அழகிரி வருவதற்குள் புறப்பட்ட ஸ்டாலின்-தோல்வியடைந்த செல்வியின் முயற்சி!
திமுக தலைவராக இருந்த மு கருணாநிதியின் மகன்களான முக அழகிரி, முக ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே எதிரெதிர் துருவங்களாக காட்சியளிக்கின்றனர். இதில் அழகிரி மேலும் ஒரு படி சென்று பொது வெளியிலேயே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மு க ஸ்டாலினை கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் முக.ஸ்டாலின் பொதுவெளியில் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும் அழகிரியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அழகிரி தனித்துப் போட்டியிடுவார், மாற்றுக் கட்சிக்கு போவார் என்று கூறப்பட்ட நிலையில், இவர்களின் சகோதரியான செல்வி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை பெற்றுத் தந்தார். மேலும் தேர்தலுக்கு முன்பு தொலைபேசி வழியாக இருவரையும் பேச வைக்க முயற்சி எடுத்தார், ஆனாலும் இருவரும் பேசுவதை தவிர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கும்போது, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முக அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் அழகிரி பங்கேற்காமல் அவர் மகனையும், மகளையும் அனுப்பி வைத்தார்.
இப்படி அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இன்னும் முடிவுக்கு வராததால் இரு குடும்பங்களுக்கிடையேயும் சிறிய மனக்கசப்பு இருந்து வருகிறதாம். தொடர்ந்து குடும்ப உறவுகளை அரவணைத்து வரும் செல்வி அண்ணன் தம்பி இருவரையும் சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு முயற்சியாக செல்வியின் பேத்தி திருமணத்திற்கு உறவுகள் அனைத்தையும் அழைத்து நேற்று சென்னையில் கோலாகலமாக நடத்தினார். இவ்வாறு திருமணத்தை நடத்து வதற்கு காட்டிய ஆர்வத்தை விட அண்ணன் தம்பி இருவரையும் சேர்ப்பதில் செல்வி காட்டிய ஆர்வம் சற்று கூடுதலாகவே இருந்தது என்று கூறுகின்றனர் தகவலறிந்த உபிகள்.
இப்படி ஒரு வழியாக அண்ணன் தம்பி இருவரையும் திருமணத்திற்கு வரவழைத்திருக்கிறார் செல்வி. ஆனால் அழகிரி வருவதற்கு முன்பே திருமணத்திற்கு வந்த மு க ஸ்டாலின், அழகிரி வருவதற்கு ஒரு சில மணித் துளிகளுக்கு முன்பே சென்று விட்டாராம். மேலும் செல்வியிடம் பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதாகவும், அதனால் அதிலும் கலந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டாராம். இப்படி செல்வி ஒவ்வொரு முறையும் அண்ணன் தம்பியை இணைக்கும் முயற்சியை செய்துகொண்டே இருக்கிறார், ஆனால் அது ஒவ்வொரு முறையும் தவறி கொண்டே செல்கிறது.