தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா?
தமிழுக்காக தன் வலது கரத்தை கருக்கிக் கொண்டவருடைய இருதயம் கருக விடலாமா? – இப்படி ஒரு கேள்வியை தமிழக மக்கள் முன்பாக எழுப்புகிறார், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராசேந்திரன்.
அவர் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு, தமிழ் உரிமைக்காக போராடிய முன்கள வீரர்களை தமிழகம் மறந்துபோனதோ? என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்புகிறது.

” மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே உள்ள ஒரு சிற்றூரை சேர்ந்தவர் அண்ணா பெரியய்யா. இவர் அறிஞர் அண்ணா மீது கொண்ட பேரன்பின் காரணமாக தன்னை அண்ணா பெரிய ஐயா என்றே அடையாளப்படுத்திக் கொண்டு உள்ளார். 1965 ஆம் ஆண்டு இந்திய எதிர்ப்பு போரில் பங்கேற்று தனது வலது கையில் துணியை சுற்றி மண்ணெண்ணெய் வைத்து தீ வைத்து கொளுத்தி தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று தன் வலது கையை கருக்கிக் கொண்டவர் இவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உருவானபோது ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பழக இருந்த சமயத்தில் தமிழில் பெயர் பலகை வேண்டும் என்று போராடி அதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்றவர் .
தந்தை பெரியாரோடும் பேரறிஞர் அண்ணாவோடும் டாக்டர் கலைஞரோடும் இணைந்து தமிழ் பணியாற்றியவர் பல நாடகங்களை அரங்கேற்றி அதில் தானும் நடித்து தனக்கு இருந்த பல ஏக்கர் நிலங்களை விற்று தமிழ் பணி செய்தவர். தற்போது முதுமை பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை ஒன்றை மட்டுமே பெற்று வாழ்ந்து வருகிறார்.
80 வயதை கடந்த இவர் தனது மனைவி வயது முதுமை காரணமாக மரணப்படுக்கையில் இருப்பதைக் கண்டு அவருக்கு சரியான முறையில் நல்லடக்கம் செய்ய முடியுமா என்று தெரியவில்லையே? என்று அழுது கொண்டிருக்கிறார்.” என்பதாக குறிப்பிடும் தமிழ் ராஜேந்திரன், அண்ணா பெரியய்யா-வை நேரில் சந்தித்து தன்னாலான சிறு உதவியை வழங்கியதோடு, பிறரும் அவருக்கு முடிந்த உதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இங்கே பொருளாதார ரீதியான உதவிகளைவிட, தமிழ் உரிமைக்காக போராடிய தமிழ் மொழி தியாகிகளை அவர்களின் வாழ்நாள் வரையிலுமாவது கௌரவமான முறையில் வாழ்வதை உத்தரவாதப்படுத்துவது நம் கடமையல்லவா?
தனிநபர்களாக, ஐநூறோ, ஆயிரமோ ஒருமுறை வழங்குவது மட்டுமே அவர்களது ஈகைக்கு ஈடாகிவிடுமா?, அண்ணா பெரியய்யா – மட்டுமல்ல; தமிழகத்தில் இவரைப்போல வறுமையில் வாடும் தமிழ் மொழிப்போர் தியாகிகளை அடையாளம் கண்டு அவர்களின் துயர் கேட்டறிந்து அவர்களின் கடைசி காலத்தில் அரசுதான் அவர்களை அரவணைக்க வேண்டும். அதனை உத்தரவாதப்படுத்த முன்வருமா, த.வெ.க. அரசு?
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.