காத்திருந்து … காத்திருந்து …
நீட் போன்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள், பணிநியமன குளறுபடி என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. பொதுவாகவே, இதுபோன்றதொரு குற்றச்சாட்டுகள் எழும்போதே, சர்ச்சைகளில் சிக்கும் அந்தந்த மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகளின் மீது நம்பிக்கையின்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கைதான் முதலில் முன்வைக்கப்படுகிறது.
இவ்வாறு நாடு முழுவதும் குறிப்பாக, தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரங்களில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சி.பி.ஐ.யும் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்த நிலையிலும், அந்த வழக்குகளில் முறையான தீர்வு காணாமல், ஆண்டுக்கணக்கில் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கின்றன.
குறிப்பாக, கேட் தேர்வு, டெல்லி பல்கலை மருத்துவ நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் முதுநிலை பணியிட நியமன தேர்வு என சி.பி.ஐ. விசாரணை நிறைவடைந்தும் நாடுமுழுவதும் 158 வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றில் பல வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நிலுவையில் இருப்பதுதான் காலக்கொடுமை. அதிகபட்சமாக, தமிழகத்தில்தான் 14 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கென்றே விரைவு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்கிறார்கள். இது தொடர்பான புதிய சட்டமசோதா நிறைவேறியுள்ள நிலையிலாவது, இந்த சுணக்கத்திற்கு ஒரு விடிவு கிடைக்குமா?
— அங்குசம் செய்திப்பிரிவு.







Comments are closed, but trackbacks and pingbacks are open.