காலநிலை மாற்றம் உலகிற்கான இறுதி எச்சரிக்கை! – விஞ்ஞானி நாராயணி
திருச்சி களம் அமைப்பின் சார்பில் எல்நினோ என்னும் உலக வெப்பமயமாதல் குறித்து 26.09.2026ஆம் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அக் கருத்தரங்கில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் விஞ்ஞானி உரையாற்றினார். அதன் விவரம்:
அண்மையில் கேரள வயநாட்டிலும், நேப்பாளத்திலும் வெள்ளச் சீற்றம் ஏற்பட்டது. சில நாடுகளில் கடல் உள்வாங்கியது. சில நாடுகளில் ஒரேநாளில் பெருமழை பொழிகின்றது. இன்னொரு பக்கம் கடும் வறட்சி நிலவுகின்றது. தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் 104 – 108 டிகிரி வரை வெயில் கொளுத்துகின்றது. இந்தக் காலநிலை மாற்றம் என்பதும் உலகம் முழுவதும் உள்ளது.
மாறிவரும் இந்த காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரிடரால் மனித குலம் அழிந்து கொண்டிருக்கின்றது. அழியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரம் நீரில்லா நகரம் என்ற வகையில் 0 புள்ளியைத் தொட்டு இப்போது தப்பி உள்ளது. சென்னை சில ஆண்டுகளுக்கு முன்பு 0 புள்ளியைத் தொடும் நிலையிலிருந்து மீண்டுள்ளது. எதிர்காலத்தில் நீரில்லா நகரமாக மாறுவதற்கு இந்தியாவில் பெங்களூரு சென்னைக்கு வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த காலநிலை மாற்றத்திற்கு அடிப்படை பெட்ரோல், டீசல், நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இதற்கான உச்சி மாநாடுகள் ஐக்கியநாடுகள் சபையில் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டை நடத்துவதே எண்ணை வள நாடுகள்தான் என்பதைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது. உச்சி மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை எந்தநாடும் பின்பற்ற தேவையில்லை என்றே கையெழுத்திடுகின்றனர். காலநிலை மாற்றத்தைக் குறைக்க மின்சார உற்பத்திய சூரிய வெப்பத்திலிருந்து தயாரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. அதற்குப் பில்லியன் டாலரில் செலவாகும் என்பது உண்மைதான். ஏழை நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள்தான் இந்தக் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிக்கப்படும்.
பெருகி வரும் வெப்பத்தால் மழை அளவு குறையும். நீர் ஆதாரங்கள் குறையும். அதன் தொடர்ச்சியாக விவசாய உற்பத்தி குறையும். உணவு பற்றாக்குறை ஏற்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். காடுகள் அழியும். கால்நடைகள் அழியும். இப்படிப்பட்ட தொடர்விளைவுகள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது. இப்போது ஏற்பட்டிருக்கும் எல்நினோ என்னும் காலநிலை மாற்றம் சூப்பர் எல்நினோ என்பதைத் தாண்டி காட்ஸில்லா எல்நினோவாக மாறியுள்ளது. இந்த வெப்பநிலை குறைய வேண்டும் என்றால் மரம் வளர்ப்பது, மழை பெறுவது என்பதைத் தாண்டி மக்கள் அனைவரும் மாசுபாடுகளைக் குறைக்க வேண்டும். பெருகி வரும் கரிஅமிலத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தனிமனிதர்களால் செய்ய முடியாத கைமீறிவிட்ட செயலாக உள்ளது. நிதிநிலையில் முன்னேறிய நாடுகள்தான் இந்த வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளை ஓரளவு தடுத்து நிறுத்த முடியும் என்பதே நமக்கான இறுதி எச்சரிக்கையாகும்” என்று குறிப்பிட்டார்.
— ஆதவன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.