சாம்பவான் ஓடை சிவராமன் – தொடர் 7

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரஸ்காரர்களை விடக் கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்கப் பயங்கரமாக நடவடிக்கை எடுத்தது. பண்ணையார் சிலர் இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தார்கள். தங்களுடைய ஆட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற பண்ணையார்களைக் காக்க ஆங்கிலேய அரசாங்கம் எல்லா நடவடிக்கையும் எடுத்தது.
எந்த இடத்திலும் கட்சி கட்டிச் சங்கம் அமைக்க முடியவில்லை. தனி மனிதர்களிடம் கம்யூனிசியக் கருத்துக்கள் வேரூன்றி வளர ஆரம்பித்தன.
இவ்வாறு முத்துப்பேட்டையில் இரகசியமாகக் கம்யூனிசியக் கருத்துக்களை அறிந்து கொண்டவர்கள் பலர். அவர்களுள் சுந்தரராசு, சுப்பிரமணியன், கோபால்சாமியின் அண்ணன் ராமசாமி போன்றோர் மிகவும் முக்கியமானவர்கள்.
சுந்தரராசுக்கு அப்பா இல்லை. இளமையிலேயே இறந்து விட்டார். ஆயாதான் அவனைக் கூலி வேலை, கொத்து வேலை செய்து வளர்த்தாள். இளம் வயதிலேயே தன் கடமையை முடித்துவிட ஒரு கல்யாணத்தையும் செய்து வைத்தாள். நண்டுஞ்சிண்டுமாக குழந்தைகள் இருந்தன.
தைத்தால்த்தான் அன்றைய அடுப்பு எரியும். ஓய்வு ஒழிவு இல்லாமல்துணியைத் தைத்துக் கொண்டிருப்பான். திடீரென்று யாராவது கட்சியில் உள்ள தலைவர்கள் பேச வருகிறார்கள் என்றால் தைத்ததை அப்படியே போட்டுவிட்டு ஓடி விடுவான்.
காடுகளில் ரகசியமாகக் கூட்டம் நடக்கும். எட்டு, பத்துபேர் அமர்ந்து தலைவர் சொல்லும் கருத்துக்களை அரிச்சுவடி படிக்கும் மாணவர்களைப் போலக் கவனமாக அறிந்து கொள்வார்கள்.
மக்களில் உயர்வு தாழ்வு கடவுள் படைக்கவில்லை. மனிதன் படைத்தவையே என்பதை அறிந்தபோது அவன் அகக் கண் திறந்தது. புழுவைப் போலக் கடை வீதியில் நெளிந்து திரியும் சேரி மக்களின் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. கேவலமாக நினைத்த அவர்களை அவன் மனம் மனிதர்களாக நினைக்க ஆரம்பித்தது. அப்போதே அவன் குடும்பத்தின் மீது வைத்திருந்த பாசத்தில் பாதி போய் விட்டது.
சுந்தரராசோடு சுப்பிரமணியனும் சேர்ந்து கொண்டான். அவனுடைய அப்பா ஒரு முதலாளியிடம் கணக்கப்பிள்ளையாக இருந்தார். குடும்பம் சாப்பிடவே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தது.
சுப்பிரமணியன் மில்லில் அரிசி மாற்றும் பையனாக வேலையில் சேர்ந்தான். நல்ல முறையில் வேலைகளைக் கற்றுக் கொண்டான். தினமும் வீட்டிற்கு அரிசி கொண்டு போய்க் கொடுப்பான். இயந்திரத்தைப் பிரிக்கும்போது நுணுக்கமாக அறிந்து கொண்டான். இரண்டு வருஷங்களில் இயக்கும் அளவிற்கு கற்றுக் கொண்டான். பிறகு அவனே டிரைவர் ஆகிவிட்டான்.
சேரி மக்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. பறட்டைத் தலையுடன் வேப்பெண்ணெய் நாற்றத்தோடு எதிர்த்தாற்போல வருபவர்களைக் கண்டபடி பேசுவான். சிலரை அடித்தும் இருக்கின்றான்.
சுந்தரராசுதான் சுப்பிரமணியத்தையும் இரகசியக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வான். புத்தருக்குப் போதிமரத்தின் கீழ் அமர்ந்தபோது ஞானம் வந்த்தைப் போல் அவனுக்கு ஒரு இரகசியக் கூட்டத்திற்கு சென்றதும் சேரி மக்களிடம் அனுதாபம் பிறந்து விட்டது.
மில்லில் வேலை முடிந்து வந்து சுந்தரராசு கடையில் உட்காருவான், வெற்றிலபாக்குக் கடையில் ஓசி வெற்றிலைக்காகத் தலையைச் சொறிந்து கொண்டு நிற்கும் சேரிப் பெரியவர்க்குக் காசு கொடுத்து வாங்கிக் கொடுப்பான். அவனுடைய அப்பா திட்டுவதைப் பற்றி எல்லாம் அவன் கவலைப்படவில்லை. சுந்தரராசு தையற்கடைக்குப் பக்கத்தில் ராமசாமி கடை இருந்தது. அவன் தம்பி கோபால்சாமி ஐந்தாவது வரை படித்து விட்டு அண்ணனோடு கடைக்கு வந்து விட்டான்.
ராமசாமியும் இரகசியக் கூட்டங்களுக்குச் செல்வான். நிறைய புத்தகங்கள் படித்து கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கொள்கைகளை அறிந்து கொள்வான். சுந்தரராசு சுப்ரமணியன் போன்றோருடன் கலந்துரையாடுவான்.
கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி வளர்ந்த போது முத்துப் பேட்டையிலும் அணில், இராமன் பாலங்கட்ட உதவியதைப் போல இப்படிச் சிலரால் கட்சி வளர்ந்தது.
சாயங்கால நேரம். வானம் செக்கச் செவேரென்று செவ்வொளியை எல்லாவற்றின் மீதும் பரப்பிக் கொண்டிருக்கிறது. சுந்தர்ராசு மகிழ்ச்சியோடு எல்லாம் சிவப்பாவதைப் பார்த்துக் கொண்டு கொடியைத் தைத்தான். சுப்பிரமணியனும் மில்லில் வேலையை முடித்துவிட்டு தையற்கடைக்கு வந்தான்.
தூரத்தில் சிவராமன் வருவது தெரிந்தது. காலையிற் போட்டுக் கொண்ட சிவப்புக் காற்சட்டை, மேற்சட்டையோடு கடையை நோக்கி வருகிறான். இவனைச் சுற்றி ஒரு சிவப்பு ஒளி வட்டம் சுந்தரராசுக்குத் தெரிந்தது. சுப்பிரமணியனும் சிவராமனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெண்ணின் அழகைப் பார்த்து இன்னொரு பெண் பொறாமை கொள்வதைப் போல இவன் அழகைப் பார்த்து எந்த ஒரு ஆணும் திரும்ப ஒரு முறை பார்க்காமல் இருக்க முடியாது.
“அ.. அண்ணே சட்டக்குக் காசு”
“அப்புறம் வாங்கிக்கிறேன். நீ வச்சுக்க.”
சிவராமனின் கையில் சுந்தரராசு சட்டையை வைத்துத் திணித்ததைப் போல இவன் காசைத் திணித்தான். சுந்தரராசு காசை எண்ணிப் பார்த்தான். அதிகம் இருந்தது. துணிக்குள்ள காசை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை சிவராமன் சட்டைப் பையில் போட்டான்.
சுந்தரராசு எல்லோருக்கும் டீ வாங்கிக் கொண்டு வரச் சொன்னான். டீ குடித்துக் கொண்டிருக்கும்போது சுப்பிரமணியன் சிவராமனிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான். கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கோட்பாடுகளை அறிந்து கொள்ள ஒரு அரிச்சுவடி அந்தப் புத்தகம்.
“அண்ணே எனக்கு டீ?”
“நீதான் ஒரு கடக்கே முதலாளியாச்சே. நீ எங்களுக்கு வாங்கித் தருறதா? நான் ஒனக்கு வாங்கித் தருறதா?”
“பேரு தான் முதலாளி. பெரியவரு பூதம் மாரிச் சொத்தக் காப்பாத்துறாரு.”
“புள்ள குட்டிதான் இல்லையே. நல்லாச் செலவு பண்ணச் சொல்லேன்.”
சொல்லிக்கொண்டே சுந்தரராசு ஞானசேகரனிடம் டீக்குக் காசை எடுத்துக் கொடுத்தான். அவன் ஓடிப் போய் டீயைக் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்தான். சிவராமனை இடித்தாற்போல இருந்தான்.
“தள்ளி உக்காரு. ஒங்கருப்பு அண்ணன் மேல ஒட்டிக்கப் போவுது”
கடையில் ஓரமாக உட்கார்ந்து இருந்த கோபால்சாமி சொல்லிவிட்டுச் சிரித்தான். மற்றவர்களும் சிரித்தார்கள்.
“ஞான சேகரா, இந்தத் தம்பியப் பாத்து இருக்கியா?”
“இந்த அண்ணன புளிய மரத்துல புளியங்கா அடிக்கிறப்ப, சண்ட நடக்குற எடத்துலே எல்லாம் பாத்து இருக்கேன். இந்த அண்ணன் அடிச்சு ஒருத்தனுக்குப் பல்லு விழுந்துட்டாம். ஆசுப்பத்திரியிலே மருந்து வச்சுக்க வந்தப்ப பேசிக்கிட்டாவோ. ஆனா இதுவரக்கும் பேசுனது இல்ல”
சிவராமன் எல்லோரையும் பாத்து மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் சிரித்தான். இவன் இளமை வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டி விட்டான்.
“சிவராமா, இவன் தாயி, தகப்பனோட இல்ல. எதுக்க அந்தா இருக்கு பாரு கட, அந்த மொதலாளி இவனத் தத்து எடுத்து வளக்குறாரு”
“பேருதான் தத்துப்புள்ள. அவரும் திங்க மாட்டாரு. என்னயும் திங்க விடமாட்டாரு. வைக்கப் போருல கெடக்குற நாயி மாரி அவரு; அங்கே வேல செஞ்சுட்டு அண்ணனுக்கிட்டே வந்துதான் டீ குடிப்பேன்.”
சிவராமனுக்கு ஞானசேகரன் கதையைக் கேட்டதும் ஏதோ ஒரு உணர்வு நெஞ்சுக்குள் பீறிட்டது. வாஞ்சையோடு அவனைக் கண்களால் தழுவிக் கொண்டான்.
“என்னா சுப்பிரமணி ஒன்னோட கூட்டாளி ஒண்ணக் கூட காணும்”
“கையில் காசு இருந்திருக்கும். சாமான அங்கேயே வாங்கிக்கிட்டுப் போயி இருக்குங்க மனுசனுக்கு வறும மாரி கொடிய சத்துரு வேற என்னா இருக்கு?”
சுப்பிரமணியன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொஞ்ச தூரத்தில் கிழவன் போர்த்திக் கொண்டு வந்தார். பண்ணையில் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு மரத்துப்போன அவர் மனம் இந்த இளைஞர் பேச்சில் ஆறுதல் அடையும்.
“வா ஒனக்கு ஆயுசு நூறு. இப்பத்தான் ஒன்னப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தோம். ஆமா கருவக் கட்ட மாரி அடக்கும் கோடக்கும் மேல துணியே போட மாட்டே. இன்னக்குப் போத்தி இருக்கே?”
“ஆமா என்னா நான் பாட்டுக்குப் பேசி கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு நிக்கிறே! என்னா கண்ணுலே கண்ணீரு வடியுற மாரி இருக்கு?”
கடையில உட்கார்ந்து இருந்த சுப்பிரமணியன் எழுந்து வெளியே வந்தான். சுந்தரராசும் தைப்பதை நிறுத்தி விட்டுக் கிழவனைப் பார்த்தான். முகம் குறுகிப் போய் கண்ணீர் வடிவது தெரிந்தது.
“என்ன ஆச்சு ஒனக்கு?”
அந்தக் கிழவன் எதுவுமே பேசவில்லை. மேலே போர்த்தி இருந்த கிழிந்த வேட்டியை எடுத்தார். அவரைப் பார்த்ததும் சுந்தரராசு, சுப்ரமணியத்தின் இரத்தம் உறைந்து விட்டது. கண்ணில் தீப்பொறி முகம் கறுத்துவிட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்னும் வளரும்…

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.