Thursday, November 19, 2026 | 2:20 PM IST

ரூ.50,000 கோடி PACL மோசடி… 7 கோடி முதலீட்டாளர்களுக்கு எப்போது நீதி?

7 கோடி பேரின் பணம் எங்கே? 12 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் PACL விவகாரம்... களத்தில் குதித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நாடு முழுவதும் சுமார் 7 கோடி முதலீட்டாளர்களை கொண்ட பி.ஏ.சி.எல். மோசடி விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது, தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை தலைவராக கொண்ட லட்சிய ஜனநாயக கட்சி. தனக்கென ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி மிக குறுகிய காலத்திலேயே, அக்கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் வெற்றிபெற்றவரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், தமிழக அரசியலை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். மாவட்டம் தோறும் நிர்வாகிகளை நியமித்து வருவதோடு, அரசியல் ரீதியான துணிச்சலான பேச்சாலும் கவனத்தை பெற்று வருகிறார். மிக குறிப்பாக, இவரது மச்சினனும் லாட்டரி மார்ட்டினின் மருமகனுமான அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து இவர் தெரிவித்த கருத்துகள் அத்தனையும் அரசியல் சரவெடியாய் அதிர்வை ஏற்படுத்தி வரும் பின்னணியில்தான், மக்கள் பிரச்சினையையும் தற்போது கையில் எடுத்திருக்கிறார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

பி.ஏ.சி.எல். (PACL – Pearls Agrotech Corporation Limited) என்ற பெயரில் நாடு முழுவதும் 90 களில் பிரபலப்படுத்தப்பட்ட கம்பெனி. குறைவான விலையில் விவசாய நிலங்களை வாங்கித்தருவதாகவும்; அதிக வட்டி மற்றும் அதிக முதிர்வுத்தொகை தருவதாகவும் மோசடியான வாக்குறுதிகள் வழங்கி, நாடு முழுவதும் சுமார் 7 கோடி முதலீட்டாளர்கள் வரையில் சுமார் 50,000 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக வழக்கில் சிக்கியது.

கொடுத்த வாக்குறுதியின்படி நிலங்களையும் பதிவு செய்து தராமல்; முதிர்வுத்தொகையும் தராமல்; குறைந்தபட்சம் போட்ட முதலீட்டைக்கூட திருப்பித்தரமுடியாத நெருக்கடியை எதிர்கொண்டது. தமிழகத்தில் மட்டும் குறைந்தது ஒரு கோடி பேராவது பி.ஏ.சி.எல். மோசடியால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்திய அளவில் மிகப்பெரிய மோசடிகளை பட்டியலிட்டால், முதலிடத்தை பிடிக்கும் மோசடியாகவும் மாறிப்போனது. சி.பி.ஐ., அமலாக்கத்துறை (ED), செபி என விவகாரம் பந்தாடப்பட்டு வந்த நிலையில், இறுதியாக நீதிபதி லோதா தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்.

ஆறுமாதத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு பொறுப்பேற்ற நீதிபதி லோதா குழு, ஏறத்தாழ 12 ஆண்டுகளை ஓட்டிவிட்டது. இப்போது வரையில் முழுமையான தீர்வு எட்டியபாடில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 7 கோடி பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், வெறும் 35 இலட்சம் பேருக்கு சுமார் 3700 கோடி ரூபாய் வரையிலான தீர்வை மட்டுமே ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது, லோதா குழு.

இதில், இழந்த பணத்தை மீட்டுத்தருகிறோம் என்று சொல்லி பாதிக்கப்பட்டவர்களே மீண்டும் வஞ்சிக்கப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தேறியது. இந்த பின்னணியில்தான், பி.ஏ.சி.எல். பண மீட்புக்குழுவுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாகவும்; அரசியல் ரீதியான அழுத்தங்களை தனது கட்சியின் சார்பில் தரப்போவதாகவும் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

“ஒரு தலைமுறை போய் அடுத்த தலைமுறையே வந்துவிட்டார்கள். அன்று வாங்கிப்போட்ட சொத்துக்கள் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு மதிப்பு உயர்ந்திருக்கிறது. எந்த வகையிலாவது  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுதான்” எங்களது கட்சியின் விருப்பம் என்பதாக பேசியிருக்கிறார், அவர். பி.ஏ.சி.எல். போன்று பொதுமக்களை பாதிக்கும் எந்த ஒரு விசயத்தையும் இனி கையில் எடுத்துப் போராட்டங்களை நடத்தப்போவதாகவும் அதிரடி சரவெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.

பி.ஏ.சி.எல். வழக்கின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்களை பெற : https://www.sebi.gov.in/PACL.html

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.