“பட்டாசு கடை உரிமமே வேண்டாம்; என் உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்!” – லஞ்சப் புகார் அளித்த மாற்றுத்திறனாளி கண்ணீர்
“பட்டாசு கடையையே வீடாக மாற்றி அங்கேயே தங்கிவிடுகிறேன்” என வேதனையுடன் வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளி சுப்புராஜ், தனக்கு பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், பட்டாசு கடைக்கான உரிமம் பெறுவதில் லஞ்சம் கேட்பதாகக் கூறி ஏற்கெனவே கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதில், “வீடியோ வெளியிட்ட பிறகு எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. நான் அதிகாரிகளிடம் முறையாகச் சென்றாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிறேன்” என சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், தீயணைப்புத் துறை, காவல்துறை, மின்வாரியம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை முறையாக வைத்திருப்பதாகக் கூறும் அவர், தன்னிடம் உள்ள ஆவணங்கள் போலியானவை என சிலர் குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் இருக்கும் நண்பர்களையே தனக்கு எதிராகத் திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“நான் கஷ்டப்பட்டாலும் உழைத்து வாழக்கூடியவன். என்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாகச் செய்வேன். ஆனால், அதிகாரிகளின் அலைக்கழிப்பும், தற்போது வரும் மிரட்டல்களும் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இனி எனக்கு இந்தப் பட்டாசு கடையே வேண்டாம்” என சுப்புராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் தன் மீது எந்த வழக்கும் இல்லை என்றும், தற்போது எந்த ரூபத்தில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனக்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும்” என மாவட்ட ஆட்சியரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கெனவே பட்டாசு கடை உரிமம் தொடர்பாக லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறி புகார் எழுப்பிய மாற்றுத்திறனாளி, தற்போது தனக்கு மிரட்டல்கள் வருவதாக மீண்டும் வீடியோ வெளியிட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்புராஜ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொணர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.