ஜெயலலிதா கூட முதல்வர் ஆகிவிட்டார், ஆனால் திராவிட இயக்க தலைவியாக முடியவில்லை!
திருச்சி பொன்மலை மிசா சாக்ரடீஸ் வேதனைமிக்க பதிவு. (துரை வைகோவிற்கு ஆற்றிய எதிர்வினையின் பதிவு)
இருபத்தி எட்டு ஆண்டு காலம் தலைவர் வைகோவுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். மிசாவில் இருந்த நான் தலைவர் கலைஞர் தலைமையில் திருமணம் செய்தும் அவரின் புலிகள் எதிர்ப்புநிலையினால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தலைவர் வைகோவின் பின்னால் அணிவகுத்து வருகிறேன். எனது உழைப்பு எனது தியாகம் வீணாகிவிட்டதே என்று இப்போது வருந்துகிறேன். பெரியார் சிந்தனைகளால் கட்டிக்காத்த இயக்கம், திராவிட இயக்க கொள்கைக்கு முரணாக செல்லப் போகிறாதா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் இயக்கம் நடைபோடும் என்ற என் கனவு நாசமாகப் போகின்றதா? சீமான் போன்றவர்கள் எல்லாம் என் சகோதரன் வைகோவை இழிவாக பேசியபோது துடித்த நாங்கள் இப்போது துவண்டு போயிருக்கிறோம்.
தந்தைக்காக புதிய அவதாரம் எடுக்கும் தம்பித் துரை வைகோ எங்களின் கனவுகளைத் தகர்த்துவிடாதே. திருமாலின் அவதாரமான ராமனை தமிழர்கள் ஏற்றுக்கொண்டதில்லை பெண்மையை இழிவு படுத்திய இராமனை, இராமன் எத்தனை இராமன் என்று கேட்டுப் பாருங்கள். நாங்க ஈரோடு ராமசாமி வழியில் ஏற்றத்தாழ்வற்ற சாதி மத பேதமற்ற சமூகத்தை அளிக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் கோட்பாடு.
அதற்கு இடையூறாக உள்ள கடவுள் மதங்களை சுக்குநூறாக உடைத்து எறிவோம். திராவிட இயக்க தொண்டனாக வருவதற்கு அண்ணாவையும் பெரியாரையும் முதலில் படியுங்கள். மக்கள் அழைப்பது அடுத்தது. ஜெயலலிதா கூட முதல்வர் ஆகிவிட்டார் ஆனால் திராவிட இயக்கத்தின் தலைவியாக முடியவில்லை. எம்ஜிஆரிடம் 3 முறையும் ஜெயலலிதாவிடம் 4 முறையும் அரசியலில் ஆட்சியைக் கைப்பற்றமுடியாத நிலையிலும் திராவிட இயக்கத்திற்கு வலிமை சேர்த்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இன்றும் திராவிட இயக்கத்தின் தலைவராகக் கொண்டாடப்படுகிறார் என்றால் அந்த நோக்கத்தைத் தம்பி துரை வைகோ அறியவேண்டும்.