சூதாட்டப் பணமா? ஆடு வாங்க வைத்திருந்த பணமா? போலீசுடன் வாக்குவாதம்!
திருச்சி விமான நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாத்தூர் பழைய இரும்புக் கடை பகுதியில் பணம் வைத்துச் சூதாட்டம் நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விமான நிலைய காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குப் பணம் வைத்துச் சூதாட்டம் விளையாடியதாக கூறி ஓலையூர் முள்ளிப்பட்டியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில் தான் சூதாட்டம் விளையாடவில்லை என்றும் ஆடு வாங்குவதற்காகத் தான் வைத்திருந்த 90,000 பணத்தை போலீசார் எடுத்துக் கொண்டதாகவும் துரைராஜ் குற்றம் சாட்டினார். மேலும் அந்தப் பணத்தைத் திரும்பத் தரக் கோரி திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் அருகே அவர் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் போலீசார் துரைராஜை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.இந்தத் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
பணம் வைத்து சூதாட்டம் ஆடிவிட்டு போலீசாரிடம் பிடிபட்டதும் போலீசார் பணத்தை பறித்துக் கொண்டதாக கூறி சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.