பழுதான எலக்ட்ரிக் பைக்! மாதக்கணக்கில் இழுத்தடித்த ஷோரூம்! நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி!
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம்பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக வஜ்ராயுத பெருமாள் பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனத்தில் ரூ. 1, 11, 999 விலை கொண்ட எலக்ட்ரிக் பைக் ஒன்றை வங்கி கடன் உதவியுடன் வாங்கினார்.
எலக்ட்ரிக் பைக் வாங்கிய முதல் வாரத்திலேயே பிரேக் தகராறு, போல்ட் நட் தளர்வு பிரச்சனை ஏற்பட்டு ஷோரூமில் சரி செய்தார். பின்னர், அந்த சர்வீஸ் ஷோரூம் நாகர்கோவிலில் இருந்து ஆரல்வாய்மொழிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கடந்த 20.6.2025 அன்று வஜ்ராயுத பெருமாள் எலக்ட்ரிக் பைக்கை ஓட்டி செல்லும் போது நடுவழியில் நின்றது. பின்னர் லோடு ஆட்டோவில் ஏற்றி ஆரல்வாய்மொழி ஷோரூமில் ஒப்படைத்தார். 2 நாட்களில் சரி செய்து கொடுக்கப்பட்டது.
மீண்டும் 01.07.2025 அன்று பைக்கை ஓட்டிச் செல்லும் போது வழியில் நின்றதையொட்டி ஆரல்வாய்மொழி ஷோரூமில் சரி செய்ய விடப்பட்டது. ஆனால், சில மாதங்கள் கடந்தும் பைக்கை சரி செய்து கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து வஜ்ராயுத பெருமாள், கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் விஜயகுமாரிடம் புகார் மனு கொடுத்தார். தலைவர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை தலைவர் ஸ்ரீமதி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி கிளாட்சன் பிளஸ்டு தாகூர், உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டி காட்டினர். மேலும், ஒரு மாதத்தில் பைக்கை சரி செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 5000- நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
வஜ்ராயுத பெருமாளின் மனவுளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய்க்கு நிறுவனத்திற்கு அபராதம் விதித்தனார். அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படும் போது மொத்த தொகைக்கு 9 சதவீதம் வருட வட்டி வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.