திருச்சி விடுதியில் மாணவிகள் சித்திரவதை… போலீசார் விசாரணை..
திருச்சி விடுதியில் மாணவிகள் சித்திரவதை… போலீசார் விசாரணை..
திருச்சி மன்னார்புரம் பகுதியில் இயங்கி வரும் T.M.S.S.S சொந்தம் ஆதரவற்றோர் மற்றும் தற்காலிக மாணவிகள் விடுதியில் நேற்று 20/06/2021 மாலை 7 மணியளவில் 3 மாணவிகள் உட்பட இரண்டு பெண்கள் விடுதியை விட்டு தப்பித்து வெளியே வந்துள்ளனர். வெளியே வந்த மாணவிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த அப்பகுதி மக்களிடம் கண்ணீர் விட்டு அழுது எங்களை எப்படியாவது காப்பாத்துங்க எங்க வீட்டுக்கு எங்கள அனுப்பி வையுங்க என்று காலில் விழுந்து கதறி உள்ளனர்.
உடனே அப்பகுதி மக்கள் என்னவென்று விசாரிக்க ஆரம்பித்த போது எங்கள் வீட்டின் சூழ்நிலை காரணமாக இந்த விடுதியில் தங்க வைத்துள்ளனர் ஆனால் இவர்கள் ஒரு தரமற்ற சுத்தமில்லாத உணவை வழங்குகின்றனர்.
காரணமில்லாமல் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும்போது என்னைப்போன்ற மாணவிகளுக்கு அதற்குரிய பேடு எதுவும் அளிக்காமல், துன்புறுத்துகின்றனர். கேட்டாள் அதெல்லாம் தரமுடியாது என்று மிரட்டுகின்றனர். இதனால் நாங்கள் நான்கு பேரும் அவர்களுக்கு தெரியாமல் தப்பித்து வெளியே வந்து விட்டோம் என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கண்டெண்ட்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் அகிலா விசாரணை தொடங்கினார். மேலும் மாணவிகளை அவர்களது பெற்றோரை வரவைத்து அனுப்பி வைத்துவிட சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று விசாரணை செய்தார்.
இதுபோன்று தொடர்ந்து பல சம்பவங்கள் அந்த விடுதியில் நடப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
ஒரு மாணவிகள் விடுதி நடத்தும் நிர்வாகம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், மேலும் சாப்பாடு போன்றவற்றில் குறைகள் இல்லாமல் வழங்க வேண்டும் ஆனால் இந்த விடுதியில் அடிக்கடி சாப்பாடு சரி இல்லை காலையில் மீந்த சாதத்தை மதியம் தருவது மதியம் வைத்த சாதத்தை லெமன் சாதம் போன்று செய்து தருவது என இருந்து வருகின்றனர். இதனால் மாணவிகள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளனர் என்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களுக்கு பின்னணியில் அதிகாரிகள் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர் என்பது பெரும் வருத்தத்தை அளித்து வருகிறது. காரணம் சம்பந்தப்பட்ட விடுதிகளை ரகசியமாக திடீர் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் முறைப்படி ஆய்வு செய்து உணவு அனைத்தையும் சோதனை செய்து பின்னர் அந்த நிர்வாகம் சரியாக இருக்கிறதா என்று விளக்கம் தருகிற அதிகாரிகள், இதுவரை அப்படி திருச்சியிலுள்ள விடுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தது போல் தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.. அதிகாரிகளின் அலட்சிய போக்குகளே இது மாதிரியான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகிறது.
மாணவிகளின் கண்ணீர் துடைக்குமா மாவட்ட நிர்வாகம்..
–ஜித்தன்