ரஜினிக்கும் சகாயத்திற்கும் தூது சென்ற அந்த பெண்..?
ரஜினிக்கும் சகாயத்திற்கும் தூது சென்ற அந்த பெண்..?
நடிகர் ரஜினியின் அரசியல் குறித்த சர்ச்சைகள் இப்பொழுது மட்டும் எழும் விவாதப் பொருள் அல்ல. அவருடைய ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அது விஸ்வரூபம் எடுக்கும். தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ரஜினி தற்போது அரசியலில் இறங்குவதாக வெளிப்படையாக அறிவித்து விட்டு நிர்வாகிகளை கொண்டு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த தொடர் நிகழ்வு ரஜினியின் அரசியல் பயணத்தை உறுதி செய்வதாகவே உள்ளது.மேலும் அவருடைய வயது அதற்கு ஒரு தடையாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் களப்பணியை தொடங்க இருந்த ரஜினி கொரோனா காரணத்தால் தள்ளிப் போட்டார். பிறகு நவம்பர் மாதம் முதல் பணியைத் தொடங்க இருந்த ரஜினி அமித்ஷா வருகையின் போது ஆலோசனையை தொடங்குவது. தமிழக அரசியலில் பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தும் என்று எண்ணி அந்த நிகழ்வையும் தள்ளிப் போட்டார். பிறகு நிவர் புயல் காரணமாகவும் காலம் தாழ்ந்து கொண்டு சென்றது பணி. மேலும் நேரடி அரசியலில் இறங்கிய பிறகு மத்திய பிஜேபி அரசை விமர்சிக்க நேரிடும் என்பதாலும், ஆரம்பத்திலேயே ஆளும் கட்சியான பிஜேபியை விமர்சிக்க ரஜினி விரும்பாததால் காலம் தாழ்ந்து கொண்டே சென்றது பணி. தற்போது ரஜினி அரசியலின் அடுத்தகட்ட நிகழ்வு இறுதி செய்யப்பட்டு 30.11.2020 அன்று மாவட்ட செயலாளர் உடன் ஆலோசனையில் ஈடுபட ஆயத்தமாக உள்ளார். மேலும் அதற்காக ரஜினியின் மகளான சௌந்தர்யா பணிகளை உள்ளிருந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் சகாயம் அரசியல் குறித்த செய்திகளும் பெரும் அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. சகாயத்தின் நடவடிக்கையும் அதை உறுதி செய்வதாகவே உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று சகாயம் ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை தமிழக அரசிடம் அளித்திருந்தார். 27. 11 . 2020 அன்று சகாயத்திற்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தமிழக அரசால் விலக்கப்பட்டிருக்கிறது. மேலும் 30 .11.2020 திங்கட்கிழமை சகாயம் ஐஏஎஸ் பொறுப்பிலிருந்து தமிழக அரசால் விடுவிக்கப்படுகிறார் என்ற செய்தியும் வருகிறது.
இவ்வாறாக ரஜினியின் அரசியல் பயணமும், சகாயத்தின் அரசியல் பயணமும் தற்போது ஒரே கோட்டில் இணைவதை பார்க்க முடிகிறது. அதாவது ரஜினி அரசியலில் கலப் பணிகளைத் தொடங்க இருப்பதும், சகாயம் நேரடி அரசியலில் களம் காண இருப்பதும் ஒரே காலகட்டமாக இருக்கிறது. இதைப் பயன்படுத்த எண்ணிய ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் சௌந்தர்யாவை பயன்படுத்தி சகாயத்திடம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சகாயத்தை சந்தித்து சௌந்தர்யா தனது தந்தையான ரஜினியின் உடல்நிலையை காரணம் காட்டி அவர் கட்சிக்கு தலைவராக இருப்பார், நீங்கள் தான் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும். என்று கூறி சகாயத்தின் சகாயத்தை பெற்றுள்ளார் என்று ரஜினியின் தீவிர ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் ரஜினி தனது அரசியல் கட்சியை வலுப்படுத்துவதற்காக, சென்ற ஆலோசனை கூட்டத்திலேயே ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடம் பூத் கமிட்டியை முறையாக முழுமைப்படுத்தி மாநில தலைமைக்கு ஒப்படைக்க அறிவுறுத்தினார். ஆனால் இதை பல மாவட்டங்கள் செய்யத் தவறின. தற்போது நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கண்டிப்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பூத் கமிட்டி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களும் அதற்கான வேலைகளை பெருமளவில் முடிந்திருக்கின்றன தமிழகம் முழுவதும் 85 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாம். ஆளும் அதிமுகவே பூத் கமிட்டிக்கு 20 முதல் 25 பேரை இறுதி செய்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை 15 முதல் 20 பேர் வரை இறுதி செய்து இருக்கிறது. ஆனால் ரஜினி மன்ற நிர்வாகிகள் 1 பூத்திற்கு 25 பேர் முதல் 30 பேரை இறுதி செய்து தமிழகம் முழுவதும் 85 %வரை பணிகளை முடித்து விட்டார்களாம்.
கட்சி கொடி, கட்சி அறிவிப்பு எதுவும் இல்லாமலே ஒரு கட்சியின் அடித்தளத்தை உருவாக்கி இருப்பதால் ரஜினி கட்சியே முறைப்படி அறிவித்து 234 தொகுதியிலும் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறாராம்.
இதையெல்லாம் சகாயத்திற்கு எடுத்துக் கூறிய பிறகே சகாயம் ரஜினிக்கு சைகை காட்டத் தொடங்கியுள்ளார். மேலும் ரஜினி ஆளும் கட்சிகளோடு இணைந்து செயல்படுவதை தற்போது விரும்பவில்லை. அதே நேரத்தில் திமுக ,அதிமுக ,பிஜேபி செ.கு தமிழரசு, அழகிரி உள்ளிட்ட பலர் கட்சிக்குள் வருகிறார்கள் என்று ரஜினிக்கு நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழக தேர்தல் களம், பீகார் தேர்தல் களத்திற்கு சமமாக சென்று கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
-மெய்யறிவன்.