“அரசியல் முழக்கம் வேண்டாம்” ரசிகர் சந்திப்பில் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மதுரையில் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்தார். அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்தபோது அவரைச்சுற்றி ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்களில் சிலர் சிவகார்த்திகேயனை உற்சாகப்படுத்தும் வகையில் வருங்கால முதலமைச்சர், வருங்கால பிரதமர், வருங்கால சூப்பர் ஸ்டார் என முழக்கங்களை எழுப்பினர். ரசிகர்களின் இந்த முழக்கத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதனை கவனித்த சிவகார்த்திகேயன் அத்தகைய முழக்கங்களை எழுப்ப வேண்டாம் என ரசிகர்களிடம் உடனடியாக அறிவுறுத்தினார். ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் தொடர்பான எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அவர்களிடம் இயல்பாக கலந்துரையாடிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எழுப்பிய இந்த முழக்கங்களை மட்டும் நிறுத்துமாறு கேட்டுக்கொண்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயனை ரசிகர்கள் வருங்கால முதலமைச்சர் வருங்கால பிரதமர் வருங்கால சூப்பர்ஸ்டார் என அழைத்தபோது அவர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாக தடுத்து நிறுத்திய காட்சிகள் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரையில் திரைப்படப்படப்பிடிப்புக்கு இடையே சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்த நிகழ்வும் அப்போது ரசிகர்கள் எழுப்பிய முழக்கங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.