நெல்லை ம.சு. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ! ஆளுநரின் அத்துமீறல் !
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா ஜூலை 28ஆம் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் வேந்தர் என்ற முறையில் தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பட்டம் வழங்குகின்றார். இந்த விழாவில் முதல் பாடல்: வந்தே மாதரம், இரண்டாம் பாடல்: தேசியக் கீதம், மூன்றாம் பாடல்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். ஆளுநர் கலந்துகொள்ளும் விழா என்பதால் ஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) இந்த வரிசையை உறுதியாகப் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கூட்டு (TNGCTA & AUT) நடவடிக்கைக் குழு மேனாள் தலைவர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு உதவியுடன் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் மாநில ஆளுநர் அலுவல் வழியில்தான் இருந்து வருகிறார். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின்போது நடைபெறும் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்கு ஆளுநர் தலைமை தாங்கிப் பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஒப்புதல் தருவார். வேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழாவில் யார் பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றுவார் என்பதைத் தெரிவிப்பார். இதைத் தாண்டி எந்த வகையிலும் பல்கலைக்கழகச் செயல்பாடுகளில் வேந்தர் என்ற முறையில் தலையீடு செய்ய முடியாது.
பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ஆளுநர், துணைவேந்தர் தேர்வுக் குழு அனுப்பி வைக்கும் 3 பேரில் ஒருவரைத் துணைவேந்தராகத் தேர்வு செய்வார். பல்கலைக்கழகம் என்பது தன்னாட்சி பெற்ற நிறுவனம். மாநில நிதி உதவியில் நடைபெறும் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் மாநில அரசும் தலையிட முடியாது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சிக்குழு மற்றும் பேரவைக்குழு எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் துணைவேந்தரின் பணியாகும். துணைவேந்தர் எடுக்கும் முடிவுகளுக்கும் ஆட்சிக்குழுவும், பேரவைக்குழுவும் ஒப்புதல் தரவேண்டும். ஒப்புதல் தரவில்லை என்றால் துணைவேந்தர் முடிவை நடைமுறைப்படுத்த முடியாது என்பதே பல்கலைக்கழகங்களின் மரபாகவும் விதியாகவும் இருந்து வருகின்றது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா என்பது ஆளுநரின் மக்கள் மாளிகை நடத்தும் விழா அல்ல; மாநில அரசின் நிதியுதவியில் நடைபெறும் பல்கலைக்கழகம் நடத்தும் விழா. இந்த விழா எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் நடைமுறைகளைப் பல்கலைக்கழகமும் பின்பற்றியே வரும் என்பது மரபாகும். தமிழ்நாட்டின் மரபின்படி அனைத்து அரசு நிகழ்ச்சியிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிகழ்வின் நிறைவில் நாட்டுப் பண் என்றும் தேசியக் கீதம் பாட வேண்டும் என்பதேயாகும்.

இந்த நடைமுறையில் ஆளுநர் தான் கலந்துகொள்வதால் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி நிகழ்வில் முதலில் வந்தே மாதரமும், தொடர்ந்து தேசியக் கீதமும் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று ஆளுநர் துணைவேந்தருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை கூறியிருப்பதாகத் துணைவேந்தர் கூறியுள்ளார். துணைவேந்தர் மாநில அரசின் நிதியுதவியில் நடைபெறும் பல்கலைக்கழகத்தின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். ஒன்றிய அரசின் நிதியுதவியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடைபெறவில்லை.
தமிழ்நாடு அரசின் நடைமுறைகளின்படியே துணைவேந்தர் இதில் அவருக்குக் குழப்பம் இருப்பின் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் என்பவர் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர். அவரிடம் இதற்கான அறிவுரையைப் பெறலாம். உயர்கல்வி அமைச்சர் அரசின் கருத்தின் அடிப்படையில் துணைவேந்தருக்கு உரிய அறிவுறுத்தலை வழங்குவார். ஒருவேளை தமிழ்நாடு அரசு ஆளுநரின் உத்தரவை ஆதரித்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடலாம். ஒருவேளை தமிழ்நாடு தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கினால் அதன்படியே துணைவேந்தர் நடந்து கொள்ள வேண்டும். துணைவேந்தர் ஒருவேளை தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஆளுநரின் உத்தரவை மீறினால், துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. காரணம் உச்சநீதிமன்றத்தில் வந்தேமாதரம் பாடவேண்டும் என்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பு துணைவேந்தருக்குச் சாதகமாகவே உள்ளது.
துணைவேந்தர் ஆளுநரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் கருத்தை, அறிவுரை பெறவேண்டும். வேந்தர் என்ற முறையில் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று கண்ணை மூடிக்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லை” என்று இந்தப் பிரச்சனை குறித்தும் அதற்கான தெளிவு குறித்தும் விளக்கினார்.
துணைவேந்தர் என்ன செய்யப்போகிறார்…..? ஜோசப் விஜய் தலைமையில் உள்ள தவெக அரசு என்ன செய்யப்போகிறார்? நெல்லை மாவட்டத் திமுக இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாளப் போகிறது….? இந்த அறிவிப்பை மாணவர்கள் எப்படி எதிர்கொள்ளபோகிறார்கள்? என்பதே இப்போதைய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— ஆதவன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.