காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்: 6 பேர் கைது – 1,318 மதுபாட்டிகள் பறிமுதல்!
காய்-கனி லாரியில் கர்நாடக ‘சரக்கு’ கடத்தல்:
6 பேர் கைது – 1,318 மதுபாட்டிகள் பறிமுதல்!
கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து சரக்கு வாகனங்களில் மதுபானங்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த 6 நபர்களை தஞ்சை மாவட்ட போலீஸார் கைது செய்து 1,318 மது பாட்டில்களை கைப்பற்றினர். இது தொடர்பாக ஒரு லாரி உள்பட இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் போலீஸார் சோழன் சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அச் சோதனையில், காருக்குள் அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிப்பது தெரிய வந்தது. இதையடுத்து காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 மி.லி அளவுள்ள 288 மது பாட்டில்கள், 90 மி.லி அளவுள்ள 166 மதுபாட்டில்கள் என மொத்தம் 454 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றி, காரில் இருந்த 3 நபர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மூவரும் முறையே தஞ்சாவூர் கொண்டிராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜா (24), வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த கார்த்தி (27) மற்றும் ஜெயசூரியன் (22) என்பது தெரிய வந்தது. காரில் இருந்த மது பாட்டில்கள் கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து கடத்தி வரப்பட்டவை என்பதும், சில மணி நேரத்திற்கு முன்னர்தான் இம் மதுபாட்டில்களை காய்-கனி லாரியில் கடத்தி வந்த ஒரு கும்பல் வினியோகம் செய்துவிட்டு கும்பகோணம் நோக்கி சென்றுள்ளது என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அம்மூவரையும் போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் ஒரு சில பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்கள் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ரூ110 மதிப்புள்ள மதுபானம் கள்ள மார்க்கெட்டில் ரூ 600க்கு விற்கப்படுகிறது.
இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் கர்நாடக மாநிலம் பெங்களுரிலிருந்து மதுபானங்களை கோழி மற்றும் கால்நடைகளுக்கான தீவனம், காய், கனிகள் மற்றும் பழக்கூடைகள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்களில் சரக்குகளுக்கு இடையே மறைத்துவைத்து கடத்தி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருவது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
பொறையாறு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது தலைமையில் இக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு ‘நெட்வொர்க’காக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு தருணங்களில் குற்றச் சம்பவங்களில் கைதாகி சிறையில் இருக்கும்போது ஒருவருக்கொருவர் பழக்கமாகியுள்ளனர் என்கின்றனர் போலீஸார்.
இதற்கிடையே, தஞ்சாவூர் போலீஸார் கொடுத்த தகவலின்பேரில், மதுபானங்களை கடத்தி வந்த காய்-கனி லாரியை கும்பகோணம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் கருப்பூர் புறவழச்சாலையில் மடக்கிப் பிடித்து லாரியில் இருந்த 26 அட்டைப் பெட்டிகளில் இருந்த (90 மி.லி அளவு கொண்டள) 864 மது பாட்டில்களை கைப்பற்றினர். மேலும், லாரியில் இருந்த கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் (33), காரைக்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகையா (32), லாரி கிளீனரான மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.