திருச்சி அமைச்சரின் இடத்தைப் பிடிப்பதற்கு நடக்கும் மல்லுக்கட்டு..?
திருச்சி அமைச்சரின் இடத்தைப் பிடிப்பதற்கு நடக்கும் மல்லுக்கட்டு..?
அதிமுக என்பது ராணுவக் கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்பார்கள். ஜெயலலிதாவுக்கு பிறகு அத்தனையும் கானல் நீராகிப் போனது. இவற்றைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படையாகவே பேசினார். அதிலும், ஜெயலலிதா இருந்தவரை மலைக்கோட்டை அ.தி.மு.க இலை வசம் இருந்தது. ஆனால் இப்போது நடக்கும் கோஷ்டி பூசலால் ரத்தத்தின் ரத்தங்கள் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக, கட் அவுட் வைப்பதில் இருந்து கட்சி பொறுப்பை வாங்குவதில் இருந்து அனைத்திலும் உள்ளடிதான்.
ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்பதுதான் விதி. அதுவும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளதாக திருச்சி அ.தி.மு.கவினர். அதற்குத் திருச்சி அமைச்சரே வித்திடலாமா என்பதுதான் பலமான கேள்வியாக உள்ளது.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி அ.தி.மு.கவின் சீனியர் இவர். 20வருடங்களுக்கும் மேல் திருச்சி மாவட்ட அவை தலைவராக இருப்பவர்.
கட்சியின் சீனியராக இருந்தாலும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. புறக்கணிப்புகள் தொடர்ந்தாலும், வெல்லமண்டி நடராஜன் அதிகாரம் மிக்கவர்களிடம் பசையாய் இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நடந்த களேபரங்களால் கடைசி நேர வேட்பாளர் ஆனார். அவரே நினைத்துப் பார்க்க முடியாதநிலையில், முதல்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தவருக்கு அமைச்சர் பதவி அறிவிக்கப்பட்டது. கூடவே மாவட்ட செயலாளரானார். இரட்டிப்பு மகிழ்ச்சியில் வலம்வந்த வெல்லமண்டி நடராஜனுக்கு எதிராக அப்போதைய எம்.பி ப.குமார் காய் நகர்த்த மா.செ பதவி குமார் வசமானது. அதிலிருந்து இருவரும் அதிரிபுதிகளாகிப் போனார்கள். குமார், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க என போஸ்டர் ஒட்டி கூட்டம் கூட்டினால், வெல்லமண்டி நடராஜன் தரப்பு திருச்சி கிழக்கு தொகுதி எனப் பட்டாசு கிளப்புவார்கள். இதனிடையே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தனது மகன் ஜவஹருக்கு மாவட்ட ஜெ.பேரவை கேட்டு மல்லுக்கட்ட ப.குமாரோ அதற்கு மசியவில்லை. இவர்களின் மோதலால் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி மொத்தமாகப் பறிபோனது.
அதனையடுத்தும், தொடர்ந்த கோஷ்டி பூசலால் திருச்சி அதிமுக, தி.மு.க பாணியில் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதில், கடந்த சிலவருடங்களாக ப.குமார் வசமிருந்த மாநகர் மா.செ பொறுப்பை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தட்டிப் பறித்தார்.
முதலில், ஆனால் உடல்நிலையை காரணம்காட்டி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பொறுப்புகளைத் தவிர்த்து வந்ததாகவும், பிறகு அவரே வைத்தியலிங்கம் முகமாக மாவட்ட செயலாளர் பொறுப்பைப் பெற்றதாகவும் பேச்சு உள்ளது.
இந்நிலையில்தான், அதிமுகவில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அமைச்சருக்கு எதிராக அ.தி.மு.க நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
என்ன காரணம் என விசாரித்தால் வெடித்துக் கிளம்புகிறார்கள் அதிமுகவினர்.
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வசமுள்ள திருச்சி மாநகர் அதிமுக அவைத்தலைவர் பொறுப்பை கைப்பற்ற அதிமுகவில் போட்டாபோட்டி நடைபெற்று வருகிறது. ஒருவருக்கு இத்தனைப் பொறுப்புகளா என்பவர்கள், அவைத்தலைவர் பொறுப்பைத் திருச்சி அதிமுக கட்சியின் சீனியர்களான மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம், எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் பொன்மலை டேனியல் உள்ளிட்டோர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமே அவைத் தலைவர் பொறுப்பு கேட்டு மல்லுக்கட்டி வருகின்றனர். மேலும் பொன்மலை டேனியல் நானும் கட்சியில் சீனியர் தானே என்னை அவைத்தலைவர் ஆக்கங்கள் என்று வைத்தியலிங்கம் மூலமாக முயற்சித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், அதிமுக இரண்டாக பிரிந்தபிறகு காலியான பல பொறுப்புகளுக்கு இந்நாள்வரை நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் காலியாக உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கும் கட்சியின் தேர்தல் நடைபெற இருப்பதால் நிர்வாகிகள் பலரும் பொறுப்பைப் பெறுவதற்குப் போட்டிப் போட்டுக்கொண்டுள்ளனர். அதனால், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை சுற்றி எப்போதும் முன்பைவிட கூட்டம் களைக்கட்டுகிறதாம்.
எதற்கும் அசங்காத, கட்சிப் பொறுப்பு கேட்பவர்களிடம் அமைச்சர்,”எல்லாருக்கும் பொறுப்பு போட்டு கட்சித் தலைமைக்கு அனுப்பி விட்டேன், இனிமேல் அனைத்தையும் தலைமைதான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும்” என்றுகூறி நிர்வாகிகளைச் சமாதானம் செய்கிறாராம்.
கூடவே, தனது இளைய மகன் ஜவஹருக்கு பலவருடங்களாக கட்சியில் பொறுப்பு பெறத் துடிக்கும் அமைச்சர் இந்த முறை பகுதி செயலாளர் பதவி சரியாக இருக்காது என முன்னாள் துணை மேயர் சீனிவாசன் வசமிருந்த மாவட்ட ஜெ.பேரவை பொறுப்பு காலியாக இருப்பதால் அதனை மகனுக்கு வழங்கிட முனைப்புக் காட்டுகிறாராம்.
இந்நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி பிறந்தநாள் என்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை “சிறப்பாக” கொண்டாடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால் அமைச்சரின் அலுவலகத்திலிருந்து திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, பிறந்தநாள் அன்று அமைச்சர் ஊரில்தான் இருப்பார். ” நேரில் சந்திக்க வருபவர்கள் வரலாம்” என வாலன்டரி அழைப்பு விடுக்கப்படுகிறதாம்.
அமைச்சரின் காய்நகர்த்தல்கள் பலமாக இருந்தாலும், அவர் வசம் 20வருடங்களாக உள்ள மாவட்ட அவைத் தலைவர் பதவிக்கு அடுத்து யார் என்பதுதான் திருச்சி மாவட்ட அரசியலில் ஹாட் நியூஸாக உள்ளது.