரும்பான்மையோரை ஏமாற்றும் தந்திரத்தையும் கையாண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
சுமை தூக்கும் தொழிலாளிகள் தொடங்கி, அன்றாடங்காய்ச்சிகள், கட்டுமான தொழிலாளர்கள், உதிரித் தொழிலாளர்களை குறிவைத்து இந்த கும்பல் இயங்கிவருவதும் அம்பலமாகியிருக்கிறது.

என்றாவது ஒருநாள் அதிர்ஷ்டம் நம் கதவை தட்டாதா என்ற ஏக்கத்தில், வியர்வை சிந்தி உழைத்த பணத்தை ஆன்லைன் லாட்டரியில் இழந்து வருகிறார்கள் அப்பாவி தொழிலாளர்கள். இவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி, மோசடியான முறையில் கொள்ளை லாபம் பார்த்து வருகிறது, ஆன்லைன் லாட்டரி கும்பல். இவர்களின் நெட்வொர்க்கை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எல்லோரது எதிர்பார்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசுகிறது, இந்த காணொளி தொகுப்பு.
முழுமையான வீடியோவை காண
ஏ.ஐ. டெக்னாலாஜி | ஆன்லைன் லாட்டரியில் மாபெரும் மோசடி !
— அங்குசம் புலனாய்வுக்குழு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.